புதுதில்லி;
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை மட்டும் விசாரிக்கும் வகையில், சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நீதிமன்றங்களை மார்ச் 1 முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.இந்தியா முழுவதும் சுமார் 1851 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தங்களின் மனுக்களை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

பாஜக-வைச் சேர்ந்த அஸ்வினி குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு வில், ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு விட்டாலே அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்; அத்துடன், தேர்தலில் போட்டியிடுவோருக்கு கல்வித் தகுதி மற்றும் அதிகபட்ச வயது வரம்பு ஆகியவற்றையும் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.இம்மனுக்கள், கடந்த நவம்பர் 1-ஆம் தேதி, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “குற்றப் பின்னணி உடைய நபர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கி உள்ளதாகவும், வாழ்நாள் தடை விதித்தால் மட்டுமே அரசியலில் இருந்து குற்றச்செயல்களை குறைக்க முடியும்” என்றும் தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்தது.
ஆனால், குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க முடியாது என்று, மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து, நாடு முழுவதும் அரசியல்வாதிகள் மீது 1,581 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படும், தற்போது அவற்றின் நிலை என்ன? என்றும், “நாடு முழுவதும் அரசியல்வாதிகள் மீது தொடரப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கலாமா?” என்றும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினர்.இதுதொடர்பாக, செயல் திட்டம், நிதி ஆதாரம் உள்ளிட்ட அறிக்கையை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.அதனடிப்படையில், மத்திய அரசு செவ்வாயன்று தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், :”நாடுமுழுவதும் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது:முதற்கட்டமாக நாடு முழுவதும் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்; தேவை ஏற்பட்டால் சூழ்நிலைக்கு ஏற்ப கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்” என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று இவ்வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு, “எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அமைக்கலாம்” என்று அனுமதி வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், “இந்த சிறப்பு நீதிமன்றங்கள் எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை மட்டுமே விசாரித்து ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்கும்” என்ற தெரிவித்தனர்.மேலும், சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீட்டை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உடனடியாக செய்து, மார்ச் 1-ஆம் தேதி முதல் சிறப்பு நீதிமன்றங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீது அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கும் தமிழ்நாடு, ஆந்திரா, பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைய உள்ளன.

Leave A Reply

%d bloggers like this: