நாகப்பட்டினம்;
பொதுக்கூட்டம் என்ற பெயரில் நாகப்பட்டினத்தில் மதவெறியைத் தூண்ட முயன்ற பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை, போலீசார் கைது செய்தனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளன், இந்துக்களின் மனது புண்படும்படி பேசிவிட்டதாக பாஜக-வினர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன்மூலம் பெரும்பான்மை மதவெறியர்களை தலித் மக்களுக்கு எதிராக திருப்பிவிடும் சதியிலும் ஈடுபட்டுள்ளனர். மத்திய – மாநில ஆட்சி அதிகாரம் அவர்களுக்கு சாதகமாக இருப்பதால், துணிந்து இதை செய்து வருகின்றனர். குறிப்பாக, எச். ராஜா, தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் இதில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அந்த வகையில், எச். ராஜா சனிக்கிழமையன்று நாகப்பட்டினத்தில் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். போலீசார் இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்து விட்டனர். ஆனாலும் தடையை மீறி பேசுவேன் என்று அறிவித்த எச். ராஜா, வெளியூர்களிலிருந்து ஏராளமான பாஜக-வினரை நாகைக்கு வரவழைத்தார்.

இதனிடையே, திருமாவளவனை தரக்குறைவாக பேசிவரும் எச். ராஜாவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதென முடிவு செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், நாகப்பட்டினத்தில் பெரும் எண்ணிக்கையில் ஆவேசத்துடன் திரண்டனர்.

இதனால், பிரச்சனை ஏற்படலாம் என்று கருதிய காவல்துறையினர் நாகப்பட்டினம் நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீசாரைக் குவித்தனர். ஏதோ, தமிழக முதல்வர் அல்லது பிரதமர் வருவது போல, அவுரித் திடல் மற்றும் புதிய பேருந்து நிலையம், நாகூர் சாலை பகுதிகளில் எல்லாம் தடுப்புகள் வைத்து பொதுமக்கள் நடப்பதற்கு கூட அனுமதிக்கவில்லை.

பதற்றம் அதிகரித்துக் கொண்டே போன நிலையில், எச். ராஜா நாகைக்கு வந்தால் பெரும் பிரச்சனை ஏற்படும் என்று முடிவு செய்த போலீசார், எச். ராஜாவை அவரது காருடன் வாஞ்சியூர் எனும் இடத்தில் வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள் 70 பேரும் கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து, நாகையில் எச். ராஜாவின் கலவர முயற்சி தடுக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: