2017 டிசம்பர் 12

தன்னுடைய வாழ்க்கையைச் சமாளிப்பதற்காக சம்பாதிக்க விரும்புகின்ற வழக்கறிஞர் ஒருவர் வழக்கு ஒன்றை எடுத்து நடத்துகிறார் என்றால், அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனாலும் அது நன்றாக இருப்பதாக நமக்குத் தெரியவில்லை” என்று பேச்சின் வேகத்தைக் கூட்டுவதற்கு முன்பாக மென்மையான சுருதியில் தனது பேச்சை பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பிக்கிறார். அவர் யாரைப் பற்றிப் பேசுகிறார் என்பதை அவருடைய ஆதரவாளர்களில் பலரும் அறிந்தே வைத்திருக்கின்றார்கள்.  அகமதாபாத்திற்கு வடக்கே 25 கி.மீ, தூரத்திலிருக்கும் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள கலோல் நகரத்தில் நடைபெறும் கூட்டத்தில் இருந்த அவர் பேச ஆரம்பித்த போது, சிலர் “கபில்சிபல்” என்று உடனடியாகப் பதிலளித்தார்கள்.

டிசம்பர் 8, வெள்ளிக்கிழமை. அயோத்தி விவகாரம் தொடர்பாக விசாரணையை 2019க்குத் தள்ளிப் போடுமாறு உச்சநீதிமன்றத்திடம் கபில்சிபல் கோரிக்கையை வைத்து மூன்று நாட்களுக்கு அப்புறம் வந்தது. அந்த மூன்று நாட்களும் குஜராத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி அனைத்துக் கூட்டங்களிலும் திரும்பத் திரும்ப அதையே கூறி வந்தார். கபில்சிபல் ஒரு வழக்கறிஞர் மட்டுமல்ல. அவர் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவரும்கூட. 19ஆம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து வருகின்ற பிரச்சனை ஒன்றைத் தீர்ப்பதற்கு காங்கிரஸ் தயாராக இல்லை என்பதையே கபில்சிபலின் கருத்துக்கள் காட்டுகின்றன. அவர் தெரிவித்த கருத்துக்களில் இருந்து காங்கிரஸ் கட்சி ஒதுங்கிக் கொண்டாலும், தான் சன்னி வக்ஃப் போர்டை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதை கபில்சிபலே தெளிவுபடுத்தியிருந்தாலும், அந்த முஸ்லீம் அமைப்பு அந்த வழக்கோடு தொடர்புடையது என்பதால் மோடி இனவாத துருவமுனைப்பை ஏற்படுத்தும் அந்த விவகாரத்தை, குஜராத் தேர்தலுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக வந்த வாய்ப்பை, மோடி நழுவ விடவில்லை. அதை அப்படியே விட்டு விடுவதற்கான அடையாளங்கள் எதுவும் அவரிடம் இல்லை.

சொல்லுங்கள். நீங்கள் சன்னி வக்ஃப் வாரியத்தின் வழக்கறிஞர் இல்லையென்றால், எங்களிடம்   குறைந்தபட்சம் சொல்லுங்கள் என்று கூறும் போதே தனது குரலை உயர்த்திக் கொண்டு அவர், நீங்கள் ராமர் கோவிலை விரும்புகிறவர்களின் வழக்கறிஞரா அல்லது பாபர் மசூதியை வேண்டுகின்றவர்களின் வழக்கறிஞரா? என்று கேட்கிறார். கூட்டம் பலமாகக் கைதட்டுகிறது.

குஜராத் தேர்தல்களுக்கு முந்தைய கடைசி வாரத்தில் பிரதமரால் பயன்படுத்தப்பட்ட பல வகுப்புவாதப் பிரச்சனைகளுக்குள், அயோத்தி சர்ச்சையும் ஒன்றாக இருந்தது. காங்கிரஸ் முஸ்லீம்களின் கட்சி, எனவே அது ஹிந்துக்களின் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது என்று சொல்லி அவர் ஹிந்துக்களின் ஆதரவை மறைமுகமாகக் கோரினார். குஜராத்தில் தன்னைத் தோற்கடிப்பதற்காக பாகிஸ்தானுடன் உறவு கொண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது அவர் குற்றம் சாட்டினார். மோடியின் இந்தக் கருத்துக்களுக்கு மன்மோகன்சிங் கடுமையான ஆட்சேபணைகளைத் தெரிவித்தபோதும், ​​ தன் மீதும், முஸ்லீம்கள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல்களைத் தடுக்க குஜராத்தில் உள்ள காங்கிரஸ் தவறிவிட்டது. 24 வயதே ஆன, ராஜதந்திரி போலப் பேசுகின்ற சாதித் தலைவர் ஒருவரையே அந்தக் கட்சி இப்போது முழுமையாக நம்பி இருக்கிறது.

 

2015ஆம் ஆண்டு மிகப் பெரிய எதிர்ப்புப் பேரணிகளை நடத்தி பிரபலம் அடைந்த பட்டிதார் சாதித் தலைவரான ஹர்திக் பட்டேல், ஹிந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என்று அனைவருமே சகோதரர்கள் என்று முன்பு எங்களுக்குக் கற்றுக் கொடுத்த அவர்கள், இப்போது ஹர்திக் என்றால் ஹிந்து, அப்துல் என்றால் முஸ்லீம் என்று கூறுகிறார்கள் என்கிறார், அந்தப் பேரணிகளின் போது, நில உடைமை கொண்ட தன்னுடைய ஆதிக்க சாதிக்கென்று அவர் தனியாக இடஒதுக்கீட்டைக் கோரினார். கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் பல மாதங்களுக்கு குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும் குஜராத்தில் கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான தீவிரமாக பிரச்சாரத்தில் அவர் ஈடுபடுவதைத் தடுக்க முடியவில்லை.

கடந்த 22 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியைப் (விகாஸ்) பற்றி தேர்தல் காலத்தில் பேசுவதற்குப் பதிலாக அவர்கள் இன்னமும் ராமர் கோவில் பற்றிய பழைய பிரச்சனையைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர். நீங்கள் அதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை இரவு அகமதாபாத்திற்குத் தெற்கே 40 கி.மீ தொலைவில் உள்ள தோல்கா கிராமத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது பட்டேல் கூறினார்.

பிற்பகல்களில் மோடி நடத்துகின்ற பேரணிகளைப் போல் அல்லாமல், பட்டேல் நடத்தும் கூட்டங்கள் மகத்தானவையாக இருக்கின்றன. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகள் இருந்தும் வந்திருந்த பேருந்துகள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தன. தோல்காவில் கூடியிருந்த கூட்டத்தினரிடையே நெருங்கிய உறவு இருப்பது தெரிந்தது. இரவு உணவிற்குப் பிறகு, படேலின் பேச்சைக் கேட்க ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறி அங்கே இருக்கும் கிராமப்புற சதுக்கத்தில் கூடியிருந்தார்கள். மேலும் சிலர் தங்கள் வீட்டுக் கூரைகளின் மேல் ஏறி நின்று கொண்டிருந்தார்கள்.

ராமர் எங்களுடைய இதயத்தில் இருக்கிறார். ராமர் கோவில் கட்டுவதற்கு குஜராத் மக்கள் செங்கற்களைக் கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் (ஹிந்துத்துவா பிரச்சாரகர்கள்) தாங்கள் அவற்றயெல்லாம் என்ன செய்தோம் என்று எந்தக் கணக்கையும் கொடுத்தார்களா? என்று பட்டேல் அங்கே கூடியிருந்தவர்களிடம் கேட்டார்.

அவர்கள் நம்மைப் பிரிக்க முயலுகிறார்கள். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்தால்தான், நம்மால் முன்னோக்கி நகர முடியும், மாநிலமும் வளர்ச்சி அடையும் என்றும் அவர் கூறினார்.

முஸ்லீம்களே கலந்து கொள்ளாத மோடியால் நடத்தப்படும் பேரணிகளைப் போல் அல்லாமல், தோல்காவில் நடைபெற்ற கூட்டத்தில் முஸ்லீம் ஆண்களும் கலந்து கொண்டிருந்தனர். 2002ஆம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையில் பட்டேல் சாதியைச் சேர்ந்தவர்கள் தீவிரமாகப் பங்கேற்றும், தலைமையேற்றும் கூட இருந்தனர். ஆனால் அந்த மரபிலிருந்து அவர் தன்னை ஒதுக்கி வைத்துக் கொள்ளும் வகையில், நண்பர்களே! 2002இல் குஜராத்தில் கலவரங்கள் நடந்தன. இன்றும் கூட,150 அப்பாவி ஹிந்துக்களும், எண்ணற்ற அப்பாவி முஸ்லீம்களும் சிறையில் இருக்கிறார்கள். குற்றம் செய்தவர்கள் வெளியே சுதந்தரமாகத் திரிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அதைச் செய்து முடித்தவர்கள் இப்போது டெல்லியில் அமர்ந்திருக்கின்றனர் என்று பட்டேல் அவர்களிடம் பேசுகிறார். கூட்டம் மிகுந்த ஆரவாரம் செய்து அவரை உற்சாகப்படுத்துகிறது. 2015இல் 14 இளம் பட்டேல் ஆர்ப்பாட்டக்காரர்கள் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டது பற்றிக் குறிப்பிட்டதைத் தவிர, தன்னுடைய பட்டிதார்களுக்கு இட ஒதுக்கீடு என்ற பிரதான அரசியல் திட்டத்தைப் பற்றி பட்டேல் தன்னுடைய அந்த 40-நிமிட பேச்சில் எதுவும் பேசவே இல்லை.

ஹிந்து, முஸ்லீம், பட்டேல், கோலி ராஜ்புத், பிராமணன் – இவை அனைத்தையும் ஒதுக்கி வையுங்கள் என்று கூறிய அவர் ஆறு கோடி குஜராத்திகள் இன்று ஒன்றுகூடிப் போராட வேண்டும் (பாஜகவைத் தோற்கடிக்க) … நம்மால் அது முடியவில்லையென்றால், மக்கள் நம்மை முட்டாள் குஜராத்தி என்றே அழைப்பார்கள், முட்டாள் குஜராத்தி என்று  கூறினார். மோசமான செயல்திறனைக் கொண்டிருந்தபோதிலும் அந்தக் கட்சியையே மாறி மாறி தேர்ந்தெடுப்பதனால், இந்தியாவின் பிற பகுதியில் இருப்பவர்கள் குஜராத் மக்களை முட்டாள்கள் என்றே அழைப்பார்கள் என்று பட்டேல் கூறினார். பாஜக சொல்வதைப் போல மாநிலம் வளர்ச்சி அடைந்திருக்கும் என்றால், பெட்ரோல் வில சரிந்திருக்க வேண்டும், பருத்திக்கான உரிய விலை விவசாயிகளுக்குக் கிடைத்திருக்க வேண்டும், புதிதாக பள்ளிகளையும், கல்லூரிகளையும் அரசு தொடங்கி இருக்க வேண்டும். முன்னேற்றம் பற்றி எதுவும் பேசாத மோடி, காங்கிரஸ் கட்சியைத் தாக்குவதை மட்டுமே தன்னுடைய முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறார் என்றும் பட்டேல் அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார். 19ஆம் தேதி, அகங்காரம், வீம்பு பிடித்தவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற செய்தி வரக்கூடாது. அதற்கு மாறாக அவர்கள் தோற்கடிக்கப்பட்டதாகவும், ஆறு கோடி குஜராத்தியர்கள் வெற்றி பெற்றனர் என்ற செய்தி வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தன்னுடைய பேச்சுகளில் தன்னைப் பற்றிய தாழ்மையான தோற்றத்தை நிலைநிறுத்த விரும்பும் நரேந்திர மோடி, குஜராத்தில் இருந்து வந்து காங்கிரஸ் பேரரசைத் தோற்கடித்த “சாய்வாலா” ஒருவர் உயர்நிலையை அடைந்திருப்பதாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் நினைவுபடுத்துகிறார். உலகின் பிற பகுதிகளுக்கும், ஹிந்துஸ்தானின் பிற மாநிலங்களுக்கும்தான் நரேந்திர மோடி என்பவர் பிரதம மந்திரி. ஆனால் உங்களைப் பொறுத்தவரை, உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் இப்போது திரும்ப வந்திருக்கிறேன் என்கிறார். குஜராத்திற்கு பெருமை சேர்த்த தான், இப்போது இந்தியாவின் நற்பெயருக்கும் மெருகேற்றி இருப்பதாகவும் சொல்கிறார்.

கூட்டங்களில் பேசும் போது, “சகோதரர்களே, சகோதரிகளே, இன்றைய உலகம் இந்தியாவைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறது, இல்லையா?” என்று அவர் கேட்கிறார்.  “ஆமாம்,” என்று ஆனால் மெதுவாக அந்தக் கூட்டம், சொல்கிறது. இந்தியாவிற்கு பாராட்டுகள் கிடைக்கிறதா? என்று அவர் மீண்டும் அந்தக் கேள்வியையே திரும்பக்  கேட்கிறார். ஆமாம் என்று கூட்டம் இப்போது பலத்த குரலில் முழங்குகிறது. “அமெரிக்காவில்?” “ஆமாம்.” “இங்கிலாந்தில்?” “ஆமாம்.” “ஜப்பானில்?” “ஆமாம்.” “ஜெர்மனியில்?” “ஆமாம்.” “எல்லா இடங்களிலும்?” “ஆமாம்.”. அங்கே கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் என்று அனைவரையும் பள்ளிக் குழந்தைகளாகக் கருதி அவர் கேள்விகளைக் கேட்கிறார். அவர்களும் ,பதிலளிக்கிறார்கள்.

அவரது அடுத்த கேள்வி: “அதற்குக் காரணம் என்ன?” என்பது. “மோடி,” என்று கூட்டம் சொல்கிறது. “காரணம் என்ன?” அவர் மீண்டும் கேட்கிறார். “மோடி,” அவர்கள் மீண்டும் சொல்கிறார்கள். இப்போது இரண்டையும் இணைத்து “உலகம் முழுவதும் இந்தியாவின் புகழ் பாடப்படுகிறது. அதற்கு காரணம் என்ன? என்று மோடி கேள்வி எழுப்புகிறார்.  “மோடி,” என்று கூட்டம் பதிலளிக்கிறது. “உங்களுடைய வலிமை அனைத்தையும் சேர்த்துச் சொல்லுங்கள்” என்கிறார். மோடி! என்று அவர்கள் உரக்கச் சொல்கிறார்கள்.

திருப்தியுடன், அவர் சிரிக்கிறார். பிறகு தொடர்கிறார். அதற்கு மோடி காரணம் அல்ல. காரணம் யார் தெரியுமா, சகோதர சகோதரிகளே. நீங்கள்தான். மோடியிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ, அவையெல்லாம் உங்களிடமிருந்தே வந்திருக்கின்றன.  மோடியிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ அவையெல்லாம் நீங்கள் காட்டிய பாதையில் இருந்தே வந்திருக்கின்றன. மோடியிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ, அவையெல்லாம் நீங்கள் அளித்திருக்கும் உங்களுடைய பலத்தின் மூலமாகவே பெறப்பட்டிருக்கிறது. ஹிந்துஸ்தான் என்ற பெயர் உலகெங்கும் பிரகாசிப்பதற்கான காரணம் இதுதான் என்கிறார் மோடி.

மோடி பற்றி சொல்லப்படும் கதைகளை அதே பாணியிலேயே ஹர்திக் பட்டேல் உடைத்து எறிகிறார். அவர் சிறுவன் நரேந்திர மோடி பற்றி ஒரு கதை சொல்கிறார். அந்தக் கதையில், ஒரு குழந்தையாக, ஆற்றின் கரையோரம் மோடி அமர்ந்து கொண்டு ஆற்றுக்கு மறுபுறம் கட்டப்பட்டுள்ள சிவன் ஆலயத்தின் மீது பறந்து கொண்டிருக்கும் பழைய கொடி ஒன்றைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அந்த ஆற்றில் முதலைகள் நிறைய இருப்பதாக அவரது தாயார் அவரை ஏற்கனவே எச்சரித்திருக்கிறார். ஆனாலும் மோடி, நீருக்குள் பாய்ந்து முதலை ஒன்றுடன் சண்டையிட்டு விட்டு, அந்த ஆலயக் கொடியை மாற்றுவதற்காக ஆற்றில் நீந்திச் செல்கிறார் என்று அந்தக் கதையைச் சொல்லும் பட்டேல், ஓ, புளுகுவதை நிறுத்துங்கள்… முதலைகளால் மோடிக்கு ஏற்பட்டதாக நீங்கள் கூறுகின்ற காயங்கள், ஒருவேளை மோடியின் பெற்றோர்கள் அவரைத் தாக்கியதால் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார். முதலையுடன் தன்னால் போராட முடியும் என்று சொன்னால், கண்டிப்பாக அவரால் பாகிஸ்தானுடனும் போரிட முடியும் என்று மக்கள் கருதுவார்கள் என்றே மோடி நினைப்பதாக பட்டேல் கூறுகிறார்.

பிரதமரைப் பற்றி பட்டேல் இவ்வாறு செய்யும் கேலிகளைக் கேட்டு கூட்டம் சிரிக்கிறது. மக்களின் சாஹேப் (சாஹேப் என்றே மோடியை அழைக்கிறார்கள்) மறைந்திருந்து அவர்களைக் கவனித்துக் கொண்டிருப்பதாக அவர் சொன்ன போதும் அங்கே கூடியிருந்தவர்கள் சிரித்தனர். குஜராத் மக்கள் மோடியைத் தோற்கடிப்பதற்குத் தயாராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் அவர்கள் மோடியைப் பார்த்து சிரிக்கிறார்கள் – இதுதான் பட்டேல் செய்திருக்கும் சாதனை.

பட்டேலுக்கு 24 வயதுதான் ஆகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது இன்னும் ஆகாத இளமையோடு அவர் இருக்கிரார். புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து, அதன் சார்பில் வேட்பாளர்களை அவர் நிறுத்தவில்லை. காங்கிரஸையும்கூட அவர் வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. அவ்வாறு அவர் செய்திருந்தாலும், தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கு அது போதுமானதாக இருந்திருக்காது. குறுகிய மனப்பான்மை கொண்ட சாதி இயக்கத்தில் வேரூன்றிய தலைவர் ஒருவர். ஒற்றுமையைப் பற்றிப் பேசுபவராக இருக்கிறார். அவர் மீது வைக்கப்படுவதற்கான விமர்சனங்கள் இருந்த போதிலும், இந்த சமயத்தில் அது தேவைப்படாததாகவே இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டிருக்கும் பிரதமருக்கு முன்பாக அவர் மிக உயர்ந்து நிற்கிறார்.

https://scroll.in/article/861033/no-matter-who-wins-modi-is-no-longer-larger-than-life-in-gujarat

தமிழாக்கம் : முனைவர் தா.சந்திரகுரு – விருதுநகர் 

Leave a Reply

You must be logged in to post a comment.