லக்னோ;
முசாபர் நகர் வன்முறை வழக்குகளில் தொடர்புடைய உத்தரப்பிரதேச மாநில பாஜக அமைச்சர் சுரேஷ் ராணா மற்றும் 2 பாஜக எம்எல்ஏ-க்களுக்கு ஜாமீனில் வர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2013 -ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், இஸ்லாமியர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். ஆர்எஸ்எஸ் பரிவாரங்களும் பாஜக-வினரும் நடத்திய வன்முறையில் இஸ்லாமியர்கள் 60 பேர் கொல்லப்பட்டனர்.

நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாக கூறி, திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இந்த
வன்முறையில், அப்பாவி மக்கள் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேறு இடத்திற்கு சென்று குடியேறினர்.

இந்த வழக்கில் பாஜக தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதே குற்றம்சாட்டப்பட்டது. முசாபர் நகர் பகுதியில் கலவரத்தைத் தூண்டும் விதமாக இவர்கள் பேசியதாக, முன்பிருந்த அகிலேஷ் யாதவ் அரசு வழக்குப்பதிவு செய்தது. மேலும் முசாபர் நகர் வன்முறைகளை விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி.) அமைக்கப்பட்டது.

ஆனால், வன்முறையைத் தூண்டிவிட்ட பலரும் தற்போது பாஜக அமைச்சர்களாகவும், எம்எல்ஏ-க்களாகவும் மாறி விட்டனர். காவல்துறை புடைசூழ சுதந்திரமாக சிறைக்கு வெளியே இருக்கின்றனர்.

இந்நிலையில், முசாபர் நகர் வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நீதி
மன்றம், இவ்வழக்கில் தொடர்புடைய உத்தரப் பிரதேச மாநில பாஜக அமைச்சர் சுரேஷ் ராணா,
முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன், பாஜக எம்.எல்.ஏ.க்கள் சங்கீத் சோம், உமேஷ் மாலிக் உள்ளிட்டோருக்கு ஜாமீனில் வர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது. சிறப்பு விசாரணைக்குழு நீதிமன்றத்தில் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் கூடுதல் நீதிபதி மது குப்தா, வாரண்ட் பிறப்பித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்ள் 2018-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அந்த வாரண்ட்டில் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: