கோவை, டிச.15-
போக்குவரத்து தொழிலாளர்களின் ரூ.7ஆயிரம் கோடி பணப்பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இரண்டாவது நாளாக வெள்ளியன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போக்குவரத்து தொழிலாளர்களின் 13வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக முடிக்க வேண்டும். ரூ.7 ஆயிரம் கோடி பணப்பலன்களை விரைவில் வழங்க வேண்டும். ஒய்வூதியர்களுக்கு மாதா, மாதம் முறையாக ஒய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வியாழனன்று துவங்கிய காத்திருப்பு போராட்டம் வெள்ளியன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு எல்பிஎப் ரத்தினவேலு தலைமை வகித்தார். சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் காளியப்பன், மாவட்ட பொதுச்செயலாளர் அருணகிரிநாதன், ஏஐடியுசி செல்வராஜ், சண்முகம், எச்எம்எஸ் ராஜா, வி.சி. ரவி, தேமுதிக ரவி, பாமக சிதம்பரம், மதிமுக குமரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர்கள் கோவை கவுண்டபாளையம் போக்குவரத்து பணிமனை முன்பு இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு சிஐடியு கிளை செயலாளர் மணிகண்டன், எல்பிஎப் கிளை தலைவர் பாண்டியராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், சிஐடியு சாலை போக்குவரத்து சங்க மாநில செயலாளர் எஸ்.முர்த்தி ஆகியோர் போராட்டத்தைவாழ்த்தி பேசினர். இதில் திரளான போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர்:
திருப்பூரில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தைத் தொடர்ந்தனர். இப்போராட்டத்திற்கு சிஐடியு சார்பில் சுப்பிரமணி, செல்லதுரை, தொமுச சார்பில் துரைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும், போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன், சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி.பாலன், கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்க மாநில பொது செயலாளர் டி.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

60 சத பேருந்துகள் நிறுத்தம்:
திருப்பூர் பணிமனையில் மொத்தமிருந்த பேருந்துகளில் 60 சதவிகிதம் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பணிமனை வளாகத்தில் கணிசமான பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதுதவிர பேருந்து நிலையங்களிலும் பல பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன. பெரும்பான்மை தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் ஆளும் கட்சிசங்கத்தைச் சேர்ந்த சிலரும், பரிசோதனை ஆய்வாளர்களும் பேருந்துகளை இயக்கும் நிலைஏற்பட்டது. இதற்கிடையே வெள்ளி
யன்று மாலை போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் முடித்துக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அரசை அடிபணியச் செய்யும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று தொழிலாளர்கள் தரப்பில் உறுதியான உணர்வில் இருக்கின்றனர் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர். காத்திருப்புப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டாலும், பேருந்துகளை இயக்குவதற்கு தொழிலாளர்கள் செல்லாமல் வேலைநிறுத்தம் செய்தனர் என்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: