புதுதில்லி;
ரொக்கமில்லாப் பொருளாதாரத்தை ஊக்கும் வகையிலும், சில்லரை விற்பனையாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்றும் ரூ. 2 ஆயிரம் வரையிலான வணிகத் தள்ளுபடிக் கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மோடி அரசு தெரிவித்துள்ளது.சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட சில்லரை விற்பனை மையங்களில் வாடிக்கையாளர்கள் ரூ. 1,000 முதல் ரூ. 2 ஆயிரம் வரையில் பெருமளவு பொருட்களை வாங்குவார்கள்; மொத்தப் பரிவர்த்தனை மதிப்பில் மேற்கூறிய தள்ளுபடி தொகைகளுக்கான பரிவர்த்தனைகள் 15 முதல் 20 சதவிகிதம் வரை மட்டுமே இருக்கும்.

எனவே, வணிகர்கள் பயன்பெறும் வகையிலும், ரொக்கமில்லாப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் ரூ. 2 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கான வணிகத் தள்ளுபடிக் கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

2016-ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு வணிகத் தள்ளுபடிக் கட்டணத்தை ரூ.1,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 0.25 சதவிகிதமாகவும், ரூ.1,000 முதல் ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 0.50 சதவிகிதமாகவும் மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்தது.முன்னதாக, இந்த வணிக தள்ளுபடிக் கட்டணத்தைப் பரிவர்த்தனை ஒன்றுக்கு 0.40 சதவிகிதமாக நிர்ணயிக்க வேண்டும் என்று இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்திருந்தது.தற்போது ரூ. 2 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைக் கட்டணம் ரத்து உத்தரவானது, ஜனவரி 1-ஆம் தேதி முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குச் செயல்பாட்டில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.