சென்னை;
கர்நாடக அரசின் சிவசமுத்திரம் நீர் மின்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திடக்கூடாது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின், நதி பள்ளத்தாக்கு மற்றும் நீர்ப்பாசன திட்டங்களுக்கான நிபுணர் மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்ஹிமான்சூ தாக்கருக்கு, எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கர்நாடக அரசு சிவசமுத்திரம் நீர் மின்திட்டத்திற்கு அனுமதி அளித்திடுவதற்கு பரிசீலித்து வருவதாக பேராசிரியர் ஜனகராஜன் மூலம் எங்களுக்குத் தெரிய வந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாகவும், தமிழக விவசாயிகள் சார்பாகவும் இதனை கடுமையாக ஆட்சேபிக்கிறோம்.

காவிரி ஆறு மாநிலங்களுக்கிடையிலான ஆறாகும். காவிரி நதிநீர்த் தாவா தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே கடந்த ஐம்பது ஆண்டுகளாக இருந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட, காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம், அதனுடைய இறுதித் தீர்ப்பை 2007 பிப்ரவரி 5 அன்று பிறப்பித்தது. ஆனால் அந்தத்தீர்ப்பு இதுவரை அமல்படுத்தப்படவில்லை.

ஏனெனில் இந்தத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுகள் தாக்கல் செய்திருக்கின்றன. தற்போது உச்சநீதிமன்றம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் வாதங்களைக் கேட்டிருக்கிறது. அவற்றின்மீது அதன் இறுதித் தீர்ப்பை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, மாநிலங்களுக்கிடையேயிருந்து வரும் காவிரி நதிநீர்ப் பிரச்சனை முடிவுக்கு வரும் என நம்புகிறோம். இப்படியாக ஒரு நிச்சயமற்ற சூழ்நிலை இருந்துவருகையில், கர்நாடக அரசு காவிரி நதியில் சிவசமுத்திரம் புனல் மின் திட்டத்தை அமைப்பது என்பது விரும்பத்தக்கதோ, வரவேற்கத்தக்கதோ அல்ல. மேலும் அது, மாநிலங்களுக்கிடையிலான காவிரி நதிநீர்ப்பிரச்சனையை மேலும் சிக்கலாக்கிவிடும்.கர்நாடக அரசு, இதே திட்டத்திற்கு அனுமதி கோரி 1987இல் , மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின், நதி பள்ளத்தாக்கு மற்றும் நீர்ப்பாசன திட்டங்களுக்கான நிபுணர் மதிப்பீட்டுக்குழுவிற்கு அனுப்பியபோது, மதிப்பீட்டுக்குழுவானது மிகச் சரியான முறையில் 1988 பிப்ரவரியில் திருப்பி அனுப்பிவிட்டது. அப்போது அதற்கு அது குறிப்பிட்டிருந்த காரணம் பின்வருமாறு:

“காவிரி நதி நீர்ப்பிரச்சனை தொடர்பாக மாநிலங்களுக்கிடையிலே இருந்து வரும் பிரச்சனைகள் தீர்ந்த பின்னர் தான் இத்திட்டத்திற்கான அனுமதியை அளித்திட முடியும். (பத்தி 1.62)”
இப்பிரச்சனை இப்போதும் தொடர்கிறது. ஒரேயொரு வேறுபாடு என்னவெனில், 1988இல் காவிரி நதிநீர்ப்பிரச்சனை நடுவர் மன்றத்தின் முன் நிலுவையிலிருந்தது, இப்போது அது உச்சநீதிமன்றத்தின் முன் நிலுவையிலிருக்கிறது. அடிப்படைப் பிரச்சனை இப்போதும் தொடர்கிறது. காவிரி நதிநீர்ப்பிரச்சனை இன்னமும் தீர்க்கப்படாமல்தான் இருக்கிறது. இதனை நன்கு அறிந்திருந்தும்கூட, கர்நாடக அரசு, இத்திட்டத்திற்கு காவிரி நடுவர் மன்றம் இறுதி முடிவை அளித்துவிட்டதாகக் கூறியும், அனுமதி அளிக்குமாறு கோரியும், மதிப்பீட்டுக் குழுவிற்கு மீண்டும் இம்முன்மொழிவை அனுப்பியிருக்கிறது. இது கர்நாடக அரசின் தவறான மற்றும் விஷமத்தனமான செய்கையாகும்.மாநிலங்களுக்கிடையே ஓடும் ஆறுகளில் எந்த மாநில அரசாவது வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க முன்வரும்பட்சத்தில், அது நீர் மின் திட்டமாக இருந்தாலும் சரி அல்லது பாசனத்திற்காக ஆற்றுநீரைத் திருப்பி விடக்கூடிய திட்டமாக இருந்தாலும் சரி, சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்களுடன் முன்னதாகக் கலந்தாலோசனைகள் மேற்கொண்டு ஏற்பளிப்பு பெற்ற பிறகுதான் மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற எந்தவொரு திட்டத்தையும் எந்தவொரு மாநில அரசும் தான்தோன்றித்தனமாகச் செய்துவிட முடியாது. அதற்கான உரிமை அதற்கு இல்லை.

ஆனால், இதுவரை கர்நாடக மாநில அரசு இத்திட்டம் குறித்து தமிழ்நாடு அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்கவும் இல்லை, ஏற்பளிப்பினைப் பெற்றிடவும் இல்லை. மாறாக தமிழ்நாடு அரசு இத்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகிறது.மேலும், இத்திட்டமானது தொழில்நுட்பரீதியாகவும் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தண்ணீர் சேமித்து வைக்கப்படமாட்டாது என்று கர்நாடக அரசு சொல்கிற விளக்கம் நம்பும்படியாக இல்லை. இத்திட்டமானது தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தண்ணீரின் அளவைப் பாதிக்கும் என்பதும் அதனால் விவசாயிகள் நலன்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதும் நிச்சயம்.

மேலும், இத்திட்டக் கட்டுமானப் பணிகள் தற்போது உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் சட்டரீதியான போராட்டத்திற்கும் குந்தகம் விளைவித்திடும். நாட்டின் சட்டத்திற்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிர்மறையான பங்களிப்பினையே செய்திடும்.
எனவே இத்திட்டத்திற்குத் தாங்கள் ஏற்பளிப்பு அளித்திடக்கூடாது. இதனை மதிப்பீட்டுக்குழு 1988இல் செய்ததைப்போல நிராகரித்திட வேண்டும். அதன்மூலம் சட்டத்தின் ஆட்சியை உயர்த்திப்பிடித்திட வேண்டும்.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.