திருப்பூர்,
சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி தவறாக சித்தரிப்பவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று சாதி ஆணவப் படுகொலையில் கணவர் சங்கரை இழந்த  கௌசல்யா கொமரலிங்கம் கிராமத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட சங்கர் கௌசல்யா தம்பதியினர் கூலிப்படையினரால் பட்டப்பகலில் வெட்டப்பட்டனர். இந்த தாக்குதலில் சங்கர் உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த கௌசல்யா சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறினார். இதையடுத்து சங்கர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் கௌசல்யாவின் தந்தை உட்பட 8பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. மேலும் தாய் அன்னலட்சுமி உட்பட 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள கொரலிங்கம் கிராமத்தில் சங்கரின் மனைவி கௌசல்யா, மனித உரிமை செயல்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் ஆகியோர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது சங்கர் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்பதாகவும், இந்த தீர்ப்பு கிடைக்க முயற்சி மேற்கொண்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் கௌசல்யாவின் மன உறுதியே இந்த தண்டணையை பெற்றுக்கொடுத்து இருக்கன்றது எனவும் 58 முறை ஜாமீன் மனுவிற்கு கைது செய்யப்பட்டவர்கள் முயன்ற போதும் அதை தொடர்ந்து எதிர்த்தோம் எனவும் மனித உரிமை செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கௌசல்யா , நீதிமன்ற தீர்ப்பினை வரவேற்கிறேன். ஆணவ, சாதிப்படுகொலை செய்பவர்களுக்கு இந்த தூக்கு தண்டணை சரியான பாடமாக இருக்கும். தூக்கு தண்டணை தொடர்பான தனது பார்வை வேறு என்றாலும், இந்த தண்டணை ஆணவ படுகொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு மனதடை போடும் என நம்புகிறேன்.

மேலும் உடனடியாக தூக்கு தண்டணையை நிறைவேற்ற போவதில்லை என தெரிவித்த கௌசல்யா, தற்போது விதிக்கப்பட்ட தூக்கு தண்டணை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். தற்போது காவல் துறை தனக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கிறது.
ஆனால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிரட்டல்கள், அவதூறுகள் வருகின்றன. அதன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிப்பவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவித்தார்.
சாதி ஒழிப்பு மட்டுமே எனது முதல் பணி. என் தந்தையை தந்தையாகவே நினைக்கவில்லை , அவரை குற்றவாளியாகவே பார்க்கின்றேன் . ஆணவகொலைகளை தடுக்க தனிசட்டம் இயற்ற வேண்டும் என்பதே தன் எதிர்பார்ப்பு. சாதி எதிர்ப்புக்கான எனது போராட்டம் கண்டிப்பாக தொடரும். நான் எவ்வளவு நாள் உயிரோட இருக்கிறேனோ அதுவரை எனது சாதி எதிர்ப்புக்கான போராட்டம் தொடரும்.
நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட நபர்களால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற பயம் இருக்கிறது. தனக்கு எல்லா இயக்கங்களும் ஆதரவு கொடுக்கின்றன.  என்னை யாரும் இயக்கவில்லை. இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட மூன்று பேரின் விடுதலை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும். சங்கர் கொலை வழக்கு விசாரணையில் காவல்துறையின் மீது எந்த குறையும் சொல்ல முடியாது.
தனக்கும், சங்கர் குடும்பத்தினருக்கும் காவல் துறை பாதுகாப்பு தொடர்ந்து அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Leave A Reply