நாகர்கோவில், டிச.24-
கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கும் முயற்சிக்கு எதிராக 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படவுள்ளதாக தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உ.சி. துறைமுகபொறுப்புக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான முதல்கட்ட ஆய்வுப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோவளம் பகுதியில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி, கோவளம், சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவை நகர், கீழமணக்குடி, மேலமணக்குடி, தென்தாமரைகுளம், மயிலாடி, சகாயபுரம், கொட்டாரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஊர் பிரமுகர்கள், பங்குத்தந்தைகள், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுத் தலைவர் சுப. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கோவளத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் சரக்குப் பெட்டக முனையம் அமையும் பட்சத்தில் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் இதனை முழு மூச்சாக எதிர்த்துப் போராட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இத்துறைமுகம் அமைவதால் கடலில் 25 மீட்டர் உயரமும், 10 மீட்டர் அகலமும் கொண்டஅலை தடுப்பான் சுவர்கள் அமைக்கப் பட்டு, ஏறத்தாழ 500 ஏக்கர் பரப்பில் 20 மீட்டர் ஆழத்தில் செயற்கை நிலம் உருவாக்கப்படும்போது, மாவட்டம் முழுவதும் கடுமையான கடலரிப்பும், கரை மாற்றங்களும் நிகழும். இந்த கட்டுமானத்துக்குத் தேவையான கற்களுக்காக இப்பகுதி மலைகளை, குன்றுகளை அழிக்க வேண்டி வரும். கடல்பகுதியை ஆழப்படுத்தும் போது, கழிவுகளால் கடல்நீர் மாசுபடும். மீன்வகைகள் அருகி, மீன்வளம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும். மீனவர்களும், படகுகளும் சுதந்திரமாக இயங்க முடியாது. மீனவர்கள் வாழ்வாதாரமும், இப்பகுதி மக்களின் உணவுப் பாதுகாப்பும், ஊட்டச்சத்துப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். இவைதவிர, நீர் நிலைகளும், நிலத்தடி நீரும்பெரும் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்படும். புதிய சாலைகளும்,ரயில் பாதைகளும் அமைக்கப்படும் போது, விவசாய நிலங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும். காடுகளும், மரங்களும், பயிர்களும் அழியும்.

விவசாய மாவட்டமான கன்னியாகுமரி தன் அந்தஸ்தை, அடையாளத்தை, அழகை, ஆரோக்கியத்தை இழக்கும். இதுபோன்ற பல்வேறு விளைவுகள் ஏற்படும் என்பதால் சரக்குப் பெட்டக முனையத் திட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத் தில் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: