திருப்பூர், டிச.15 –
மத்திய அரசின் செல்லா பண விவகாரம், ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் டிராபேக் குறைப்பு காரணமாக பின்னலாடைத் தொழில்நெருக்கடியில் சிக்கி, தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு, வருமான இழப்பு ஏற்பட்டு துயரம் அதிகரித்துள்ளது. இதற்கு எதிராக திருப்பூர் பனியன் தொழில் மற்றும் தொழிலாளர் நலன் பாதுகாப்பு மாநாட்டை டிசம்பர் 26ஆம் தேதி வெற்றிகரமாக நடத்த அனைத்துத் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

திருப்பூர் சிஐடியு அலுவலகத்தில் வெள்ளியன்று அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கத் தலைவர் சி.மூர்த்தி, பொதுச் செயலாளர் ஜி.சம்பத், ஏஐடியுசி பொதுச் செயலாளர் என்.சேகர், ஐஎன்டியுசி பொதுச் செயலாளர் பி.கே.என்.தண்டபாணி, தலைவர் அ.பெருமாள், செயலாளர் அ.சிவசாமி, எல்பிஎப் தலைவர் ஜி.பாலசுப்பிரமணியம், எம்எல்எப் பொதுச் செயலாளர் மனோகரன், எச்எம்எஸ் செயலாளர் முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஏற்கெனவே திருப்பூர் அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்தபடி டிசம்பர் 26ஆம் தேதி திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் பனியன் தொழில் மற்றும் தொழிலாளர் நலன் பாதுகாப்பு மாநாட்டை வெற்றிகரமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இம்மாநாட்டில் எல்பிஎப் சார்பில் திருச்சி சிவா, ஏஐடியுசி மாநிலத் தலைவர் கே.சுப்பராயன், சிஐடியு சார்பில் க.சுவாமிநாதன், எச்எம்எஸ் சார்பில் சுப்பிரமணியம் பிள்ளை, ஐஎன்டியுசி சார்பில் பி.கே.என்.தண்டபாணி, எம்எல்எப் சார்பில் மு.சம்பத் ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

மத்திய அரசின் உள்நாட்டு சிறு, குறு நடுத்தரத் தொழில்களுக்கு எதிரான கொள்கைகள் காரணமாக திருப்பூர் பின்னலாடை உள்நாட்டு உற்பத்தியும், வெளிநாட்டு ஏற்றுமதி தொழிலும் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக செல்லா பணம் விவகாரம், ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகையாக வழங்கப்படும் டிராபேக் குறைப்பு காரணமாக பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் தொழிலாளர்களுக்கு கிடைத்து வந்த வேலை கடுமையாக சுருங்கியுள்ளது. நிறுவனங்களில் வேலை தரும் நாட்கள் எண்ணிக்கையும், வேலை நேரமும் வெகுவாகக் குறைந்துள்ளதால், தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் கூலியும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் பின்னலாடைத் தொழிலையும், தொழிலாளர் நலனையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் திருப்பூர் வட்டாரத்தில் தொழிலாளர்களைப் பெருந்திரளாகப் பங்கேற்கச் செய்வது என்று தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: