உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கில் கொலையாளிகளுக்கு தூக்குத்தண்டனைத் தீர்ப்பு வெளியான அன்றே மீண்டுமொரு ஆணவப் படுகொலைக்குத் துணிந்துள்ளனர் சாதி ஆதிக்க வெறியர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிவேகமான தலையீட்டின் காரணமாக காதலர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையைச் சேர்ந்தவர் பி.செல்வம். அதிமுக பிரமுகரான இவர் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரும்கூட. பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது மகள் சுவிதாவும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த நெம்பக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சித்திரைவேல் மகன் மனிதநேயமும் கரூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்துள்ளனர். அப்போது இவர்களுக்கு இடையே இருந்த நட்பு காதலாக மாறியது. இது சுவிதாவின் பெற்றோருக்குத் தெரிந்ததும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தான் மனிதநேயத்தையே கரம்பிடிப்பேன் என சுவிதா உறுதியாக இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுவிதாவின் உறவினர்கள் தங்களது சாதிக்குள்ளேயே வேறு ஒருவருக்கு கட்டாயத் திருமணம் செய்துவைக்க முயற்சித்துள்ளனர். சுவிதா கடந்த நவம்பர் 16-ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி புதுக்கோட்டைக்கு வந்து மனிதநேயத்தை சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் கோவிலில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதை அறிந்த சுவிதாவின் உறவினர்கள் இருவரையும் கொலைசெய்யும் நோக்கத்தில் பல்வேறு இடங்களில் தேடியும் மனிதநேயத்தின் உறவினர்களை மிரட்டியும் வந்துள்ளனர். இப்படி பல நாட்கள் அலைக்கழிக்கப்பட்ட அவர்கள் இறுதியாக புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

இந்த தகவல் சுவிதாவின் பெற்றோருக்குத் தெரியவரவே, சுவிதாவை மனிதநேயம் கடத்தி வந்துவிட்டதாகவும் அதனால், தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் கட்சித் தலைவர்களிடம் வந்து முறையிட்டனர். அங்கிருந்த சுவிதாவை அழைத்துக் கேட்டபோது, தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் தான் விரும்பியே மனிதநேயத்தையே திருமணம் செய்துகொண்டதாகவும் சுவிதா பெற்றோரிடம் கூறினார். ‘நீ வராவிட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டுவிடுவோம். அவன் உன்னை விபச்சாரத்திற்குப் பயன்படுத்தி விடுவான்’ என பல வழிகளில் கெஞ்சியும் மிரட்டும் தொனியிலும் பேசிப் பார்த்தனர். அப்போது, மனிதநேயம் மிகவும் நல்லவன். அவன் என்னை நன்றாகப் பார்த்துக்கொள்வான். இருவரும் படித்திருக்கிறோம். எங்கள் வாழ்க்கையை நாங்கள் விரும்பியபடி வாழ அனுமதியுங்கள் என்று கண்ணீர்மல்க பெற்றோரிடம் சுவிதா கூறினார்.

மேலும், பெட்டவாய்த்தலை காவல்நிலையத்தில் மகளைக் கடத்திவிட்டதாக கொடுத்துள்ள புகார் மனு தொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்பாக ஆஜரான சுவிதா, நானாக விரும்பித்தான் திருமணம் செய்துகொண்டேன். பெற்றோர் அளித்துள்ள புகாரின்படி என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தகுதியான வயதுடைய இருவரும் விரும்பி திருமணம் செய்துகொண்டதால் இதுகுறித்து மேலும் தொந்தரவு கொடுக்கக்கூடாது என சுவிதாவின் பெற்றோரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். இதற்கிடையில், மேற்படி காதலர்கள் இருவரையும் கடத்துவதற்கு பலவகையிலும் சாதி வெறியர்கள் ரவுடிகளை வைத்து முயற்சித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஜனநாயக மாதர் சங்கத்தினரின் அரவணைப்பில் இருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுவிற்கும் மேற்படி இருவரும் செவ்வாய்க்கிழமையன்று ஆஜராகினர். அப்போதும் என்னை யாரும் கடத்தவில்லை. விரும்பியே மனிதநேயத்தைக் கரம்பிடித்ததாக சுவிதா கூறினார். இதனையடுத்து அந்த மனு ரத்துசெய்யப்பட்டதோடு, இரண்டு பேரையும் பிரிப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது என சுவிதாவின் பெற்றோர் நீதிமன்றத்தால் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து மேற்படி இருவரும் மதுரையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி பேருந்தில் வந்துகொண்டிருந்தனர். பேருந்து மேலூர் அருகில் கீழையூர் என்ற இடத்தில் வரும்பொழுது, அடியாட்களுடன் பயங்கரமான கொலைவெறி ஆயுதங்களுடன் செல்வத்தின் அடியாட்கள் பேருந்தை மறித்துள்ளனர். மனிதநேயத்தை கொலைவெறியுடன் தாக்குவதற்கு முதலில் அவர்கள் முயற்சித்துள்ளனர். கூட இருந்த கட்சித் தோழர்கள் உயிரைப் பணயம் வைத்து மனிதநேயத்தைக் காப்பாற்றியுள்ளனர். இதற்கிடையில், கத்தி முனையில் சுவிதாவை அடியாட்கள் காரில் கடத்திச் சென்றுவிட்டனர்.

இந்தத்தகவல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மதுரை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தமிழக காவல்துறைத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு சுவிதாவை பத்திரமாக மீட்க வலியுறுத்தினார். மேலும், தோழர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் உள்ளிட்ட தோழர்களுடன் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் சென்று முறையிட்டனர். கடத்தலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட அனைவரின் தொலைபேசி எண்கள், அவர்களின் இருப்பிடம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் உடனடியாகச் சேகரிக்கப்பட்டு கட்சித் தலைமைக்கும் காவல்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அன்று இரவே கரூரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுவிதாவை காவல்துறையினர் மீட்டனர். மீட்கப்பட்ட சுவிதாவும் கடத்தலில் ஈடுபட்ட அவரின் தந்தை செல்வம் உள்ளிட்ட 10 அடியாட்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சுவிதா கணவர் மனிதநேயத்துடன் ஒப்படைக்கப்பட்டார். மகளைக் கடத்திய செல்வம்(54) மற்றும் கடத்தலுக்கு உதவியாக இருந்த விவேக் (20), ராமச்சந்திரன் (31), சக்திவேல்(34), பழனி உள்ளிட்ட 10 பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆணவக்கொலைக்கு எதிராக எவ்வளவு கடுமையான தண்டனை வழங்கப்பட்டாலும் சாதி ஆதிக்க வெறியர்கள் தங்களின் கொடூரமான வக்கிரங்களை அரங்கேற்றத் தயங்குவதில்லை என்பதையே உடுமலைப்பேட்டை சங்கரின் வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அதே நாளில் மீண்டுமொரு படுகொலைக்குத் திட்டமிடப்பட்ட சம்பவம் அரங்கேற்றியுள்ளது.

Leave A Reply