சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஸ்வந்த்திற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நீதிமன்றம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை போரூர் அருகே உள்ள மவுலிவாக்கத்தில் வசித்த மென்பொறியாளர் பாபுவின் மகள் சிறுமி ஹாசினி. கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் என்பவரால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொலை செய்யப் பட்டார். இதனைத் தொடந்து மாங்காடு காவலர்கள் வழக்குப் பதிவு செய்து தஷ்வந்தை கைது செய்தனர். தஷ்வந்த் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்துசெய்ததையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீனில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தனது பெற்றோருடன் குன்றத்தூரில் வசித்து வந்தான்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிக்க பணம் கேட்டு தரமறுத்த அவரது தாய் சரளாவை தஸ்வந்த் கொலை செய்து விட்டு 25 சவரன் நகைகளையும் திருடிக் கொண்டு தப்பினான். தலைமறைவான தஷ்வந்தை மும்பையில் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து 3 நாட்களுக்கு போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் மும்பையில் இருந்து தஷ்வந்தை காவல்துறையினர் சென்னை அழைத்து வந்தனர்.தயார் சரளாவை கொன்ற வழக்கில் புழல் சிறையில் தஷ்வந்த் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாததால் தஸ்வந்த்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து புதனன்று (டிச. 13) துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்புடன் தஸ்வந்தை காவலர்கள் அழைத்து வந்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் தஸ்வந்திற்கு ஆதரவாக ஆஜராகியிருந்த வழக்கறிஞர் விஜயகுமார் இந்த வழக்கிலிருந்து விலகிக்கொண்ட நிலையில் நீதிபதி வேல்முருகன் தஸ்வந்திற் காக இலவச சட்டமையத்தின் மூலம் ராஜ்குமார் என்ற வழக்கறிஞரை நியமித்தார். பின்னர் வழக்கு விசாரணையை 18ம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

ஆர்ப்பாட்டம்

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஸ்வந்திற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தொடர்ந்து போராடி வருகிறது. தஸ் வந்தை நீதிமன்றத்திற்கு அழைத்துவரும் செய்தி அறிந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் நீதிமன்றத்தின் முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.மாதர் சங்க மாநிலச் செயலாளர் வா.பிரமிளா, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மபா.நந்தன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கு.மணிகண்டன் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வழக்கில் குன்றத்தூர் காவல் துறையினர் மெத்தனமாகச் செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

Leave A Reply

%d bloggers like this: