ஓமலூர், டிச.14-
ஓமலூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் அடுத்தடுத்து வைக்கபட்டிருந்த லாரி டயர்களால் அவ்வழியே வந்த சரக்கு ரயில் மோதி நின்றது.

சேலம் மாவட்டம், ஓமலூர் வழியாக சேலத்தில் இருந்து மேட்டூருக்கு சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மேட்டூரில் அனல்மின் நிலையம் அமைந்திருப்பதால் தினம்தோறும் நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றி வரும் சரக்கு ரயில்கள் அவ்வழியே அதிகமாக வந்து செல்கின்றன. இந்நிலையில் ஓமலூர் அருகேயுள்ள இலவமரத்தூர் ரயில்வே கேட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ரயில்வே தண்டவாளத்தில் மூன்று லாரி டயர்கள் அடுத்தடுத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. அப்போது, மேட்டூரில் இருந்து வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தில் இருந்த டயர்கள் மீது மோதி வேகம் குறைந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டு இறங்கி வந்து பார்த்துள்ளார். அப்போது ரயிலில் லாரி டயர்கள் சிக்கிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தண்டவாளங்கள் முழுமையாக சோதனை செய்தபின் சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு ரயிலை ஓமலூருக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, ஓமலூர் ரயில்வே கண்காணிப்பாளர் பழனிசாமி, சேலம் ரயில்வே காவல்துறைக்கு புகார் கொடுத்தார். இந்த புகாரை தொடர்ந்து ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் சேகர் என்பவர் தான் ரயில் தண்டவாளத்தில் டயர்களை வைத்தது தெரியவந்தது. மேலும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், ஈரோடு ரயில்வே காவல் ஆய்வாளர் சின்னத்தங்கம் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply