மதுரை;
திருச்சியில் உள்ள ‘பெல்’ நிறுவனத்தின் ரூ. 2000 கோடி மதிப்பிலான டெண்டருக்கு  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
திருச்சியில் உள்ள ‘பெல்’ நிறுவனமானது, உதிரி பாகங்கள் தயாரிப்பு தொடர்பாக ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டரை விடுத்திருந்தது. இந்த டெண்டருக்காக பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.இந்நிலையில், துவாக்குடியைச் சேர்ந்த சிறு, குறு தொழிற்சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், திருச்சி ‘பெல்’ நிறுவனத்திற்கான உதிரி பாகங்களை தயாரித்துக் கொடுக்கும் பணி, திருச்சி சுற்றுவட்டார பகுதியிலுள்ள 500-க்கும் மேற்பட்ட சிறு-–நடுத்தர நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டு வந்தன; இந்த நிறுவனங்களும் கடந்த 40 ஆண்டுகளாக, தரமாகவும், குறைந்த விலையிலும் ‘பெல்’ நிறுவனத்துக்கு பொருட்களை தயாரித்துக் கொடுத்து வந்தன.

‘பெல்’ நிறுவனத்தின் உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபடும் சிறு-குறு தொழில் நிறுவனங்கள் மூலம் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர்.
இந்நிலையில் ‘பெல்’ நிறுவனத்தின் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர், நாக்பூரின் சீம் நிறுவனம் 20 சதவிகிதம் விலை குறைவாக பொருட்களை செய்து தருவதாக குறிப்பிட்டுள்ளதால், அந்த நிறுவனத்திற்கு பணிகளை வழங்க முயற்சி நடக்கின்றன.

இதுதொடர்பாக பெல் நிறுவனத்தை அணுகியபோது, சீம் நிறுவனம் குறிப்பிட்ட தொகையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு பொருட்களை உற்பத்தி செய்து தர முடியுமா? என ‘பெல்’ நிறுவனம் கேட்கிறது. பொதுவாக 3 முதல் 5 சதவிகிதம் மட்டும் லாபம் கிடைக்கும் தொழிலில் 20 சதவிகித விலை குறைப்பு செய்யப்படுகிறது என்றால், அந்தப் பொருட்கள் தரமாக இருக்குமா? என சந்தேகம் எழுகிறது. எனவே, இந்த டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்களின் கோரிக்கையை ஆய்வு செய்த நீதிமன்றம், ‘பெல்’ நிறுவனத்தின் டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்தது. டெண்டர் விதிமுறைகள் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு எதிராக உள்ளது என்றும் அப்போது தெரிவித்த நீதிமன்றம், இவ்வழக்கு தொடர்பாக, ‘பெல்’ நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

Leave A Reply

%d bloggers like this: