கோவை, டிச.14-
போக்குவரத்து தொழிலாளர்களின் 13வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக முடிக்க வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டங்கள் நடைபெற்றன.

போக்குவரத்து தொழிலாளர்களின் 13வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக முடிக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் ரூ.7 ஆயிரம் கோடி பணப்பலன்களை விரைவில் வழங்க வேண்டும். போக்குவரத்து ஒய்வூதியர்களுக்கு மாத,மாதம் முறையாக ஒய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வியாழனன்று கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

அலுவலக வளாகத்தில் தொழிலாளர்கள் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதன்பின் கோரிக்கைகளை வலியுறுத்தி எல்பிஎப் சார்பில் ரத்தினவேலு, பெரியசாமி, சம்பத், சிஐடியு சார்பில் காளியப்பன், அருணகிரிநாதன், ஏஐடியுசி சார்பில் செல்வராஜ், சண்முகம், எச்எம்எஸ் சார்பில் ராஜா, குப்புசாமி, வி.சி.ரவி, தேமுதிக ரவி, பாமக சிதம்பரம், மதிமுக குமரன் ஆகியோர் பேசினர். இந்த போராட்டத்தில் கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், கருமத்தம்பட்டி, அன்னூர் உள்ளிட்ட கோவை மண்டலத்துக்கு உட்பட்ட ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பணியாளர் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். இந்த போராட்டம் வெள்ளியன்றும் தொடர்கிறது.

சேலம்:
இதேபோல், சேலம் தலைமை போக்குவரத்து பணிமனையின் வளாகத்தினுள்ளேயே போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டு நாள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதில் சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.செல்வகுமார், எல்பிஎப் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்டு அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சேலம் மாநகரம் மணக்காடு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இதே கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சிஐடியு சேலம் கோட்டதலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து கழக சங்கத்தின் மாநில துணைத் தலைவர் முருகேசன், எல்பிஎப் மகாலிங்கம், பிடிஎஸ் செந்தில்குமார் உள்ளிட்டு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

திருப்பூர்:
திருப்பூர் அரசு போக்குவரத்து பணிமனையில் அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு சார்பில் என்.சுப்பிரமணி, தொமுச சார்பில் துரைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.