கோவை, டிச.13-
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை கூட்டம் தாக்கியதில் மூதாட்டி ஒருவர் பலியானார். மற்றொரு பெண் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் செவ்வாயன்று நள்ளிரவில் நான்கு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. இதன்பின் அங்கிருந்த ரேசன் கடையை உடைத்து அரிசி மூட்டைகளை சிதைத்து உண்டன. இதுதொடர்பாக அப்பகுதியினர் அளித்த தகவலைதொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானை கூட்டத்தை பட்டாசுவெடித்து விரட்டனர். இதில் யானை கூட்டம் இரண்டாக பிரிந்தது. இதில் ஒரு யானை கூட்டம் பயனீர் என்ற தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் புகுந்தது.

இதையடுத்து அதனை வனத்திற்குள் விரட்ட முயன்ற நிலையில், அந்த வழியே வந்த ராமாத்தாள் என்ற 80 வயது மூதாட்டியை காட்டு யானை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், துளசியம்மாள் என்ற மற்றொரு பெண்ணையும் தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்பின் யானை கூட்டம் வனத்திற்குள் சென்றது. அதேநேரம், ஒன்றை யானை மட்டும் வனத்திற்குள் செல்லாமல் அப்பகுதியிலேயே சுற்றி வந்தது. வன எல்லையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமங்களில் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் சுற்றி வருகிறது. இதைத்தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வரும் வனத்துறையினர், அதனை வந்த வழியிலேயே விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் யானை உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துளனர்.

Leave A Reply

%d bloggers like this: