சென்னை,

பத்திரப்பதிவு துறையில் நடக்கும் ஊழல்கள் குறித்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பத்திரப்பதிவு துறைத்தலைவர் தாக்கல் செய்த பதில் மனுவில் போதிய விளக்கம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பத்திரப்பதிவு துறைக்கு எதிராக பூபதி என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதி கிருபாகரன், கடந்த 10 ஆண்டுகளில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகள், அதன் வாயிலாக பறிமுதல் செய்யப்பட்ட பணம், வழக்குகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என ஏற்கனெவே உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு தமிழக பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன், சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ள 578 சார்பதிவாளர் அலுவலகங்களில், 155 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதில் சுமார் ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இது சம்பந்தமாக 77 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 2 பேர் தண்டிக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இடைத் தரகர்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என கூறி இருந்தனர்.

இந்த பதிலை ஏற்க மறுத்த நீதிபதி கிருபாகரன், 10 வருடத்தில் இவ்வளவு குறைவாக தொகை மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதா என கேள்வி எழுப்பினார். மேலும் அடுத்த விசாரணையில் உரிய பதிலை அளிக்காவிட்டால், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டிவரும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: