இராமேஸ்வரம்;
கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக விரட்டியடித்த சம்பவம் நடந்துள்ளது.இரண்டு நாட்களுக்கு முன்புதான் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். மேலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி 27 மீனவர்களை படகுகளுடன் சிறைப்பிடித்துச் சென்றனர். இந்நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமையன்று கடலுக்குச் சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் வியாழக்கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு 8-க்கும் மேற்பட்ட ரோந்துக் கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டியதுடன், தங்களது ரோந்துக் கப்பல்களை மீனவர்களின் படகுகள் மீது மோதச் செய்து, அவற்றை சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.மேலும் மீனவர்களின் படகுகளில் ஏறி, மீன்பிடி சாதனங்கள், வலைகளைச் சேதப்படுத்தியதுடன், மீனவர்கள் சிலரையும் தாக்கியுள்ளனர்.இதையடுத்து, இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் அங்கிருந்து வேகவேகமாக கரைக்குத் திரும்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.