வங்கிகளின் வராக்கடன்களை அதிகரித்தது முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

குறிப்பிட்ட தொழிலதிபருக்கு பலஆயிரம் கோடி ரூபாய் கடன் அளிக்கவேண்டும் என்று வங்கிகளுக்கு காங்கிரஸ் அரசு நிர்பந்தம் அளித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியின் போது சில தொழில் அதிபர்களுக்குக் கடன்கள்வாரி வழங்கப்பட்டது உண்மைதான். விஜய் மல்லையா போன்ற மோசடி பேர்வழிகள் உருவாகவும் ஹர்ஷத் மேத்தா போன்ற பங்குச் சந்தைமோசடி பேர்வழிகள் தலையெடுக்கவும் காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் அந்த காங்கிரஸ் கட்சியில்இருந்து நாங்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் என்றெல்லாம் நாட்டு மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த மோடி என்ன செய்தார். அவர் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, வராக்கடன்களை வசூலிக்கஇதுவரை எடுத்த நடவடிக்கைகள் தான் என்ன? காங்கிரஸ் ஆட்சியில் விஜய்மல்லையா போன்றோருக்குக் கடன் வழங்க வங்கிகளுக்கு நிர்பந்தம் அளிக்கப்பட்டது என்றால் பாஜக ஆட்சியில் அதானி போன்ற தொழிலதிபர்களுக்கு வங்கிக்கடன் கிடைக்க தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர்தான் பிரதமர் மோடி.

ஆஸ்திரேலியாவில் அதானி நிலக்கரி சுரங்கம்வாங்குவதற்குப் பிரதமர் மோடி தனது விமானத்திலேயே நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரை அழைத்துச்சென்றார். இதுவரை எந்தப் பிரதமரும் செய்யத் துணியாத செயல்களை எல்லாம்பிரதமர் மோடி பகிரங்கமாக செய்தார். இதற்காக அவரோ, அவரது கட்சியோ சிறிது கூட வெட்கப்படவில்லை. இப்படிப்பட்ட உத்தமர் தான் இப்போது வங்கிகளின் வராக்கடனில் ஊழல் என்று பிதற்றுகிறார். தனக்குத் தேவைப்பட்ட தொழில் அதிபர்களுக்குத் தேவையான கடன்களை மட்டுமல்ல, முந்தைய காங்கிரஸ் அரசைப்போல மோடி அரசும் வராக்கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டது.  வராக்கடன் தொகையில் 80 விழுக்காடு 50 மிகப்பெரிய நிறுவனங்கள் செலுத்தவேண்டியவை ஆகும். இவை அனைத்தும் பொதுத்துறை வங்கிகளின் முதலீட்டாளர்களின் பணம். பிரதமர் மோடி தலைமையிலான அரசுபொறுப்பேற்ற பின்னர் 2015, 2016 எனத் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் வராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் ஒட்டுமொத்த பொதுத்துறை நிறுவனங்களின் வருவாயில் பெரும் இழப்பு ஏற்பட்டது.

இதுமட்டுமா, கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 1949 ஆம்ஆண்டு வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் செய்து திவால் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம், கடன் வாங்கிவிட்டு வங்கிகளை ஏமாற்றும் பெரும் முதலைகள் பாதுகாப்பாகதப்பிச் செல்ல மோடி அரசு வழி ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இவர்கள் அனைவரும் ஊழல்அரசியல்வாதிகள் மற்றும் பெரும் தொழில்அதிபர்களுடன் இணைந்து பொதுத்துறை வங்கிகளைச் சூறையாடி வருகிறார்கள். இந்த மோசடி பேர்வழிகளுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை ஏற்படுத்தித் தந்துள்ள பிரதமர் மோடி வராக்கடன் ஊழலைப் பற்றி பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: