பொள்ளாச்சி, டிச.15-
விவசாய சாகுபடிக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிடக்கோரி பொள்ளாச்சி பிஏபி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். உடுமலை வட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து விவசாயத்திற்காக 4 ஆவது மண்டலத்தில் இரண்டாவது சுற்றுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால், திறந்துவிடப்பட்ட இந்த நீர் விவசாயத்திற்கு போதுமானதாக இல்லை. ஆகவே, கூடுதலாக ஒரு சுற்று அளவு தண்ணீர் திறந்துவிடக்கோரி பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், நெல், உள்ளிட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் உடனடியாக கூடுதலாக தண்ணீர் திறந்துவிடக்
கோரி பொள்ளாச்சி – உடுமலை சாலையில் உள்ள பிஏபி அலுவலகத்தை வெள்ளியன்று உடுமலை பகுதியிலுள்ள விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகள் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவினை பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இப்போராட்டம் காரணமாக சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

Leave A Reply

%d bloggers like this: