சென்னை,

அதிமுகவின் தலைவர்களை விமர்சித்து ஆர்எஸ்எஸ் பிரமுகர் மூர்த்தி
டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு அதிமுக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினகரன் ஆர் கே நகர் தொகுதியில் ஆளும் அதிமுகவை எதிர்த்து சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றுள்ளார்.   இதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அணியினர் தினகரன் ஆதரவாளர்கள் 6 பேரை அதிமுக-வில் இருந்து நேற்று விலக்கி உள்ளனர்.

இது குறித்து ஆர்எஸ்எஸ் பிரமுகரும் துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் அதிமுக தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில்,

“பலவீனமான மனிதர்கள் ஆறுமாதம் கழித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.   ஆண்மையற்ற தலைவர்கள்.   ஆர் கே நகர் தோல்வியின் அதிர்ச்சியால் தினகரனின் ஆறு ஆதரவாளர்கள் மீது சவுக்கை சொடுக்கி உள்ளனர்”  என பதிந்துள்ளார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார்,

”அதிமுகவைப் பற்றி மிக தரம் தாழ்ந்த நிலையில் குருமூர்த்தி விமர்சித்துள்ளார். இது, மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. விஷமத்தனமானது. இதை  யார் பேசினாலும் அதை அனுமதிக்க முடியாது. அவருக்குப் பின்னால் பாஜக மட்டுமின்றி யார் இருந்தாலும் அதைப் பற்றி கவலையில்லை.

அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் எங்களை தன்மானத்துடன்தான் வளர்த்தெடுத்துள்ளனர். எங்களை பற்றி நாலந்தரமாக விமர்சிப்பவர்களை ஒரு கைபார்ப்போம். அதிமுக தொண்டர்கள் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

நாவடக்கத்துடன் அவர் பேச வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை மட்டுமின்றி அதிமுக தொண்டர்களைக் கூட அவதூறாக விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் கூறிய வார்த்தைகளை அவர் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்வது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்” என கூறியுள்ளார்.

இதற்கு டிவிட்டரில் பதிலளித்துள்ள குருமூர்த்தி,

‘‘எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அரசு எனது ஆலோசனையின் பேரில்தான் செயல்படுகிறது என்ற தவறான கருத்தை போக்கியதற்காக தமிழக அமைச்சருக்கு எனது நன்றி. அவர்கள் அரசை நடத்த, நான் எப்போதுமே ஆலோசனை வழங்கியதில்லை. நான் ஒரு சுதந்திரமான எழுத்தாளர். அரசியல் கட்சிகளும், தலைவர்கள் தங்களுக்குள் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை பற்றி, அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, எனது கருத்துகளை நான் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறேன்.


எடப்பாடி அரசு பற்றி துக்ளக் பத்திரிக்கையின் கேள்வி பதில் பகுதியில் இதேபோன்ற கருத்தை தான் தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளேன். அதிமுக தலைமை எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பது குறித்து நான் கூறிய கருத்துகள் ஒன்றும் புதிதல்ல.


ஊசலாட்டத்தில் இருக்கும் அதிமுக தலைமை, மன்னார்குடி ஆதரவாளர்களுக்கு எதிராக தவணைகளில் நடவடிக்கை எடுக்காமல் விடுத்து, ஒட்டுமொத்த ஆர்.கே.நகரையும் விலைக்கு வாங்க அவர்களை அனுமதித்து, விட்டுவிட்டனர். பணம் கொடுக்கும்போது, அவர்களை காவல்துறையினர் பிடிக்கவில்லை. மாறாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கத் தொடங்கினர்’’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.