அபூர்வானந்த், டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர்

இரண்டாண்டுகளுக்கு முன்பாக மறைந்த விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவரான அசோக் சிங்காலின் நினைவாக மகேஷ் பக்சந்த்கா என்பவர் எழுதிய ‘அசோக் சிங்கால்: நம்பிக்கையுள்ள விடாமுயற்சி கொண்ட ஹிந்துத்துவாவின்  பிரச்சாரகர்’ என்ற புத்தகத்தை, கடந்த 07-12-2017 வியாழன்று இந்திய குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு புது டெல்லியில் வெளியிட்டார்.

முஸ்லீம்கள், கிறிஸ்துவர்களை வெறுப்பவராக அனைவராலும் நன்கு அறியப்பட்டுள்ள அசோக் சிங்காலின் நற்பண்புகளைப் பற்றி புகழ்ந்து பேசுகிற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வெங்கையா நாயுடு முடிவு செய்ததன் விளைவாக, இந்திய குடியரசுத் துணைத் தலைவர் அலுவலகத்தின் மாண்பிற்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவராகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவர் சிங்கால்.

2015ஆம் ஆண்டு சிங்கால் மரணமடைந்த போது, அவரைப் பற்றி பத்திரிகையாளர் நீனா வியாஸ் எழுதிய போது, ஹிந்து – முஸ்லீம்களுக்கிடையே சுதந்திர இந்தியாவில் நிலவி வந்த உறவுகளுக்கு அதிகபட்ச அளவில் சேதத்தை ஏற்படுத்திய தலைவர்களில் ஒருவராகவே அவர் நினைவுகூரப்படுவார் என்று குறிப்பிட்டிருந்தார். தற்போதைய பிரதமரின் கண்காணிப்பின்கீழ், 2002ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லீம்கள் மீது குறிவைத்து வன்முறைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டது குறித்து சிங்கால் அடைந்த திருப்தியைப் பற்றி வியாஸ் அந்தக் கட்டுரையில் பின்வருமாறு நினைவு கூர்கிறார். ”அந்த ஆண்டு (2002) செப்டம்பர் 3 அன்று அமிர்தசரஸில் நடந்த கூட்டமொன்றில், முஸ்லீம்கள் தங்களுடைய ஜிகாதி மனப்பான்மையை விட்டொழிக்கா விட்டால், குஜராத்தில் நடத்தப்பட்ட இந்த வெற்றிகரமான பரிசோதனை நாடு முழுவதிலும் நடத்தப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும், குஜராத்தில் இப்போது ஒவ்வொரு கிராமமாக முஸ்லீம்களே இல்லாது தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் பேசினார்”.

அசோக் சிங்கால் பற்றி ஆசியன் ஏஜ் என்ற பத்திரிகையில் 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமிதா வர்மா என்பவர் “குஜராத் கலவரம் நடந்து மூன்று மாதங்களுக்குள்ளாகவே, ஹிந்துக்களிடையே ஹிந்துத்துவா உணர்வை ஊக்குவிப்பதையும், முஸ்லீம் ஜிகாதி மனப்பான்மைக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்குவதையும் இலக்காகக் கொண்ட பரிசோதனைகளைச் செய்து முடிப்பதற்கான ஆய்வகமாக உத்தரப்பிரதேச மாநிலத்தை மாற்றுவதற்கான திட்டங்களை விஸ்வ ஹிந்து பரிஷத் ஆரம்பித்தது” என்று எழுதியுள்ளார்.

கோத்ரா இருக்கும் இடங்களில் எல்லாம் குஜராத் இருக்கும் என்று ஆக்ரோஷமாக விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் பேசியதாகவும் அவர் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஜிகாதி மனநிலையைக் கொண்டுள்ள முஸ்லீம்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும், ஹிந்து விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதன் விளைவாக, குஜராத்தில் இப்போது முஸ்லீம்கள் அகதிகளாக மாறியுள்ளனர் என்று கூறிய சிங்கால், இது வரவேற்கப்பட வேண்டியதாக இருக்கிறது. நாடு முழுமைக்குமான வழியை குஜராத் காட்டி இருக்கிறது. இனிமேல் இந்தியாவில் அரசியல் என்பது ஹிந்து சமூகத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும் என்று பேசியதாகவும் அமித வர்மா தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர இந்தியாவில் வன்முறை மற்றும் துவேஷம் நிரம்பிய காலகட்டங்களில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முகமாக அஷோக் சிங்கால் இருந்தார்.  ஆர்எஸ்எஸ் பகிரங்கமாகச் செய்ய விரும்பாத ஹிந்துக்கள் மத்தியில் முஸ்லீம் விரோத வெறுப்புணர்வை உருவாக்குவது போன்றவற்றை பகிரங்கமாகச் செய்வதற்கென்றே விஸ்வ ஹிந்து பரிஷத் உருவாக்கப்பட்டது. பாபர்மசூதியை இடித்துத் தள்ளிய சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2002 டிசம்பர் 6 தினத்தை தன்னுடைய வாழ்நாளிலேயே மிகவும் சோகமான நாள் என்று கூற வேண்டாம் என்று அத்வானியிடம் சொல்வதற்கு சிங்கால் தயங்கவே இல்லை.  மசூதி இடிப்பு தொடர்பான கிரிமினல்  வழக்குகளில்  இருந்து  தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அத்வானி அவ்வாறு கூறியிருந்தாரே தவிர அதற்கு வேறெந்த காரணமும் இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அந்த நாளை ஒரு கறுப்பு நாள், சோகமான நாள் என்றோ அல்லது மசூதி இடிக்கப்பட்டது மிகவும் துரதிர்ஷ்டம்வாய்ந்தது என்றோ குறிப்பிடுவதை அத்வானி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அந்த நாளை வீர நாளாக, போரில் வென்ற தினமாகக் கொண்டாட வேண்டும் என்றும் சிங்கால் வலியுறுத்தி இருந்தார்.

ராமர் கோவில் மீது மட்டுமே பேரார்வம் கொண்டு இயங்குபவராக சிங்கால் இருப்பதாக மக்கள் தவறுதலாக நினைத்தால், முஸ்லீம்கள் என்பதற்காகவே அவர்களைக் குறி வைத்து சிங்கால் விடுத்துள்ள அறிக்கைகளை மீண்டும் அவர்கள் படிக்க வேண்டும். அயோத்தியில் உள்ள மசூதியை  அகற்றுவதை மட்டுமே தன்னுடைய நோக்கமாக அவர் கொண்டிராமல்,  அந்தப் பகுதியில் இருந்து முஸ்லீம்  மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும் என்பதையே அவர் விரும்பினார்.

2006ஆம் ஆண்டில், மசூதி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வெளியான யுஎன்ஐயின் அறிக்கையில், “அயோத்தியில் குழந்தை ராமருக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் தற்காலிகக் கோவிலுக்கு அருகில் உள்ள முஸ்லீம்கள் நிறைந்த பகுதி அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேசத்  தலைவர் அசோக் சிங்கால் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். அயோத்தியில் உள்ள தற்காலிக ராமர் கோவில் மீது நடத்தப்பட இருப்பதாகக் கூறப்படும் தீவிரவாத தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பை அதிகப்படுத்துவதில் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சைக்கு உரியதீர்வைக் காண்பதற்கு உச்ச நீதிமன்றம் இன்னும் கால அவகாசம் தர வேண்டும் என்ற மத்திய  அரசாங்கத்தின்  வேண்டுகோளுக்கு  விடையிறுக்கும் வகையில், கையகப்படுத்தப்பட்டிருக்கும் நிலத்திற்கு அருகே உள்ள குடியிருப்புகளை அங்கிருந்து அகற்றுவதே மிக முக்கியமானதாக இருப்பதாக சிங்கால் தெரிவித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. .

இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவரான கே.எஸ்.சுதர்சனின் வாழ்க்கை வரலாறு மற்றும் செயல்பாடுகள் பற்றிய பற்றிய ஒரு புத்தகத்தை அவர் வெளியிட்டபோது, நரேந்திர மோடி தலைமையில் பாஜக அடைந்திருக்கும் வெற்றி குறித்து  சிங்கால் மிகுந்த பெருமிதம் அடைந்தார். 2030 ஆம்ஆண்டுக்குள் இந்த உலகம் முழுவதும் ஹிந்து மதத்தின் கீழ் வந்து விடும் என்பதாக அவர் அப்போது கணித்து அறிவித்தார். சாய் பாபா ஆசிரமத்தில் ஒருமுறை நான் இருந்த போது, சாய்பாபா என்னிடம் 2020 வாக்கில்  நமது நாடு முழுவதும் ஹிந்துவாக மாறிவிடும் என்றும் 2030க்குள் உலகம்  முழுதும் ஹிந்துவாக மாறி விடும் என்று கூறினார்.

அதற்கான புரட்சி தொடங்கிவிட்டது என்றே  நான் நினைக்கிறேன் என்று சிங்கால் கூறினார். நரேந்திர மோடி அதிகாரத்திற்கு வந்திருப்பதைப் பாராட்டிய அவர், 800ஆண்டுகள் இருந்த அடிமைத்தனம் ஒரு முடிவுக்கு  வந்துள்ளது  என்றும், இது ஒரு சாதாரண புரட்சி அல்ல. இது இந்தியாவிற்குமட்டுமானதாக இல்லாமல், உலகிற்கு முன்பாக புதிய சித்தாந்தம் ஒன்றை முன்வைத்திருக்கிறது என்றும் அந்தக் கூட்டத்தில் அவர் கூறினார்.

மத்திய அரசு மற்றும் உத்திரப்பிரதேச மாநில அரசுகள் மதரசாக்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தை அந்த அரசாங்கங்களின் மூளையில் உதித்ததாகக் கருதுபவர்கள்,  ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊதுகுழலாக இருக்கும் ஆர்கனைசர் பத்திரிகையை ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னதாகச் சென்று பார்க்க வேண்டும். உள்ளூர் முஸ்லீம்கள் தருகின்ற தங்குமிடம், ஆதரவு போன்றவை இல்லாமல், ஜிகாதிகள் வெளியில் இருந்து தாக்க முடியாது. எனவே அரசாங்கம் அனைத்து மதரசாக்களையும் உடனே  முடக்க  வேண்டும்  என்று அசோக் சிங்கால் கூறியதாக அதில் வெளியாகி இருக்கிறது.

ஹிந்துக் கோயில்களை அழித்துக்கட்டப்பட்ட மசூதிகள் மீது தங்களுக்கு உள்ள உரிமையை வலியுறுத்தி வரும் முஸ்லீம்கள் மீதே சிங்கால் ஆத்திரம் அடைந்ததாக நினைப்பவர்கள், கிறிஸ்துவர்களுக்கு எதிரான உணர்வையும் அவர் கொண்டிருந்ததைப் புரிந்துகொள்ள வேண்டும். கிறிஸ்துமஸுக்குப் பிறகு குஜராத்தில்டாங் கிராமங்களில் இருந்த கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டபோது, கிறிஸ்துவ மிஷனரிகளுக்கு எதிராக சிங்கால் குற்றம் சாட்டினார்.  அது பற்றி எழுதிய நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைச் செய்தியில், கிறிஸ்துமஸுக்குப் பிறகு சில நாட்கள் கழித்து, டாங்ஸில் இருந்த கிறிஸ்துவ தேவாலயங்கள் பற்றி யெரிந்து கொண்டிருந்த போது, உலக  ஹிந்து  கவுன்சிலின்  தேசியத் தலைவர்கள் டாங்ஸில் திரு. படேல் தலைமை தாங்குகின்ற குழுவை ஜெய்ப்பூரில் சந்தித்துப் பேசினார்கள். அந்த கவுன்சிலின் சர்வதேச செயற்குழுத் தலைவராக இருந்த அசோக் சிங்கால் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, அன்னை தெரசா கிறிஸ்துவத்திற்கு மாற மறுத்தவர்களுக்கு பைத்தியம் பிடிக்கும் வகையில் ஊசி போடுவதகத் தெரிவித்ததோடு, அல்பேனியத் தீவிரவாதிகளுக்கு அவர் ஆதரவை அளித்து வந்ததாகவும் குற்றம் சாட்டினார்.

பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரான பி.ஏ.சங்மா ஃப்ரண்ட்லைன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், கிறிஸ்துவர்களைத் தேசத் துரோகிகள் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் சொல்வதோடு, கிறிஸ்துவர்கள் சிஐஏ ஏஜண்டுகளாக இருப்பதாகவும் சொல்கிறார். அவர் கூறுகின்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் கடுமையானவை. அவரால் அவற்றை ஒருபோதும் நிரூபிக்க முடியாது.  இந்த மாதிரியான கிறுக்கர்களின் குற்றச்சாட்டுகளுக்கு நாம் எதுவும் பதிலளிக்கக் கூடாது என்று எங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவராகவே சிங்காலைக் கருத வேண்டும் என்ற உத்தரவாதம் நாட்டின் மீது (பாஜக மீது) அக்கறை கொண்டவர்களால் எங்களுக்கு வழங்கப்பட்டது.   என்ரும் குறிப்பிடுகிறார்.

