தில்லி,
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மதுகோடா. இவரது பதவி காலத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த முறைகேட்டில் அரசுக்கு 1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் நிறுவனம் (விஐஎஸ்யுஎல்) பலனடையும் வகையில், மதுகோடா உள்ளிட்டோர் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும், சதியாலோசனை செய்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராஷர் கடந்த தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில் கூறியதாவது:
“நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உள்ளிட்டோருக்கு  உள்ள தொடர்பு சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதான ஊழல் புகாருக்கு ஆதாரம் உள்ளது. எனவே இந்த வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் ஆவர். எனினும் இந்த வழக்கில் வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் நிறுவன முன்னாள் இயக்குநர் வைபவ் துல்ஷியன் உள்ளிட்ட 4 பேரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து இன்று ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டைனை விதித்து பட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் மதுகோடாவுக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதித்தும் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: