போபால்;
பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில், கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடிக்கொண்டே ஊர்வலமாக சென்ற கிறிஸ்தவக் குழுவினர் மீது, சங்-பரிவார கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதுடன் அவர்களின் வாகனத்தையும் தீ வைத்து எரித்த சம்பவம் நடந்துள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா அருகே உள்ள தாரா கலன் என்ற கிராமத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வருவதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. கத்தோலிக்க பாதிரியர்கள் சிலரும், கிறிஸ்தவப் பாடல் குழுவினரும் கிறிஸ்துமஸ் பாடல்களை இசைத்தபடி ஊர்வலமாகவும் சென்றுள்ளனர். மொத்தம் 32 பேர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்கள் பாடல்களைப் பாடிக்கொண்டே சென்றபோத, வழிமறித்த சங்-பரிவாரத்தைச் சேர்ந்த சிலர், பொதுமக்கள் என்ற போர்வையில் அங்கு கூடி, மதம் மாற்றுவதற்கு முயற்சி செய்கிறீர்களா? என்று கேட்டுக் கொண்டே சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தகவலறிந்து வந்த போலீசாரோ, வன்முறையில் ஈடுபட்டவர்களை விட்டுவிட்டு, கிறிஸ்தவக் குழுவினரை அவர்களின் பிரச்சார வாகனத்திலேயே காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கும் விடாமல் பின்தொடர்ந்து சென்ற சங்-பரிவார் கும்பல், காவல் நிலைய வாசலிலேயே கிறிஸ்தவப் பாடல் குழுவினரின் வாகனத்தை தீ வைத்து எரித்து, வெறியாட்டம் போட்டுள்ளது.
ஆனால், அவர்கள் ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்காத மத்திய பிரதேச பாஜக அரசின் காவல்துறை, மாறாக, கிறிஸ்தவக் குழுவினர் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அவர்கள் மீது வழக்கு போட்டுள்ளது. தாக்குதல் தொடர்பாக புகார் தெரிவிக்க வந்த பாதிரியார்கள் 8 பேரை கைது செய்துள்ளது.“கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால், 5 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறி மதமாற்ற முயற்சி நடந்துள்ளது; அதுதொடர்பான புகாரின் பேரிலேயே பாதிரியார்கள் 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று காவல்துறை கண்காணிப்பாளர் டி.டி. பாண்டே வெளிப்படையாக பேட்டியும் அளித்துள்ளார்.கிறிஸ்துமஸ் காலத்தில், இச்சம்பவம் சிறுபான்மை கிறிஸ்தவ மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Leave A Reply