கடலூர்;
மத்திய அரசு பதவிகளில் இடஒதுக்கீடு அமலாகவில்லை என
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

விருத்தாசலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. கடலூர் மாவட்ட மாநாடு விருத்தாசலத்தில் டிசம்பர் 16 முதல் 18 வரை நடைபெறுகிறது, இதில் அடுத்த மூன்றாண்டு களுக்கு மக்களுக்கான இயக்கங் களை திட்டமிடுவது குறித்து விவாதிப்போம். அதேபோல் மாநில மாநாடு தூத்துக்குடியில் பிப்ரவரி
17 முதல் 20 வரை நடைபெறுகிறது. அகில இந்திய மாநாடு ஐதராபாத்தில் ஏப்ரல் மாதம் நடை பெறுகிறது.

மண்டல் கமிஷன் இடஒதுக்கீடு அடிப்படையில் ஓபிசி மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு மத்திய அரசின் உயர் பதவிகளில் அமலாகவில்லை. மத்திய அரசின் தலைமை செயலகத்திலேயே துறை செயலாளர் பதவியில் கூட இது அமலாகவில்லை. கீழிருந்து மேல் வரை அனைத்து மட்டத்திலும் இட ஒதுக்கீடு அமலாக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலி யுறுத்துகிறது. கிரீமிலேயரில் போது மானவர்கள் இல்லை என்றால் அதனை பொது கோட்டாவிற்கு தள்ளிவிடக்கூடாது.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட நடவடிக்கைகளில் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் போது பாஜக அரசு மதப் பிரச்சனையை கிளப்பி விட்டு திசைதிருப்புகிறது. தமிழக அரசு மத்திய அரசின் அடிமை போல் செயல்படுகிறது.

ஒக்கி புயலால் கடலூர் மாவட்டத்தில் 11 மீனவர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் அனைவரும் கிடைக்கும் வரை தேடும் பணி தொடர வேண்டும். அவர்களின் குடும்பத்திற்கு கேரள அரசு வழங்குவதுபோல் ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். உடல் காணாமல் போனால் 7 ஆண்டுகளுக்கு பிறகுதான் நிவாரணம் வழங்குவது என்ற சட்டத்தினை திருத்தி 1 மாதத்திற்குள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கன்னியாகுமரியில் வாழை, தென்னை, ரப்பர் மரங்கள் பெரிய அளவிற்கு சேதமடைந்துள் ளன. அவைகளை ஹெக்டேர் கணக்கில் கணக்கிடுவதாக தெரிகிறது, சேதமடைந்த மரத்தின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

விரிவுரையாளர் நியமன முறைகேடு
அதேபோல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்தில் முறை கேடு நடந்துள்ளது. ரூ.50 கோடி வரை கையூட்டு பெறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். மாநில ஆளுநர் விழாக்களுக்கு செல்லலாம், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். அதைவிடுத்து மாவட்டத்திற்கு சென்று அனைத்துத் துறை அதிகாரிகளையும் அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்.

அமைச்சர்கள் செய்யக்கூடிய வேலையை இவர் செய்கிறார். ஆளுநரின் செயலை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டிக்கும் போது ஆளும் கட்சியான அதிமுக வாய்மூடி மவுனியாக இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.