தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கைகளை முறையிடச் சென்னை வந்த சாலைப்பணியளர்களை காவல்துறையை வைத்து கைது செய்து அரசு அராஜகமாக நடந்து கொண்டதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  சாலைப்பணியாளர்கள் தங்கள் ஜீவாதார கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி கடந்த 12 ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். அரசாங்கங்களும் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் புறந்தள்ளி வருகின்றன. 2002ல் உலகவங்கியின் ஆலொசனையின் பேரில் சாலைப் பராமரிப்பு பணிகளைத் தனியாரிடம் ஒப்படைப்பது என்ற தமிழக அரசின் முடிவினால் பத்தாயிரம் சாலைப்பணியாளர்கள் பணி நீக்கம்செய்யப்பட்டனர். இதனால் மன உளைச்சலுக்கும் வேலையின்மை நிலைக்கும் ஆளானஅவர்களில் சிலர் மனநோயாளியாகினர், 86 சாலைப்பணியாளர்கள் உயிரிழந்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் பிற தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் வற்புறுத்தலினாலும் மீண்டும் 41மாதங்கள் கழித்து வேலைநீக்கம் செய்த அ.தி.மு.க. அரசே மீண்டும் அவர்களைப் பணியில் அமர்த்திடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 41 மாதங்கள் வேலை இல்லாமல் வாழ்வாதாரங்களை இழந்து கடன் வாங்கி குடும்பத்தை வறுமை நிலையில் நடத்தி வந்த சாலைப்பணியாளர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களின் 41 மாத பணி நீக்க காலத்தைபணிக்காலமாக கருதி அவர்களுக்கு 41 மாத ஊதியத்தை வழங்கிட அரசுக்குப்பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு அவை இன்றுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

மேலும் அவர்களுக்கு அரசின் நேரடி நிதியிலிருந்து கருகூலம் மூலம் ஊதியம்வழங்கிட வேண்டும், கல்வித்தகுதியுள்ள சாலைப்பணியாளர்களுக்கு காலியாக உள்ளசாலை ஆய்வாளர் நிலை-2 பணியிடங்களில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும், பணிநீக்ககாலத்தில் கூட்டுறவு கடனுக்கான வட்டி, அபராத வட்டியினை தள்ளுபடி செய்திடவேண்டும், சாலை ஆய்வாளர் பதவி உயர்வு 50 சதவீதமாக வழங்கிட வேண்டும், இலவசபஸ் பாஸ், சீருடைப்படி மற்றும் ஆபத்துப்படி போன்றவை வழங்கிட வேண்டும் மற்றும்காலியாக உள்ள 4000 க்கும் மேற்படி சாலைப்பணியாளர் காலியிடங்களை நிரப்பிடவேண்டும் போன்ற கோரிக்கைகளும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இவற்றைநிறைவேற்றிடக் கோரி முதல்வரை நேரில் சந்தித்து முறையிட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சென்னை நோக்கி வந்துள்ளனர்.

தங்கள் நீண்டகால கோரிக்கைளை கூறவருபவர்களைக் குறைந்தபட்சம் உயரதிகாரிகளைக் கொண்டாவது பேச முன்வராமல் காவல்துறையைக்கொண்டு கைது செய்வது, சிறையிலடைப்பது போன்ற அடக்குமுறை அதிகாரத்தைச் சுழற்றுவதும் அரசுக்கு அழகல்ல. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே தமிழக முதல்வர் உடனடியாக காவல்துறை அடக்குமுறைகளைக் கைவிட ஆணையிட்டு சாலைப்பணியாளர் சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண முன்வரவேண்டும் என்று தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.