வெறுப்பு, வன்முறை ஆகியவற்றின் உருவமாக இருந்த, அவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவரை குடியாசுத் துனைத் தலைவரின் அலுவலகம் சட்டப்பூர்வமாக்குவதை நாம் அனுமதிக்கலாமா? ஹிந்து தத்துவத்தின் தலைசிறந்த ஆதரவாளர்களில் ஒருவர் என்றும், தன்னுடைய 75 கால வாழ்க்கையை எதிர்காலச் சந்ததியினருக்காக தியாகம் செய்தவர் என்றும் அந்த விழாவில் வெங்கையா நாயுடு சிங்காலுக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார். ஆர்எஸ்எஸ் பிரசாரக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, சமுதாயத்திற்கான சேவைகளைச் செய்த தனித்த தன்மை கொண்ட மனிதர் சிங்கால் என்றும் நாயுடு அவரைப் பாராட்டியிருக்கிறார்.

ஹிந்து தத்துவத்திற்கென்று அறிவார்ந்த வகையிலோ அல்லது தத்துவார்த்தமாகவோ,  சிங்கால் என்ன செய்திருக்கிறார் என்பது தெரியவில்லை. வேறுவிதமாகக் கூறினால், அவர் இறந்தபோது குற்றம் சாட்டப்பட்ட நபராகவே இருந்தார்; பாபர் மசூதி இடித்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. குற்றவியல் வழக்கில் சம்பந்தப்பட்ட, அவர் சார்ந்திருந்த அரசாங்கத்தின் நிறுவனம் ஒன்றினால் ஏற்கனவே  தண்டிக்கப்பட்ட ஒரு நபரைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் அவசியம் பங்கேற்றிருக்க வேண்டுமா?

குடியரசுத் துணைத் தலைவரும் ஸ்வயம்சேவக்காக தனது கடந்த காலத்தைக் கழித்தவரே. தான் ஏற்றுக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கேற்ப அவர் இருக்க வேண்டும் என்றால், இத்தகைய நடவடிக்கைகளை அவர் பின்னுக்குத் தள்ள வேண்டும். அந்த நிகழ்ச்சியில் வெங்கய்யா நாயுடு வந்தே மாதரம் என்பது தாய் நாட்டிற்கு வணக்கம் செலுத்துகிற பாடலாக இருக்கிறது, அதைப் பாடுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது?  நீங்கள்  உங்கள்  தாயை வணங்கவில்லையென்றால், பின்யாரை வணங்கப் போகிறீர்கள்? அப்சல் குருவையா? என்ற கேள்வியை எழுப்பி, ‘வந்தே மாதரத்தை அவசியம் பாட வேண்டும் என்கிற கருத்தையும் முன்வைத்தார்.

அப்சல் குருவை மறந்துவிடுவோம். இந்தியாவில் ஹிந்து ராஷ்ட்ரத்தை உருவாக்கும்  நோக்கம் கொண்ட அசோக் சிங்காலை வணங்குவது என்பது, தான் உறுதிமொழியாக ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பிற்கு எவ்வளவு பொருத்தமானதாக  இருக்கிறது என்பதை  குடியாசுத் துணைத்தலைவர்தான் நமக்கு விளக்க வேண்டும்.

தான் இன்னும் ஒரு அரசியல்வாதியாக இல்லை என்பதை மரியாதைக்குரிய குடியரசுத் துணைத்தலைவர் தெரிந்து கொண்டால்  நன்றாக இருக்கும். தான் இன்னும் ஆர்எஸ்எஸ்சின் பிரச்சாரகரோ அல்லது அணிதிரட்டுபவரோ இல்லை என்பதையும் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.  அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பதில் உள்ள சிரமங்களை இனிமேலாவது அவர் உடனடியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழில்: முனைவர் சந்திரகுரு – விருதுநகர்

 

Leave A Reply

%d bloggers like this: