கோவை, டிச.15-
பொதுமக்களின் ஒத்துழைப்போடு, காவல்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க முடிந்தாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

கோவையில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் 30 லட்சம் ரூபாயை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. இக்கும்பல்களை பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைத்துகாவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் வியாழனன்று நாமக்கல் மாவட்டத்தில் 8 பேர் கொண்ட கொள்ளை கும்பலை காவல் துறையினர் பிடித்தனர்.

இதுகுறித்து வெள்ளியன்று கோவை மாநகர காவல்ஆணையர் பெரியய்யா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ராஜஸ்தான், ஹரியானா, உ.பி.மற்றும் தில்லியை சேர்ந்தவர்கள் அறிவியல் தொழில்நுட்ப உதவியோடு இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். இருபது நிமிடத்திற்குள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையை அரங்கேற்றிவிட்டு அடுத்த இடத்திற்கு இடம்பெயர்ந்து விடுவார்கள். இந்நிலையில் இவர்கள் நடத்திய கொள்ளையில் பயன்படுத்திய கார் குறித்த தகவலை அங்கிருந்த வாடகை கார் ஓட்டுனர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அனைத்து டோல் கேட்டிலும் ஆய்வு செய்தோம். இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தை தாண்டவில்லை என்பதை உறுதி செய்தோம். இதன்பின் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறையினர் உதவியோடு, மோப்பநாய், ஹெலிகேம் போன்ற அறிவியல் தொழில்நுட்ப உதவியோடு கொள்ளை கும்பலை பிடித்தோம். மேலும், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்தப்படும் வெல்டிங்மிசின், கேஸ் சிலிண்டர் போன்றவற்றையும் பறிமுதல் செய்துள்ளோம். குறிப்பாக, இந்த பொருட்களை காரில் கொண்டு சென்றால் சந்தேகம் வரும் என்பதால் இந்த கொள்ளைக்கு லாரியை பயன்படுத்தியுள்ளனர். இந்த லாரியில் இரண்டு டீசல் டேங்கை பொருத்தி ஒரு டீசல் டேங்கில் ஏடிஎம் இயந்திரத்தை உடைப்பதற்கான வெல்டிங்மிசின், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. முன்னதாக, இந்த கொள்ளை கும்பலை பிடிக்க பொதுமக்கள் பெரிதும் ஒத்துழைத்தனர்.

இதேபோல், கோவை மாநகர காவல்துறை, நாமக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் சேலம் மாநகர் காவல் துறையினர் ஒன்றிணைந்து டீம் ஒர்க் செய்து இந்த பணியை மேற்கொண்டதால் எளிதாக கொள்ளையர்களை பிடிக்க முடிந்தது. தற்போது கொள்ளையர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இவர்கள் குறித்த மற்ற விபரங்கள் விசாரணையில் தெரியவரும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: