துணை ராணுவ படைவீரர்கள், பறக்கும் படை, மத்திய அரசின் பார்வையாளர்கள், சிறப்பு அதிகாரிகள், கண்காணிப்பு கேமரா, வெளி வாகனங்கள் நுழையத் தடை, மாலை 5 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என அடுக்கடுக்கான கெடுபிடிகள் ஒருபுறம். மறுபுறம், ஒரே நாளில் 150 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா, ஒரு ஓட்டுக்கு ரூ. 6 ஆயிரம் என்று கத்தை கத்தையாக பணம் விநியோகம், மத்திய பாஜகவின் ஆதரவோடும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை துணையோடும் தொகுதியில் அதிமுகவின் அத்துமீறல்கள் நடிகர் விஷால் வேட்பு மனு நிராகரிப்பு என ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை நடே உற்று நோக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெற்றது என்ற காரணத்திற்காக கடந்த முறை இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளில் 4-வது முறையாக (2015 இடைத் தேர்தல், 2016 பொதுத் தேர்தல், 2017 ஏப்ரல் இடைத்தேர்தல் ரத்து) இந்தத் தேர்தலை சந்திக்கின்றனர். பணப்பட்டுவாடா புகாரால் கடந்த முறை தேர்தல் ரத்து செய்யப்பட்டு 7 மாதத்திற்குப் பின்னர் மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது.

ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2011 தேர்தலில் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயலலிதா, 2014ல் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பால் பதவியிழந்தார். அந்த வழக்கின் மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டதும், ஆர். கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்காக அந்த தொகுதியின் உறுப்பினராக இருந்த வெற்றிவேல் பதவிவிலகினார். பின்னர் 2016 – ல் நடந்த பொதுத் தேர்தலிலும் இதே தொகுதியைத்தான் அவர் தேர்வு செய்தார். அந்த முறையும் வெற்றிபெற்றார். பின்னர், அவர் மரணமடைந்தால் இரண்டாவது முறையாக இடைத் தேர்தலை சந்திக்கிறது இத் தொகுதி.

1996 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி மீது மக்கள் கடுங்கோபத்தில் இருந்தனர். அந்த முறை அதிமுக வேட்பாளர் ரவீந்திரனை 43,081 வாக்கு வித்தியாசத்தில் ஆர்கே நகர் மக்கள் வீழ்த்தினர். திமுக வேட்பாளர் எஸ்.பி.சற்குணம் வெற்றிபெற்றார். கடந்த 40 ஆண்டுகளில் 11 முறை தேர்தலை சந்தித்துள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் தற்போது ஆளும் கட்சிக்கு எதிராக பெரும் கோபவேச அலை உருவாகியுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு எந்த கோபத்தை மக்கள் வெளிக் காட்டினார்களோ அதேபோன்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. ஒரு ஓட்டுக்கு ரூ.6ஆயிரம் தந்தபோதும் மதுசூதனன் வெற்றிபெறமுடியாது என்று ஆளும் கட்சியினரே கூறுகிறார்கள்.

இத்தொகுதி மக்களைச் சந்திக்கும் போது,”ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை எங்கள் பகுதியின் பிரச்சனைகள் ஓரளவு தீர்வு காணப்பட்டது. அவரது மறைவுக்குப் பிறகு, எங்களின் கோரிக்கைகள் க ண்டுகொள்ளப்படாமல் உள்ளது. இதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் ஓட்டு கேட்கும்போது, முதியோர் இல்லம் அமைத்துக் கொடுப்பேன், சமூக நலக் கூடம் கட்டிக்கொடுப்பேன், தெருவிளக்குகளை அதிகப்படுத்துவேன் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்தனர். வெற்றி பெற்ற பிறகு, இந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை” என்றனர்.
குடிசை வாழ் மக்கள் அதிகம் வசிக்கும் இந்தத் தொகுதியில், அந்த மக்களுக்குச் சொந்தமாக குடியிருப்பு கட்டிக்கொடுப்போம் என்று அதிமுகவினர் பல முறை வாக்குறுதி அளித்தபோதும் அதற்கான முயற்சியே எடுக்காதது மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்கமுடிந்தது.

ரயில் பாதை ஓரங்களில் உள்ள குடிசைகளில் வசிக்கும் பெண்கள் மழைக் காலங்களில் இயற்கை உபாதையைக் கழிக்க ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் அவதிப்படுவதைச் சொல்லி மாளாது. அந்த அளவுக்கு இந்தத் தொகுதியில் பொதுக் கழிப்பறைகளின் தேவை உள்ளது. அதைக் கட்டிக்கொடுக்க மாநகராட்சியும் மாநில அரசு நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதாள சாக்கடை திட்டப்பணிகளும் பாதியிலேயே நிற்பதால், கழிவு நீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. நடப்பதற்குக்கூட இடமில்லை. குடி தண்ணீரில் சாக்கடை கலந்துவிடுகிறது. பள்ளிகளுக்கு அருகாமையிலேயே அரசின் மதுபானக் கடைகள் இருப்பதால் ஆளும் கட்சி மீதும் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் மீதும் தொகுதி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பெரும்பாலான இளைஞர்கள் ஆளும் கட்சிக்கு எதிரான மாற்றத்தையே விரும்புகின்றனர். அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கவில்லை என்கிற கோபம் முழுவதும் ஆளும் கட்சிக்கு எதிராகத் திரும்புவதால் அதிமுகவின் டெபாசிட் பறிபோனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  • பயிற்சி மாணவர்கள்:
    அஜய் சர்மா, விக்னேஷ், நிதிதேவன், அன்பரசன், விக்னேஷ், சுரேந்தர், மரியபேப்டீஸ்

Leave a Reply

You must be logged in to post a comment.