உலக சுகாதாரத்திற்கு புற்று நோய் பெரும் சவாலாக உள்ளது. இந்த நோயை எளிதாகக் குணப்படுத்துவது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

சில விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் புற்றுநோய் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. “ புற்றுநோயைக் குணப்படுத்த தற்போதுள்ள நவீன சிகிச்சைகள் 2017’’ என்ற தலைப்பில் இதில் புற்றுநோயை கண்டறியவும் ஆரம்ப நிலையில் இருந்தால் குணப்படுத்தவும் தற்போதுள்ள மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மருத்துவர்கள் மருத்துவ மாணவர்கள் அடங்கிய குழு விவாதமும் நடைபெற்றது.

புற்றுநோய் தடுப்பு, சிகிச்சை, நோயாளிகளின் நலன், புற்றுநோய் கட்டி தொடர்பான உயிரியல் ஆய்வு குறித்து இந்தத் துறையில் உள்ள பிரபல மருத்துவர்கள் உரையாற்றினர். புற்றுநோய் குறித்த புதிய ஆய்வுகள், புதிய மருந்துகளுக்கான அனுமதி, சிகிச்சை முறையில் மாற்றம் தொடர்பாகவும் 150க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் விவாதித்தனர். புற்றுநோயைக் குணப்படுத்த இம்யூனோதெரபி என்ற புதிய சிகிச்சை முறை தற்போது உலகில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளதாகவும் இந்தச் சிகிச்சை முறை அனைத்து வகையான புற்றுநோயை குணப்படுத்தப் பயன்படுத்தமுடியும் என்றும் கருத்தரங்கை ஒருங்கிணைத்த பேராசிரியர் அனிதா ரமேஷ் கூறினார்.

மார்பக புற்றுநோய்க்கு பல சிறந்த மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இலக்கு நோக்கிய சிகிச்சையால் இந்த நோயைக் குணப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய மருந்துகளால் நுரையீரல் புற்றுநோயாளிகளின் ஆயுள் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் மலக்குடலில் புற்றுநோயை எதிர்கொள்ளும் நோயாளிகள் கடைசி கட்டத்தில் இருந்தாலும் அவர்கள் 36 மாதங்கள் வரை உயிருடன் இருக்க புதிய மருந்துகள் வந்திருப்பதாகவும் இந்தக் கருத்தரங்கில் பேசியவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.