ஈரோடு, டிச.13-
பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 1.1.2017முதல் ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீரழிக்க செய்யும் துணை டவர் நிறுவனம் அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதனன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இதன்ஒருபகுதியாக, ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், ஈரோடு காந்திஜி சாலையில் அமைந்துள்ள பொதுமேலாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் எல்.பரமேஷ்வரன் தலைமை வகித்தார். எஸ்என்இஎ மாநில அமைப்பு செயலாளர் சி.பரமசிவம், பிஎஸ்என்எல் அமைப்புச் செயலாளர் வி.மணியன், மாநில துணை செயலாளர் என்.குப்புசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். என்எப்டிஇ மாநில அமைப்பு செயலாளர் புண்ணியக்கோடி, எஸ்என்இஎ மாவட்ட தலைவர் சண்முகம், எஐபிஎஸ்என்எல்இஎ மாவட்ட தலைவர் தனுஷ்கோடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 1,175 ஊழியர்களும், 200 தற்காலிக பணியாளர்களும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் சேலம் மாவட்டத்திலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகங்களில் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேலம் மாநகரம் பழைய பேருந்து நிலையம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இ.கோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல், சேலம் தலைமை அலுவலகம் மற்றும் செவ்வாய் பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave A Reply

%d bloggers like this: