புதுதில்லி;
‘எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகியவற்றுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசிக்கும்’ என்று பீகார் துணை முதல்வரும், ஜிஎஸ்டி பிரச்சனைகளைக் கண்காணிக்கும் அமைச்சர்கள் குழுவின் தலைவருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, சுஷில் குமார் மோடி, மேலும் தெரிவித்திருப்பதாவது:“மின்சாரம், ரியல் எஸ்டேட், ஸ்டாம்ப் வரி மற்றும் பெட்ரோலியம் பொருள்கள் ஆகிய அனைத்தும் விரைவில் ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டுவரப்படும். இந்த நடவடிக்கை எப்போது மேற்கொள்ளப்படும் என்று வரையறுத்துக் கூற முடியாது. அவ்வாறு பெட்ரோலியம் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டால் அப்பொருள்களின் மூலமான வருவாயில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கக் கூடுதல் வரி விதிக்கப்படும். வரி வருவாய் மேம்பட்டவுடன் ஜிஎஸ்டி வரி விகிதங்களும் படிப்படியாகக் குறைக்கப்படும்.

மற்ற பொருட்களைப் பொறுத்தவரை, அதிகபட்ச வரி வரம்பான 28 சதவிகிதத்தை 25 சதவிகிதமாகக் குறைக்க வழிவகை செய்யப்படும். மேலும், 12 சதவிகித வரி வரம்பையும் 18 சதவிகித வரி வரம்பையும் ஒன்றிணைத்து பொதுவான ஒரு வரி விகிதம் நிர்ணயம் செய்யப்படும். ஜிஎஸ்டி நெட்வொர்க் அம்சங்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் சிறப்பாகவே வடிவமைத்துள்ளது. ஆனால், ஜிஎஸ்டி நெட்வொர்க் அம்சங்களில் வெறும் 30 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: