===க. பழனித்துரை===
நேரடிச் சனநாயகத்தையும், பங்கேற்புச் சனநாயகத்தையும் உலகத்துக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்திய ஏதென்ஸ் நகரத்தில்தான் அரசாங்கத்தைக் கேள்வி கேளுங்கள் என்று இளைஞர்களுக்குக் கற்பித்தார் உலகம் போற்றும் சிந்தனையாளர் சாக்ரடீஸ். கேள்வி கேட்கச் சொன்ன காரணத்திற்காகவே அவருக்கு விஷம் கொடுத்து மரணிக்க வைத்தனர் ஆட்சியாளர்கள். ஏனென்றால் அன்று அரசாங்கத்தைக் கேள்வி கேட்பது புனிதத்தைக் கெடுப்பதாக ஆட்சியாளர்கள் கருதினார்கள்.

மக்களாட்சி உலகத்தில் வியாபித்ததே கேள்வி கேட்டதால்தான் என்பதை அறிவுசால் பெருமக்கள் அனைவரும் அறிவர்.

இன்று மக்களாட்சி என்பது 5000 ஆண்டுகளைக் கடந்து, 80 சதவீதம் மக்கள் உலகத்தில் மக்களாட்சியில் வாழ்கின்றார்கள் என்றால், மானுடம் எவ்வளவு பெரிய சாதனையைப் புரிந்துள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்காக மக்கள் போராடியிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மக்களாட்சி என்பது ஒரு நாட்டில் செயல்படுவதுபோல் எல்லா நாடுகளிலும் செயல்படும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும், அந்த நாட்டு மக்கள் எவ்வளவு விழிப்புணர்வோடும் மக்களாட்சி பற்றிய புரிதலோடும், செயலூக்கத்துடனும் விளங்குகின்றார்களோ அந்த அளவுக்கு மக்களாட்சிச் செயல்பாடுகள் இருக்கும். 2005-ஆம் ஆண்டுவரை இந்த உலகத்தில் 50 சதவீதத்துக்கு குறைவான மக்கள்தான் மக்களாட்சியில் இருந்தனர். கடந்த ஒரு பத்தாண்டில் உலகத்தில் மிகப்பெரிய அளவிற்கு மக்களாட்சி விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

மக்களாட்சிக்கு எதிராக எவரும் போராடுவது இல்லை
மக்களாட்சி எந்த வடிவத்தில் இருந்தாலும், எவ்வளவு குறைவான செயல்பாடுகளோடு இருந்தாலும் மக்கள் அதை நிராகரிப்பதில்லை. ஏனென்றால் மானுட சமூகத்திற்கு மக்களாட்சியைத் தாண்டிய ஓர் புதுமுறை ஆட்சிக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. உலகத்தில் மக்களாட்சிக்கு எதிராக எந்த இடத்திலும் மக்கள் போராடுவது இல்லை.எல்லா ஆட்சிமுறைக்கும் எதிராக மக்கள் போராடி இருக்கின்றனர். மக்களாட்சி வேண்டும் என்றுதான் உலகம் முழுவதும் கடந்த சில பத்து ஆண்டுகாலமாக மக்கள் போராடி இருக்கின்றனர். ஏனென்றால் மக்களாட்சியில் மட்டும்தான் சமத்துவத்தைப் பார்க்க முடியும், சம வாய்ப்பைப் பார்க்க முடியும், சுதந்திரத்தை அனுபவிக்க முடியும், நேர்மையை எதிர்பார்க்க முடியும், கருத்துச் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும், நீதியைப் பெற முடியும், எதிர்கருத்திற்கு மதிப்பைப் பெற முடியும்.

மேற்சொன்ன அனைத்தும்தான் மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகள். இவைகளைத்தான் ஒரு நாட்டில் ஆட்சியாளர்கள் சமூகத்தில் கொண்டுவருவதற்கு செயல்பட வேண்டும். இந்த ஆட்சி என்பதும் மக்களின் ஒப்புதலோடு அவர்களின் அதிகாரத்தை அரசு என்ற அமைப்புக்கு தந்து, தங்களின் வாக்குகள் மூலம் ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கு மக்களை வழி நடத்த அரசியல் கட்சிகளால் உருவாக்கப்படும் ஒரு ஆட்சியாகும்.

அந்த ஆட்சியும்கூட ஆட்சியில் இருப்பவர்கள் நடத்தும் ஆட்சி மட்டுமல்ல ஆளும் கட்சியுடன், எதிர்க்கட்சியும் அந்த ஆட்சியில் பணி செய்ய வேண்டும். எதிர்க்கட்சியாக ஆட்சியைக் கண்காணித்து ஆளும் கட்சி தவறு செய்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆளும் கட்சியும்கூட நினைப்பதை எல்லாம் நடத்திவிட முடியாது. ஏனென்றால் அரசாங்க கட்டமைப்பிற்குள் ஆளுங்கட்சி மட்டுமே இடம் பெறுவது கிடையாது. சட்டமன்றம், நீதிமன்றம், தணிக்கைத் துறை, தேர்தல் ஆணையம் என சுதந்திரமான அமைப்புக்கள் இயங்கி அரசுக்கு கடிவாளம்போட்டு இயங்க வைக்கின்றன.

அதிகாரம் யார் கையில்…?
ஒரு சனநாயக நாட்டில் குடிமக்கள் என்பவர்தான் எஜமானர்கள். அரசாங்கத்தைக் கண்காணிக்கும் பொறுப்புமிக்க குடிமக்கள். தாமஸ் பெய்ன் என்ற அமெரிக்கச் சிந்தனையாளர் அமெரிக்கா விடுதலை பெற வேண்டும் என்பதற்காக எழுதும்போது “அரசாங்கம் என்பது மக்களைப் பிடித்த கேடு” என்றுதான் எழுதுவார். எனவே அரசாங்கத்தைச் சரியாக செயல்பட வைக்க வேண்டும் என்றால், சவாரி செய்யும் குதிரையை எப்படிக் கடிவாளம் கொண்டு இயக்குகின்றார்களோ, அந்த நிலையில் குடிமக்கள் அரசாங்கத்தைக் கண்காணித்து இயக்க வேண்டும். அப்படி குடிமக்கள் விழிப்புடன் செயல்படவில்லை என்றால் மக்களாட்சியில் அரசாங்கம் மக்களைக் கீழ்படியச் செய்துவிடும். ஏற்றத்தாழ்வுமிக்க சமூகத்தில் அரசாங்கத்தைக் கண்காணிக்கும் குடிமக்களாக அனைவரும் இருக்க முடியாது. எனவேதான் அரசாங்கத்தைப் பெருக்கவிடாமல், சிறிதாகவும், எளிமையானதாகவும், புரிந்துகொள்ளக்கூடிய அளவிலும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிஞர்கள் வாதிடுகின்றனர்.

அரசியல் கல்வி அவசியம்
ஏழ்மையும், அறியாமையும், ஆதிக்க மனோபாவமும் கொண்ட சமூகத்தில் ஆட்சி என்பது ஏழ்மையையும், அறியாமையையும் பயன்படுத்துவோர் கையில் அகப்பட்டுவிடும். ஆகையால்தான் மக்களாட்சியின் மாண்புக்கு “மக்கள் அரசியல் கல்வி” என்பது அடிப்படையான செயல் என்று வல்லுநர்கள் அனைவரும் கோடிட்டு காட்டுகின்றனர். மத்தியதர வர்க்கம் அதிகம் வாழும் நாடுகளில் இந்தப் பொதுபுரிதலுக்கான அரசியல்கல்வி சமூகக் கல்வியாக வாழ்வியல் கல்வியாக கற்றுக்கொடுக்கப்படுவதால் அங்கெல்லாம் அரசாங்கத்தை வேலை வாங்குவது என்பது சாத்தியப்பட்டுவிட்டது.ஆனால் ஏழைகள் அதிகம் வாழும் நம் போன்ற நாடுகளில் பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு அரசியல் விழிப்புணர்வு ஊட்டுவது என்பது மிக சிக்கல் நிறைந்தது. அது ஒரு மிகப்பெரிய போராட்டமே. இந்தச் சூழலை மாற்றியமைக்கத்தான் கீழ் நிலையில் மக்களுக்குப் பக்கத்தில் அரசாங்க அமைப்புக்கள் அதிகாரப்பரவல் என்ற பெருமுழக்கத்துடன் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு உலகச் செயல்பாடு. மக்களாட்சியில் இதுவரை எதிர்பார்த்த விளைவுகள் ஏழைகளுக்குக் கிடைக்கவில்லை என்றாலும், தங்களுக்குச் சாதகமாக அரசு செயல்படவில்லை என்பதை உணர்ந்துவிட்டால் அந்த அரசை தங்களின் வாக்குகளின் வலிமையால் மாற்றிவிடுகின்றனர்.

அதே ஏழைகளால் அரசாங்கத்தைத் தங்களுக்குச் சாதகமாக செயல்பட வைக்க முடியவில்லை. இதற்காகப் போராடும் அரசியல் கட்சிகள் மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் மிகப்பெரிய அளவில் எதிர் நீச்சல்தான் அடித்துக்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழல் மாற்றப்பட மக்களாட்சியை விரிவுபடுத்துவதன் மூலமும், அகலப்படுத்துவதன் மூலமும், ஆழப்படுத்துவதன் மூலமும்தான் செய்ய முடியும். மக்களாட்சி என்பது பல அடிப்படை உட்கூறுகளைக் கொண்ட ஓர் உன்னத ஆட்சிமுறை. ஆனால் அந்த உன்னதமான ஆட்சிமுறை சமூகச் சூழலுக்கு ஏற்பத்தான் செயல்படும்.

சமூகம் எந்த அளவுக்கு விழிப்புடனும், உணர்வுடனும், புரிதலுடனும் இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அது செயல்படும். பொதுப்புரிதல் குறைவாக உள்ள நாடுகளில் மக்களாட்சி குறைந்த அளவில்தான் செயல்படும். அதற்குப் பெயர் குறைந்தபட்ச சனநாயகம் என்று வகை செய்துள்ளனர். மக்களுக்கு அரசியல், அரசாங்கம், ஆளுகை மற்றும் நிர்வாகம் பற்றி பொதுப்புரிதல் அதிகரிக்க அதிகரிக்க மக்களாட்சியின் செயல்பாடுகள் என்பது சிறப்படையும், அதுதான் மக்களாட்சிக் கோட்பாடு. இந்தப் புரிதலுக்கான அடிப்படையே விவாதம்தான். மக்களாட்சியின் ஆணிவேர் விவாதம். அதை உருவாக்குவது கேள்வி. கேள்வி கேட்பதும், அதற்கு பதிலளிப்பதும்தான் மக்களாட்சியை மாண்புபடுத்தும் செயல்பாடுகள்.

புதுமைகளின் திறவுகோல் கருத்துச் சுதந்திரம்
மக்களாட்சியின் மூலக்கூறுகளில் ஒன்று கருத்துச் சுதந்திரம். அதுதான் மானுட வாழ்வில் புது நிலைகளை கொண்டுவரும் திறவுகோல். கருத்துக்கள் கூறுவது, அதை மதித்து உள்வாங்கி உண்மை நிலையில் விவாதிப்பது, கேள்விக்கு பதில் சொல்வது இவைகள்தான் மக்களாட்சியை ஆழப்படுத்தும் முறைகள். இதன் உச்சநிலை ஒன்று உண்டு. அது எதிர்க்கருத்தை மதித்துப் போற்றி வாங்கி, அதற்குப் பதில் கூறுதல்.இந்த அடிப்படைப் புரிதல் உண்மையில் இன்று எத்தனை அரசியல் கட்சிகளிடம் உள்ளது என்று ஆராய்ந்து பார்த்தால், அது ஒரு சில கட்சிகளில்தான் பார்க்க முடியும். யாரோ சிலர் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கின்றார்கள் என்றால் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதுதான் ஒரு அரசாங்கத்திற்கு மிக முக்கியக் கடமை. அதுமட்டுமல்ல, அதன்மேல் விஞ்ஞானப்பூர்வமான ஒரு விவாதத்தை முன் வைப்பதுதான் மக்களாட்சிப் பண்பாடு. கேள்வி கேட்பதிலும், கேள்விக்குப் பதில் அளிப்பதிலும் எந்த அளவுக்கு முதிர்ச்சி தென்படுகிறதோ அந்த அளவுக்கு மக்களாட்சி பக்குவப்படும். அதைவிடுத்து அவர்களைத் துரத்தித் துரத்தி பதில் கூறுகிறோம் என்று சொல்லி தனிமனித விமர்சனம் செய்வது – அதிலும் குறிப்பாக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விமர்சனம் செய்வது எதைக் காட்டுகிறது என்றால் மக்களாட்சியைப் பற்றிய புரிதலும் நமக்கு இல்லை; அதற்கான பக்குவமும் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

கேள்வி, விவாதம், பெருவிவாதம் இவைகள்தான் மக்களாட்சியை வளர்க்கும் அடிப்படை மூலக்கூறுகள். இவைகளை வளர்ப்பதுதான் அரசியல் கட்சிகளின் கடமை. ஆனால் இன்று நம் நாட்டில் நடப்பது அதற்கு நேர்மறையானது. கேள்வி கேட்பது, விவாதிப்பது ஒரு சமூகத்தில் ஒரு கலாச்சாரமாக மாற வேண்டும். குடும்பத்தில், கல்விச்சாலைகளில், நிறுவனங்களில், முடிவெடுக்கும் மன்றங்களில், அரசியல் கட்சிகளில், முடிவெடுக்கும் அமைப்புக்களில் இந்தச் செயல்பாடுகள் நடைபெற வேண்டும்.அதற்குத் தேவை ஒரு புரிதல், அடுத்து அதற்கான ஒரு மனப்பக்குவம். கேள்விகளையும் எதிர்க்கருத்துக்களையும் வாங்கும் மனப்பக்குவம் நம் தலைவர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தேவை. ஒரு அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டில் அடிமை மனோபாவத்தில் வளர்ந்த மக்களிடம் இதைக் கொண்டுவருவது மிகக் கடினமான ஒன்று. அதைச் செய்ய வேண்டிய அரசியல் கட்சிகளும் ஆட்சியாளர்களும் கேள்விகளை நிராகரிப்பதும், கேட்பவர்களை அசிங்கப்படுத்துவதும் மக்களாட்சி எதிர்மறை கலாச்சாரத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டுள்ளோம் என்பதைத்தான் நமக்குக் காட்டுகிறது.

Leave A Reply

%d bloggers like this: