புதுதில்லி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் மது கோடா உள்பட  6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தண்டனை விபரம் நாளை வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முந்தைய காங்கிரஸ்  தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஜ்ஹாரா என்ற பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் மேற்குவங்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.  இதில் அந்த தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலர் குப்தா, முன்னாள் ஜார்க்கண்ட் தலைமைசெயலர் ஏ.கே. பாசு உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் சாட்சியங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து இன்று (டிசம்பர் 13) தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் குப்தா, ஜார்கண்ட் முன்னாள் தலைமை செயலாளர் அசோக் குமார் பாசு, உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என சட்டப்பிரிவு 120 பி.,யின் கீழ் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான தண்டனை விபரம் நாளை(டிச.,14) அறிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: