1992 டிச.18 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் (தீர்மானம் எண் 47/135) தேச அல்லது இன, மத மற்றும் மொழிச் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கான பிரகடனம் அறிவிக்கப்பட்டது. இந்தப் பிரகடனத்தின் முகவுரையில் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் அவர்கள் வசிக்கின்ற நாடுகளின் அரசியல் மற்றும் ஸ்திர நிலைமைக்கு ஏதுவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான நாடுகளில் பெரும்பான்மை மக்களிடம் இருந்து மாறுபட்ட அடையாளங்களைக் கொண்ட மொழி, மத, இனச் சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். கடந்த கால கட்டங்களில் மற்ற பகுதி மக்களின் உரிமைகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம்கூட சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்படவில்லை. பல்வேறு நாடுகளில் சிறுபான்மை மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டதால் பதற்றங்கள் உருவாகி அரசியல் பொருளாதார, சமூகக் கட்டுமானங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. இதனால் அந்த நாடுகளின் பிரதேச ஒருமைப்பாடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் 1947இல் சர்வதேச சங்கம் (League of nations) சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பை ஏற்படுத்தியது. இதற்கு மாற்றாகத்தான் ஐநா சபையின் உலக மனித உரிமைகள் பிரகடனம் வந்தது.

இந்த அமைப்புகள் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை. எனவே சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்ப தெற்கென்று சிறப்பு உரிமைகள் மனித உரிமை அமைப்புகளில் ஏற்படுத்தப்பட்டது. பல்வேறு சர்வதேச அமைப்புகளில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாகுபாடு தடைசெய்யப்பட்டுள்ளது. ஐ.நா சபை அட்டவணை 1945(பிரிவு 1 மற்றும் 55), 1948 (பிரிவு 2) அனைவருக்குமான மனித உரிமை பிரகடனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் பாகுபாடுகளுக்கு எதிரான பிரிவுகள் உள்ளன.

மேலும் சர்வதேச தொழிலாளர் சங்கம் (ILO) ஐக்கிய நாடுகள் கல்வி சமூக மற்றும் கலாச்சார நிறுவனம் (UNESCO) ஆகிய சிறப்பு அமைப்புகளின் அறிக்கைகளிலும் இந்த உரிமைகள் வலியுறுத்தப்பட்டு ள்ளன. இவை மட்டுமல்ல பல்வேறு பிரதேச மனித உரிமை பிரகடனங்களிலும் பாகுபாடுகளுக்கு எதிரான பிரிவுகள் உள்ளன. பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சிறுபான்மையினரின் சிறப்பு உரிமைகள் பற்றி குறிப்பிடுகின்றன. அவை குறிப்பாக

1. இனப்படுகொலை குற்றத் தண்டனை மற்றும் தடுப்பு மாநாடு (பிரிவு II)

2. பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச அறிக்கை (பிரிவு 13)

3. குடிமை மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச அறிக்கை (பிரிவு 13)

4. அனைத்துவகை இன ஒடுக்குமுறை ஒழிப்பு மாநாடு (பிரிவு 2 மற்றும் 4).

5. குழந்தை உரிமைகளுக்கான மாநாடு (பிரிவு 30)

6. கல்வியில் பாகுபாட்டிற்கு எதிரான யுனெஸ்கோ மாநாடு (பிரிவு 5)

7. சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கான ஐ.நா பிரகடனம்

8. இன மற்றும் இன ஒதுக்கல் பற்றிய யுனெஸ்கோ பிரகடனம் (பிரிவு 5)

இதுபோன்ற பல பிராந்திய அளவிலான சிறுபான்மை மக்களின் சிறப்பு உரிமைகளுக்கான அமைப்புகள் உள்ளன.  பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டரீதியாக கட்டுப்படுத்தக்கூடிய ஷரத்தாக குடிமை மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச அறிக்கையினது 27ஆவது பிரிவு உள்ளது. சிறுபான்மை மக்கள் தங்களது சொந்த கலாச்சாரத்தை நுகரவும் தங்களது சொந்த மதத்தை கடைப்பிடிக்கவும் தங்களது சொந்த மொழியை பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று சி பிரிவு 27 கூறுகிறது.

சிறுபான்மை மக்கள் இந்த உரிமைகளைப் பயன்படுத்த ஒரு நாடு குறிப்பிட்ட மக்களை சிறுபான்மையினர் என்று அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சி பிரிவு 27 கூறுகிறது. ஐ.நா நிறுவனம் தனியான ஒரு அறிக்கை மூலம் சிறுபான்மை மக்களின் சிறப்பு உரிமைகள் பற்றி கூறியுள்ள ஒரே அறிக்கை 1992 டிச.18இல் ஐ.நா பொதுச்சபை ஏற்றுக்கொண்ட தீர்மானம் ஆகும். (47/135)

பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள்:
1. சிறுபான்மை மக்களின் தேச அல்லது இன, கலாச்சார, மத, மொழி அடையாளத்தை பாதுகாப்பதுடன் அந்த அடையாளத்தை மேம்படுத்தவும் ஆன நிலைமை களை அரசுகள் உருவாக்க வேண்டும்.

2. சிறுபான்மை மக்கள் தனிப்பட்ட முறையிலும் பொதுவாழ்விலும் எந்த வகையான பாகுபாடும் குறுக்கீடும் இன்றி சுதந்திரமாக தங்கள் சொந்த கலாச்சாரத்தை பின்பற்றவும், தங்கள் சொந்த மதத்தைக்கடைப்பிடிக்கவும் பிரச்சாரம் செய்யவும் தங்கள் சொந்த மொழியைப் பயன்படுத்தவும் உரிமை பெற்றவர்கள் ஆவர்.

3. தேச அளவிலும் தேவைப்படும் பொழுது பிராந்திய அளவிலும் சிறுபான்மை மக்கள் தாங்கள் சம்பந்தப் பட்ட முடிவுகளில் வலுவாகத் தலையிடுவதற்கு உரிமை உண்டு (தேசத்தில் உள்ள சட்டத்திற்குப் பொருத்தமான முறையில்)

4. சிறுபான்மை மக்கள் தங்களுக்கான அமைப்புகளை உருவாக்கவும் பராமரிக்கவும் உரிமை உண்டு.

5. தங்கள் பிரிவினைச் சேர்ந்த மற்றும் இதர சிறுபான்மை யினருடன் எல்லைகளுக்கு அப்பாற்பட்டும் தேச, இன, மத மற்றும் மொழி ரீதியில் உறவு உள்ளவருடனும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் சுதந்திரமான அமைதியான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் பராமரிக்கவும் உரிமை உண்டு.

6. சிறுபான்மையினர் தங்கள் வரலாறு, மரபுகள், மொழி மற்றும் கலாச்சாரம் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள கல்வித்துறையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த சமுதாயம் பற்றி அறிந்து கொள்வதற்கும் சிறுபான்மை மக்களுக்கு உரிய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.

7. தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் சிறுபான்மை மக்கள் பங்கேற்க உரிய நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

8. சிறுபான்மை மக்களின் சட்டப்பூர்வ நலன்களுக்கு உரிய மதிப்பளிக்கும் வகையில் தேசிய கொள்கை களும் திட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும்.

9. ஏற்கனவே உள்ள மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கு இந்தப் பிரகடனம் எந்த வகையிலும் ஊறு விளைவிப்பதாக அமையக்கூடாது.

10. ஐ.நா சபையின் அனைத்து நிறுவனங்களும் இந்தப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளையும் கோட்பாடுகளையும் தங்கள் தளங்களில் முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவர உறுதியாகச் செயல்பட வேண்டும்.

அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:
1. சிறுபான்மை மக்கள் தங்கள் தாய்மொழியை கற்கவும் தாய்மொழியில் தகவல் பெறும் உரிமையும் வழங்கப்படவேண்டும்.

2. தங்களது வரலாறு, மொழி மற்றும் கலாச்சாரத்தையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் அறிந்துகொள்ள ஊக்குவிக்க வேண்டும்.

3. தங்களது பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

4. ஐ.நா பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளை மேம்படுத்த வேண்டும். 1993இல் மனித உரிமைக்கான ஹைகமிஷனர் பதவி ஏற்படுத்தப்பட்டது. சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு இவருக்கு கொடுக்கப்பட்டது. குறிப்பாக ஐ.நா பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோட்பாடுகளை அமல்படுத்துவது, சம்பந்தப்பட்ட அரசுகளுடன் இதுகுறித்து விவாதிப்பது இவரது கடமை ஆகும்.

1995இல் சிறுபான்மை துணை ஆணையத்திற்கு 5 பேர் கொண்ட செயலகம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் செயலகம் பிரதானமாக இரண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கானது. 1. அரசுகள், சிறுபான்மையினர் நிபுணர்களைச் சந்தித்துப்பேசி சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளையும் தீர்வுகளையும் அடையாளம் காண்பது. 2. மேற்படி பிரச்சனைகளின் தீர்வுகளை அமல்படுத்துவது.

செயலகம் நாளடைவில் சிறுபான்மை மக்கள் பாது காப்பில் ஐ.நா. சபையின் நடவடிக்கைகளில் பிரதான பங்கு வகிக்கத்துவங்கியது. அது முன்வைத்த பல சிபாரிசுகள் உலகெங்கும் பெரிதும் கவனத்தை ஈர்த்தன. செயலகம் நடத்திய சிறுபான்மை மக்கள் பாதுகாப்பு தொடர்பான கூட்டங்களில் அரசு பிரதிநிதிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் அரசு சாரா நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

யார் சிறுபான்மையினர்?
சிறுபான்மை என்றால் என்ன? இதனைத் தீர்மானிப்பது யார்? சிறுபான்மை உரிமைகளின் பயனாளிகள் யார்? ஐ.நா. துணை ஆணையத்தின் நிபுணர்கள் நடத்திய பல ஆய்வுகளிலும் விவாதங்களிலும் இந்தக் கேள்விகள் விவாதிக்கப்பட்டு தீர்வுகளும் முன்வைக்கப்பட்டது. என்றாலும் சிறுபான்மை என்பதற்கு சர்வதேச அளவில் ஒரு வரையறை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. என்றாலும் இது சிறுபான்மை குறித்த செயலகத்தின் செயல்பாட்டுக்கு எந்தத் தடையையும் ஏற்படுத்தவில்லை என்பதோடு மேம்பாட்டு நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்படவில்லை.

ஒரு வரையறை ஏற்றுக் கொள்ளப்படுவதில் என்ன சிக்கல்? சிறுபான்மை மக்கள் வேறுபட்ட சூழல்களில் வசிக்கின்றனர். சிலர் தெளிவாக வரையறை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கின்றனர், சிலர் பரவலாக வசிக்கின்றனர். சிலர் நீண்டகாலம் கூட்டாக வாழ்ந்து வருகின்றனர். சிலர் வெறும் உணர்வுகளுடன் மட்டும் உள்ளனர். சிலபகுதிகளில் சுயாட்சி பெற்றுள்ளனர். சில பகுதிகளில் இந்த நிலைமை இல்லை. பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனைகளிலும் வேறுபாடுகள் உள்ளன.

சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை இல்லை என்றாலும் சிறுபான்மை மக்களின் பல்வேறு தனிப்பண்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பெரும்பான்மை மத, மொழி, இன மக்களிடம் இருந்து வேறுபட்ட மத, மொழி, இன அடையாளங்களுடன் வசிக்கும் பகுதியினரே சிறுபான்மை மக்கள் என்பது பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இடம்பெயர் தொழிலாளர்கள், அகதிகள், நாடற்றவர்கள், குடியுரிமை இல்லாதவர்களை சிறுபான்மை மக்களை ஒத்த சூழ்நிலைமைகளில் உள்ளனர். இவர்களைப் பாதுகாப்பதற்கு சர்வதேச சட்டங்கள் தனியாக உள்ளன.

புகார் செய்வது எப்படி?
குறிப்பாக சிறுபான்மை உரிமைகள் உள்ளிட்டு மனித உரிமைகள் மீறலுக்கு எதிராக ஐ.நா சபைக்கு ஒரு நபரோ, ஒரு குழுவினரோ, ஒரு அரசோ புகார் அளிக்க பல்வேறு நடைமுறைகள் உள்ளன.

– நடைமுறை 1503-இன் படி பாதிக்கப்பட்ட தனிநபரோ குழுவினரோ அரசு சாரா நிறுவனங்களோ துணை ஆணையத்திற்குப் புகார் அளிக்கலாம்.

– குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச அறிக்கையின்படி ஒரு அரசு மற்றொரு அரசுக்கு எதிராக புகார் அளிக்கலாம்.

– இன ஒதுக்கல் ஒழிப்பு மாநாட்டு விதிகள்படி பாதிக்கப்படும் தனிநபரோ, குழுவினரோ புகார் அளிக்கலாம். விதி 11இன் படி ஒரு அரசு இன்னொரு அரசுக்கு எதிராகப் புகார் அளிக்கலாம்.

சர்வதேச தொழிலாளர் சங்கம், யுனெஸ்கோ போன்ற அமைப்புகளுக்கும் புகார் அளிப்பதற்கு விதிமுறைகள் உள்ளன. தேசிய இன, மத பதற்ற நிலைமைகள் மோதலாக வளர்வதை தடுப்பதற்கான அமைப்புகளும் உள்ளன. மனித உரிமைகளுக்கான ஹைகமிஷனர் மனித உரிமைகள் மீறலுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள பொறுப்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன ஒதுக்கல் ஒழிப்பு கமிட்டியும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. அரசுசாரா நிறுவனங்கள் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இவை சமரச முயற்சிகளில் ஈடுபடுவதுடன் பொதுக்கருத்தினை உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபடுகின்றன.

இந்தியாவில்:
இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 20 முதல் 30, 350ஏ, 350பி-யில் சிறுபான்மை மக்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்தமதத்தினர், பார்சிகள், ஜைனர்கள் ஆகியோரை மதச் சிறுபான்மையோர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. (சிறுபான்மையினர் சட்டப்படியான தேசிய ஆணையம் பிரிவுஊ உட்பிரிவு2) 1978 ஜனதா ஆட்சியின் போது (ஜன 12) சிறுபான்மையோர் ஆணையம் அமைக்கப்பட்டது. பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் இந்த ஆணையம் கலைக்கப்பட்டு உயர் அதிகாரக்குழு ஒன்று அமைக்கப்பட்டு அது பின் கோபால்சிங் குழு என அறிவிக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கை 1983 ஜூன் 14இல் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. வி.பி.சிங் பிரதமரான போது (1987) இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

2005 மார்ச் 9ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பிரதமரின் உயர்மட்டக்குழு ஒன்றை நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் நியமித்தது. இந்தக்குழு முஸ்லிம் சிறுபான்மையோரின் நிலையைப் பற்றி மட்டுமே ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டது. இந்த அறிக்கை முஸ்லிம் சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை அறிந்து கொள்வதற்காக மிக அடிப்படையான ஒரு ஆவணமாக உள்ளது. மதம் மற்றும் மொழி சிறுபான்மையோருக்கான தேசிய ஆணையம் (ரங்கநாத்மிஸ்ரா ஆணையம்) இந்திய அரசினால் 2004 அக்டோபர் 29இல் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது அறிக்கையினை 2007 மே 21 அன்று மத்திய அரசு சமர்ப்பித்தது. இந்த ஆணையத்தின் முக்கிய சிபாரிசுகளாவன:

1. அரசு வேலை வாய்ப்புகளிலும் கல்வி நிலையங்களிலும் முஸ்லீம்களுக்கு 10 சதம் மற்ற சிறுபான்மை யோருக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

2. இதர பிற்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீதம் ஒதுக்கீட்டில் சிறுபான்மையோருக்கு 8.4 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

3. மதம் மாறிய தலித் மக்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும். இந்த சிபாரிசுகளை இதுவரை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பது துரதிருஷ்டமே.

கட்டுரையாளர்: நெல்லை மாவட்டத் தலைவர், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு

Leave A Reply

%d bloggers like this: