ராய்பூர்,
சத்திஸ்கரில் கோசாலையில் பசியால் 50 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டின் பல பகுதிகளில் பசுவை மையமாக வைத்து பலர் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாக மாறி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ராம்கர் தொகுதி எம்.எல்.ஏ., வாக இருப்பவர் கயன் தேவ் அகுஜா பசுவை கடத்தினாலோ அல்லது வதை செய்தாலோ அவர்கள் நிச்சயமாக கொல்லப்படுவார்கள்  என்று நேற்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் சத்திஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தில் மகர்லோட் என்ற இடத்தில் மான் கரன்லால் சாகு என்பவர் மாடுகள் பாதுகாப்பு மையத்தை நடத்தி வந்தார். இங்கு நூற்றுக்கணக்கான மாடுகள் வளர்க்கப்பட்டன.
கடந்த 2 வாரத்தில் இந்த மையத்தில் பட்டினியால் பல மாடுகள் இறந்ததாக தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரசன்னா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரச்னேஸ்சிங் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். அவர்கள் நடத்திய ஆய்வில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இறந்த மாடுகளை பண்ணைக்கு அருகே ஆங்காங்கே புதைத்து இருந்தனர். அங்கிருந்து 37 மாடுகளின் எலும்பு கூடுகள் கைப்பற்றப்பட்டன. அதில் 7 மாடுகள் கடந்த 2 நாளில் இறந்திருந்தன. மாடுகள் தீவனம் இல்லாமல் பசியால் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் பல மாடுகள் உயிர் இழக்கும் நிலையில் பரிதாபமாக இருந்தன. அந்த மாடுகளை மீட்டு வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
மாடுகள் உயிர் இழந்தது தொடர்பாக அதை நடத்தி வந்த மான் கரன்லால் சாகு கைது செய்யப்பட்டார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இது சம்பந்தமாக மேல் விசாரணை நடந்து வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 மாதங்களுக்கு முன்பு அரசு உதவியுடன் நடைபெறும் 3 பாதுகாப்பு மையங்களில் 200 மாடுகள் பட்டினியால் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: