தீக்கதிர்

ரூ.6000 லஞ்சம் வாங்கிய உதவியாளருக்கு 7 ஆண்டு சிறை

அரியலூர்,

ரூ.6000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஒ. அலுவலக உதவியாளருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம்  வி.ஏ.ஒ அலுவலகத்தில்  உதவியாளராக பணிபுரிந்த  குமார் கடந்த 2012 ஆம் ஆண்டு திருச்சி ஆயுதப்படை தலைமைக் காவலர் எட்வின் அமல்ராஜ் என்பவரின் மனைவி ராணியின் ஆசிரியர் பணியை நிரந்திரம் செய்ய ரூ.6000 லஞ்சமாக கேட்டிருக்கிறார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத எட்வின் அமல்ராஜ்,  இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்களிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து காவலர்களின் உத்தரவின்படி எட்வின் ரசாயனம் தடவிய ரூ. 6,000 பணத்தை உதவியாளர் குமாரிடம் கொடுத்தார். பணத்தை வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு காவலர்கள் குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை அரியலூர் முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ரவி, உதவியாளர் குமாருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 12 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.