மதுரை;
மணல்குவாரிகளை மூட உத்தரவிட்ட தனி நீதிபதி ஆர். மகாதேவனின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது.தமிழகத்தில் 6 மாதத்தில் மணல் குவாரிகளை மூட வேண்டும், சென்னையைத்தவிர மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த நவம்பர் 29-ஆம் தேதி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. இதனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வரவேற்றிருந்தனர்.

ஆனால், தனி நீதிபதி ஆர். மகாதேவனின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள், உயர் நீதிமன்ற கிளையின் விரிவடைந்த அமர்வில் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் கே. கல்யாணசுந்தரம், டி. கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு, டிசம்பர் 5-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான, அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன், “மணல் பற்றாக்குறை இருக்கும் நிலையில், அனைத்து மணல் குவாரிகளை மூட தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்; இதனால் அரசுத்தரப்பில் மேற்கொள்ளப்படும் பணிகளும் மாநிலம் முழுவதும் பாதிக்கும் நிலை உள்ளது: எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ஏற்க முடியாது; தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.ஆனால், மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.அதன்படி புதன்கிழமையன்று நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன், மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துரைத்து வாதிட்டார். எதிர் மனுதாரரான ராமையா தரப்பு வழக்கறிஞரும் தமது வாதத்தை எடுத்து வைத்தார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: