வாக்குகளைப் பெறுவதற்காக வாக்காளர்களிடம் பொய் சொல்வதற்கும் தயங்கக் கூடாது என்று கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான கே.எஸ்.எஸ்.ஈஸ்வரப்பா ஒரு கூட்டத்தில் பேசியது இப்போது அம்பலமாகி இருக்கிறது. இவர் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தின் கொப்பல் பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் டிசம்பர் 4ஆம் தேதி பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

“மத்தியில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், கர்நாடகாவிற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து பாஜக எடுத்துக் கொண்டிருக்கும் அனைத்து முயற்சிகளையும் பற்றி மக்களிடம் நாம் சொல்ல வேண்டும். பிற்படுத்தப்பட்ட சாதியினர், அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினர், விவசாயிகள், பெண்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதை நீங்கள் சொல்ல வேண்டும். நாமெல்லாம்  அரசியல்வாதிகள். எதையாவது பற்றிப் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதைப் பற்றித் தெரியாது என்று நாம் ஒருபோதும் சொல்லக்கூடாது. அது பற்றி உண்மையிலேயே உங்களுக்கு எதுவும் தெரியாது என்றால், ஏதாவது பொய் அல்லது உங்களுக்குத் தெரிந்த எதையாவது சொல்லுங்கள்” என்று அந்த வீடியோவில் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். மேலும் பாஜகவின் சாதனைகளை விளக்குவதற்கு பிரதமர் மோடியின் அணுகுமுறையைப் பயன்படுத்துமாறும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

“வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்தியாவைத் தாக்குவதற்கான தைரியம் பாகிஸ்தானுக்கு இருந்ததில்லை. ஆனால் மன்மோகன்சிங் பிரதமர் ஆனபோது ​​இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர் என்று நீங்கள் சொல்ல வேண்டும். மோடி பிரதமராக ஆன உடனே 10 பாகிஸ்தான் வீரர்களின் கதையை அவர் முடித்தார் என்று நீங்கள் கூற வேண்டும். நீங்கள் இவ்வாறு எதையாவது சுத்தி விட வேண்டும். நீங்கள் இந்த விஷயங்களைப் பற்றி ஒன்றும் அறிந்திருக்கவில்லை என்றால், ஒன்றும் பிரச்சனையில்லை. பிரதமர் மோடியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிய கதையை அவிழ்த்து விடுங்கள். நீங்கள் கூறப் போகும் பொய்யால், என்ன நடக்கிறது என்பதைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் யார் வீட்டிற்காவது போகும் போது, அங்கே இருப்பவர்கள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமராக இருந்தபோது நல்ல நிர்வாகத்தை வழங்கினார் அல்லது முதலமைச்சர் சித்தாராமையா தலித்துகளுக்கு நிறையச் செய்திருக்கிறார் என்று சொல்லும் போது, நீங்கள் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தால், நாம் கடையை மூடிக் கொண்டு செல்ல வேண்டியதுதான்“ என்று ஈஸ்வரப்பா ஆலோசனை வழங்கினார்.

வெளியிடப்பட்டிருக்கும் அந்த வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ​​ அது எங்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்று மட்டும் கூறிய அவர் மேற்கொண்டு கருத்து எதனையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்,.

’காதலிலும், போரிலும் அனைத்தும் நியாயமானதே’ என்றொரு பழமொழி இருக்கிறது ஆனால் அரசியல் என்பது ஒரு போரோ அல்லது ஒரு காதல் விவகாரமோ அல்ல. அரசியல் என்பது ஒரு உன்னதமான சேவையாகக் கருதப்படுகிறது, தாங்கள் விரும்புகின்ற தலைவர் ஒருவரை மக்கள் தங்களுடைய பிரதிநிதியாக தேர்வு செய்து, தங்களுடைய குறைகளைச் சரிசெய்வதற்காக பாராளுமன்றத்திற்கு அனுப்புகிறார்கள். அரசியல் என்ற சேவையைத் தேர்ந்தெடுத்து அதற்குள் நுழைபவர்கள், மக்களின் வாழ்க்கையைச் சீர்திருத்த வேண்டுமென்ற எண்ணம் கொண்டவராக, சமுதாயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய மிக உயர்ந்த ஒழுக்க நெறிகளை நம்புவர்களாக இருக்க வேண்டும். .

https://thelogicalindian.com/news/k-s-eshwarappa/

-தமிழில்: முனைவர் தா. சந்திரகுரு விருதுநகர்.

Leave A Reply

%d bloggers like this: