விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் மீது சங்பரிவாரத்தினர் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். அவர் தலைக்கு விலை நிர்ணயிக்கின்றனர். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் கூறுகின்றனர். என்ன காரணம்? பாபர் மசூதி இடிப்பு நாளான டிசம்பர் 6 அன்று திருமா பேசியதை வி.சி.க. காணொளியாக வெளியிட்டுள்ளது. அதில் திருமாவின் உரை கீழ்கண்டவாறு உள்ளது:“…இன்றைக்கு சிவன் கோவில்களும் பெருமாள் கோவில்களும் இருக்கிற இடங்கள் எல்லாம் பவுத்த விஹார்களாக இருந்தன. பவுத்த விஹார்களை இடித்து தள்ளிவிட்டுத்தான் சிவன் கோவில்களையும் பெருமாள் கோவில்களையும் கட்டி இருக்கிறீர்கள். எனவே அதையெல்லாம் இடித்து தரைமட்டமாக்கிவிட்டு அந்த இடங்களில் எல்லாம் பவுத்த விஹார்களை கட்ட வேண்டும். உங்கள் வாதத்திற்காக சொல்லுகிறேன்.”திருமாவளவன் மேலும் கூறுகிறார்:

“……..பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவிலை கட்டுவது சரியான வாதம் என்றால் திருப்பதி ஏழுமலையான் இருக்கும் இடத்தில் பவுத்த விஹாரை கட்டவேண்டும்; திருவரங்கநாதன் படுத்திருக்கும் இடத்தில் பவுத்த விஹாரை கட்டவேண்டும்; காஞ்சி காமாட்சி அம்மன் இருக்கும் இடத்தில் பவுத்த விஹாரை கட்டவேண்டும்; இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.”
-(ஆதாரம்: https://www.youtube.com/watch?v=uOEyzewuS8A)

– இந்த உரைதான் சங் பரிவாரத்தினருக்கு ஆத்திரத்தைத் தந்துள்ளது. திருமா அவர்கள் முன்வைத்த வரலாற்று நிகழ்வை எவரும் குறை கூற முடியாது. ஏனெனில் அது வரலாற்று உண்மை. அதற்கு மறுக்க முடியாத சான்றுகள் உண்டு. அதே சமயத்தில் தமிழகம் உட்பட இந்திய மண்ணில் பெரு மதங்களுக்கு இடையே நிலவிய ஒற்றுமைகளும் முரண்பாடுகளும் மிகவும் சிக்கலான வரலாற்றை கொண்டது.

தமிழக மண்ணில் மதங்களிடையே முரண்பாடுகள்
கி.பி. 3ம் நூற்றாண்டுக்கு பின்னர் தமிழகத்தில் பவுத்தம், சமணம், சைவம், வைணவம் ஆகிய மதங்களுக்கிடையே கடுமையான போட்டியும் முரண்பாடுகளும் நிலவின. மக்களையும் மன்னர்களையும் தம்பக்கம் கவர்ந்திழுக்க கடும் முயற்சிகள் நடந்தன. பல சமயங்களில் இந்த முரண்பாடுகள் கலகங்களிலும் படுகொலைகளிலும் முடிந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக கோவில்களும் அழிக்கப்பட்டன அல்லது மாற்றப்பட்டன. மேற்கண்ட நான்கு மதங்களுமே தமக்கிடையே சண்டையிட்டுக்கொண்டன. பவுத்தம் மற்றும் சமணத்திற்கிடையே கூட முரண்பாடுகள் இருந்தன.கி.பி. 5 அல்லது 6ம் நூற்றாண்டிற்குப் பிறகு சமணம் செல்வாக்கு பெற பவுத்தம் வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. அப்பொழுது பல பவுத்தக் கோவில்கள் சமணக் கோவில்களாக மாறின. சில இடங்களில் பவுத்தர்களுக்கும் சமணர்களுக்கும் இடையே எவரது சமயம் சிறந்தது என வாதப்போர் நடைபெற்றது. இதில் பெரும்பாலும் சமணர்களே வென்றனர். அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பவுத்த பிட்சுக்கள் இலங்கை உட்பட பல இடங்களுக்கு துரத்தப்பட்டனர் அல்லது இடம் பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

சமணர்கள் மட்டுமல்ல; சைவ மற்றும் வைணவ பிரிவினரும் வாதப்போரில் பவுத்தர்களை தோற்கடித்து துரத்தியுள்ளனர். சாத்தமங்கை போன்ற இடங்களில் சம்பந்தர் பவுத்தர்களை தோற்கடித்து அவர்களை சைவராக்கினார். மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் பவுத்தர்களை வாதத்தில் தோற்கடித்து அவர்களை இலங்கைக்கு துரத்தினார்.நாகப்பட்டினம் ஒரு காலத்தில் பவுத்தத்தின் புண்ணிய நகரமாக இருந்துள்ளது. இத்தகைய நாகையிலிருந்து கி.பி. 8 அல்லது 9ம் நூற்றாண்டில் ஒரு புத்தர் கோவிலில் இருந்த முழுதும் தங்கத்தாலான புத்தர் சிலையை திருமங்கையாழ்வார் கவர்ந்து கொண்டு போய் அதனை உருக்கி அதில் வந்த வருமானம் மூலம் திருவரங்கம் கோவிலில் பல பணிகளைச் செய்தார் என குருபிரம்பரப் பிரபாவம் எனும் வைணவ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(மயிலை சீனி வெங்கடசாமி/பவுத்தமும் தமிழும்/பக்:46-47).

கி.பி. 640ல் காஞ்சிக்கு வந்த யுவான்சுவாங் அங்கு நூறு புத்தர் கோவில்கள் இருந்தன எனவும் ஆயிரம் புத்த பிட்சுக்கள் இருந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்த கோவில்கள் பலவும் பவுத்தத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சமணக் கோவில்களாக மாறின. சமணத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சைவ அல்லது வைணவக் கோவில்களாக மாற்றப்பட்டன.காஞ்சியில் உள்ள கச்சீஸ்வரர் கோவில் ஒரு காலத்தில் புத்த கோவிலாக இருந்தது எனக் குறிப்பிடுகிறார் தி.அ. அனந்தநாத நயினார்.(திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைனசமய சித்தாந்தமும் பக்: 126/1932). காஞ்சியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் ஆதியில் புத்தரின் தாராதேவி ஆலயமாக இருந்துள்ளது. இங்கு இருந்த 6 அடி உயர புத்தர் சிலை தற்பொழுது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது.
(மயிலை சீனி வேங்கடசாமி/பவுத்தமும் தமிழும்/பக்:52.)

கேரள மாநிலத்தில் உள்ள திருவிதாங்கூரில் திருச்சாணத்துமலை எனும் இடத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் முற்காலத்தில் பவுத்த கோவிலாகவும் பின்னர் சமண கோவிலாகவும் இருந்துள்ளது. பின்னர் பகவதி கோவிலாக மாறியுள்ளது. கேரளாவில் உள்ள பல சாத்தன் கோவில்கள் பவுத்தக் கோவில்களாக இருந்துள்ளன. பின்னர் அவை பகவதி அம்மன் கோவில்களாக மாறியுள்ளன.
(மயிலை சீனி வெங்கடசாமி/பவுத்தமும் தமிழும்/பக்:66.)

கோவில்கள் மட்டுமின்றி பவுத்தர்களின் குகைகளும் இதே வழியில் பறிபோயின. பல மலைக் குகைகளில் புத்த பிட்சுக்கள் வாழ்ந்து வந்தனர். பவுத்தம் வீழ்ச்சி அடைந்து சமணம் செல்வாக்கு பெற்ற பொழுது இத்தகைய குகைகள் சமண துறவிகள் வாழும் இடங்களாக மாறின. பின்னர் சமணம் வீழ்ச்சி அடைந்த பொழுது இவை சைவ அல்லது வைணவக் கோவில்களாக மாறின. அவ்வாறு மாறிய பொழுது இவை பஞ்சபாண்டவர் குகைகளாக பெயர் பெற்றன. இவை பஞ்சபாண்டவர் வாழ்ந்த இடங்கள் என்று திரும்பத் திரும்பக் கூறப்பட்டு அதை மக்கள் நம்பவும் தலைப்பட்டனர். இவ்வாறு மாறிய சில குன்றுகள்:                                  அழகர் மலை, கொங்கர் புளியங்குளம், கீழவளவு, முத்துப்பட்டி(மதுரை), நாகமலை(மதுரை), திருப்பரங்குன்றம், சித்தர் மலை குன்னக்குடி, ஆனைமலை(மதுரை) என இப்பட்டியல் நீளமானது.
(மயிலை சீனி வேங்கடசாமி/பவுத்தமும் தமிழும்/பக்:62-64.)

பவுத்தம் – சமணம் மீது ஆழமான வெறுப்பு
பவுத்தர்கள் மற்றும் சமணர்கள் மீது சைவத்திற்கும் வைணவத்திற்கும் எத்தகைய வெறுப்பு இருந்தது என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடியது. தொண்டரடி ஆழ்வார் கூறுகிறார்:
“சமணர் மற்றும் சாக்கியர்(பவுத்தர்) தலையை ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய் அரங்க மாநகர் உளனே”
சமணர் மற்றும் பவுத்தர் தலையை அறுப்பதே தனது கடமை எனவும் அதற்கு அரங்கநாதர் அருள வேண்டும் எனவும் பாடியுள்ளார்.இதே போல திருஞானசம்பந்தர் கீழ்கண்டவாறு வெறுப்பை உமிழ்கிறார்:

“புத்தரும் புத்தியில்லாத சமணரும் பொய்ம்மொழியல்லாமல்
மெய்த்தவம் பேசிடமாட்டார் வேடம்பலப் பலவற்றால்
சித்தரும் தேவருங்கூடிச் செழுமலர் நல்லனகொண்டு பக்தர்கள் தாம் பணிந்தேத்தும் பாண்டிக்கொடு முடியாரே”

இன்னொரு கட்டத்தில் சம்பந்தர் பாடுகிறார்:

“பெண்ணகத் தெழிற் சாக்கியப் பேயமண்
பெண்ணர், கற்பழிக்கத் திருவுள்ளமே”

சமண மற்றும் பவுத்த பெண்கள் அனைவரையும் தான் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி விடுவேன் என்கிறார். இவையெல்லாம் பவுத்தம் மற்றும் சமணத்திற்கு எதிராக சைவ மதத்தினருக்கு கட்டுக்கடங்காத வன்மமும் வெறுப்பும் இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது.

(பெரியபுராணம் இரண்டாம் காண்டம் சம்பந்த சுவாமிகள் வரலாறு; திருவண்ணாமலை ஆதினம் திரு. ஆறுமுகத்தம்பிரான் 1885ல் வெளியீடு.
பின்னர் 1950ல் திருப்பனந்தாள் மடம் வெளியிட்ட தொகுதியில் “பெண்ணர்” என்பதை “தெண்ணர்” என திருத்தப்பட்டுள்ளது/திருவாரூர் தங்கராசு/சம்பந்தர் நாடகம்/பக்.140)

தமிழகத்தில் மட்டுமல்ல; இன்று இந்தியா என அறியப்படும் அன்றைய பூகோளப் பகுதியின் பல இடங்களில் புத்தர் கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன.
பூரி ஜெகநாதர் கோவில் ஒரு காலத்தில் புத்தக் கோவிலாக இருந்துள்ளது. இதனை விவேகானந்தரே கூறியுள்ளார். அதுமட்டுமல்ல; விவேகானந்தர் மேலும் கூறுவதைக் கேளுங்கள்:“………பூரி ஜெகநாதர் கோவில் ஒரு பழைய புத்தர் கோவிலாகும். அதனையும் அதனைப் போல பலவற்றையும் எடுத்து நாம் இந்துமயமாக்கியுள்ளோம். இன்னும் இதைப்போல பலவற்றை நாம் செய்ய வேண்டியுள்ளது.”
(ஆதாரம்:http://www.vivekananda.net/Lectures/LecturesColomboAlmora/12.html).

புத்தர் கோவில்கள் இந்துக் கோவில்களாக மாற்றப்பட்டன என்பதற்கு விவேகானந்தர் வாக்குமூலத்தைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

இஸ்லாம்- கிறித்துவத்தின் பிரவேசம்                                                                                                                                        பவுத்தம், சமணம், வைணவம், சைவம் ஆகிய மதங்களுக்கு இடையே முரண்பாடுகள் நிலவிய சூழலில்தான் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பு தொடங்குகிறது. ஆரம்பகாலத்தில் குறிப்பாக கஜினிவாடி சுல்தான்கள் காலத்தில் கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாயின. எனினும் பின்னர் வந்த சுல்தான் மற்றும் முகலாய மன்னர்கள் காலத்தில் முரண்பாடுகள் நிலவினாலும் கோவில்கள் பெரும்பாலும் பாதுகாக்கப்பட்டன. புதிய கோவில்கள் கட்டவும் முஸ்லிம் மன்னர்கள் உதவினர். அக்பர் மற்றும் திப்பு சுல்தான் ஆகிய மன்னர்கள் மட்டுமல்ல; முகம்மது பின் துக்ளக், இப்ராகிம் லோடி, ஜஹாங்கீர், ஷாஜஹான் உட்பட பல இஸ்லாமிய மன்னர்கள் கோவில்களை பாதுகாத்தனர்.மறுபுறத்தில் பல இந்து மன்னர்கள் மசூதிகளை கட்டிக் கொடுத்த உதாரணங்களும் உண்டு. இதில் குறிப்பிடத்தக்கவர்கள் விஜயநகர மன்னர்களும் மராட்டிய மன்னர் சிவாஜியும் ஆவர். சிவாஜியின் படையில் இருந்த 1,60,000 வீரர்களில் 70,000 வீரர்கள் இஸ்லாமியர்கள். அக்பரை எதிர்த்துப் போரிட்ட மகா ராணாவின் படைக்குத் தளபதி ஹக்கிம்கான் சூர் எனும் இஸ்லாமியர். மறு புறத்தில் அக்பர் படைக்குத் தளபதி மான்சிங் எனும் இராஜபுத்திர வீரர். இப்படி மத்திய காலம் முரண்பாடுகளையும் ஒற்றுமையும் கலந்த கலவையாகவே இருந்தது.

பின்னர் கிறித்துவம் இந்தியாவை வந்தடைந்தது. கிறித்துவமும் தன்னை நிலைநிறுத்த முயன்ற பொழுது புதிய முரண்பாடுகள் தோன்றின. 1857 கிளர்ச்சியில் வீரத்துடன் போரிட்ட பேகம் ஜீனத் மகால் ஆங்கிலேயர்கள் கோவில்களையும் மசூதிகளையும் அழித்துவிட்டு மாதா கோவில்களை கட்ட முயல்வதாக பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார். இந்திய மண்ணில் பவுத்தம், சமணம், இந்து மதம், இஸ்லாம், கிறித்துவம் ஆகிய ஐந்து மிகப்பெரிய மதங்களிடையே ஒற்றுமையும் வேற்றுமைகளும் நிலவின. இதன் விளைவாக முரண்பாடுகள் மட்டுமல்ல; ஆயிரக்கணக்கில் ஒற்றுமைக்கான உதாரணங்களையும் இந்திய வரலாறு தன்னகத்தே கொண்டுள்ளது. எனவேதான் இந்தியாவை பன்முகத்தன்மை கொண்ட தேசம் என அழைக்கிறோம்.

இந்த பன்முகத்தன்மையை அழிக்கத்தான் சங்பரிவாரத்தினர் முயல்கின்றனர். அதை எதிர்த்த குரல்களை மேலும் மேலும் வலுப்படுத்துவோம்.

Leave A Reply

%d bloggers like this: