சென்னை,

குருமூர்த்தியின் வார்த்தை ஜாலங்கள் போன்ற சிறுபிள்ளைத்தனமான விளையாட்டை அதிமுக பலமுறை பார்த்துள்ளது. குருமூர்த்தி தனது வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்களன்று நடந்தது. அதில், தினகரன் ஆதரவாளர்கள் 5 பேர் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். 4 மாவட்டச் செயலாளர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் பிரமுகர் குருமூர்த்தி தனது டுவிட்டல் பக்கத்தில், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு தினகரன் ஆதரவாளர்கள் 9 பேர் மீது அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது. பலவீனமான தலைவர்களால் (Impotent leaders) தாமதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் இப்போதுதான் தலைவர்களாக செயல்படத் தொடங்கியுள்ளனர். தங்கள் தலைவரின் பாதத்தை எப்படி தொட்டு வணங்குவது என்பதையும், அவர்களுக்காக எப்படி லஞ்சம் வசூலிப்பது என்பதையும் மட்டுமே இதுவரை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்’ என கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
இதையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் ‘‘குருமூர்த்திக்கு முகம் என்பதே கிடையாது. அவர் பயன்படுத்திய தடித்த, கீழ்த்தரமான வார்த்தையை திரும்பப் பெற வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்த அதிமுகவினர் கட்சியை கட்டிக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதிமுக அணிகள் இணைந்தபோது குருமூர்த்தி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறுவது தவறு. அவர் என்ன கிங் மேக்கரா, வானத்தில் இருந்து குதித்தவரா, எதற்கும் ஓர் எல்லையுண்டு. அதிமுக பொங்கினால் என்ன நடக்கும் என்பதை அறிந்து பேச வேண்டும். ஆட்சி சிறப்பாக நடக்கும்போது சூது மனப்பான்மையுடன், விஷமத்தனமான வார்த்தையை குருமூர்த்தி வெளியிடுகிறார். படித்த முட்டாள்கள்தான் இதுபோல பேசுவார்கள். குருமூர்த்தியின் அவதூறு குறித்து அவசியம் ஏற்பட்டால் வழக்கு தொடர்வோம்’’ என்றார்.
இதற்கு உடனடியாக ட்விட்டரில் பதிலளித்துள்ள குருமூர்த்தி, ‘‘எனது ஆலோசனைப்படி பழனிசாமி – ஓபிஎஸ் அரசு செயல்படவில்லை என ஒப்புக்கொண்ட அமைச்சருக்கு நன்றி. நான் எப்போதும் இந்த அரசுக்கு ஆலோசனை கூறியதில்லை. ஒரு சுதந்திரமான எழுத்தாளராக யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அரசியல் கட்சிகள், தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கருத்துகளை தெரிவிப்பேன். பழனிசாமி அரசு பற்றி ‘துக்ளக்’ இதழின் கேள்வி – பதில் பகுதியில் தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். அரசு பற்றியும், பலவீனமான அதிமுக தலைமை பற்றியும் நான் விமர்சிப்பது புதிதல்ல’’ என கூறியுள்ளார்.
தவறான புரிதல்
‘Potential’ என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் ‘திறன் உள்ள’ எனப் பொருள். இதற்கு எதிர்ப்பதமான ஆங்கில வார்த்தைதான் ‘impotent’. முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும் அரசியல் ரீதியாக திறனற்ற தலைவர்கள் என்பதை சொல்வதற்காகவே அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். ஆனால், இதை தவறாக புரிந்துகொண்டு அமைச்சர் என்னை விமர்சித்துள்ளார்.
சர்வாதிகாரம் படைத்த இந்திரா காந்தி காலத்தில் இருந்து எதிர்ப்புகளை சந்தித்தவன் நான். காலில் விழுவதையே அரசியல் கலாச்சாரமாக கொண்டவர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு
இது குறித்து சென்னையில் புதன்கிழமை (இன்று) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்தி தனது வார்த்தையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அவரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். புறம்போக்கு நிலம் என்ற வார்த்தையில் புறம்போக்கு என தனியாக கூறினால் அனைவருக்கும் கோபம் வரும் என்று குறிப்பிட்ட அவர், வார்த்தை ஜாலங்கள் அதிமுகவினருக்கு தெரியும் என்றார். இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான விளையாட்டை அதிமுக பல முறை பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாவடக்கம் தேவை

இதேபோல் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு ஆடிட்டர் குரு மூர்த்திக்கு நாவடக்கம் தேவை என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: