திருப்பூர்,
தமிழகத்தையே உலுக்கிய உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் குற்றம்  சாட்டப்பட்ட கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கும் இரட்டை தூக்கு  தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர் (22). இவரும் பழநியைச் சேர்ந்த கௌசல்யாவும் கல்லூரியில் பயிலும்போது காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். சங்கர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இந்தத் திருமணத்தை விரும்பாத கௌசல்யாவின் பெற்றோர் இவர்களைக் கடுமையாக எதிர்த்தார்கள்.
இதையடுத்து, 2016ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று உடுமலை பேருந்து நிலையம் அருகே பட்டப்பகலில் சாதிய ஆதிக்க சக்தியினரால் சங்கர் வெட்டிக் கொல்லப்பட்டார். படுகாயத்துடன் உயிர் தப்பிய கௌசல்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது சங்கரின் வீட்டிலேயே தங்கி அவர்களது குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருந்துவருகிறார்.
சங்கர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போக்குவரத்து கழக சிசிடிவியில் பதிவான வீடியோ காட்சிகளை வைத்து குற்றவாளிகளான கௌசல்யாவின் பெற்றோர், தாய்மாமன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 11பேரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி, கூட்டுச்சதி, வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. நவம்பர் 14ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது சிறப்பு நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் 1500க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது படுகொலையில் சம்பந்தப்பட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கௌசல்யாவும் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி டிசம்பர் 12ஆம் (இன்று) தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து இன்று சங்கர் படுகொலையில் தொடர்புடையவர்களுக்கு 11 பேரும் திருப்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் சங்கர் கொலை வழக்கின்  கௌசல்யாவின் தந்தை சின்னசாமி முதல் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட 8 பேரின் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபணம் ஆகி உள்ளது என்றும்,  நீதிபதி அலமேலு நடராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டாவதாக குற்றஞ்சாட்டப்பட்ட கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, 3வதாக குற்றஞ்சாட்டப்பட்ட கவுசல்யாவின் தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் 10வதாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரச்சன்னா ஆகியோரின் குற்றங்கள் உறுதிசெய்யப்படவில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார். இதில் குற்றவாளிகளாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி ,ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார்,  கலை, தமிழ்செல்வன்,  மதன் (எ) மைக்கேல்,  ஸ்டீபன் தன்ராஜ்,
மணிகண்டன் ஆகியோரை குற்றவாளிகளாக நீதிபதி உறுதிசெய்துள்ளார்.

இதையடுத்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி தனக்கு படிக்கும் வயதில் மகன் இருப்பதால் தண்டனை குறைப்பு செய்ய வேண்டும் என நீதிபதியிடம் முறையிட்டார்.  இதையடுத்து தீப்பை 12.45 க்கு அறிவிப்பதாக நீதிபதி ஒத்தி வைத்தார்.

இந்த வழக்கில் கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னாகுமார்  ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கௌசல்யாவின் தந்தைசின்னசாமி, கூலிப்படையைச் சேர்ந்த ஜெகதீசன், மணிகண்டன் , செல்வக்குமார் மற்றும் மதன் என்கிற மைக்கேல் ராஜ், மற்றும் கலை தமிழ்வாணன்  ஆகிய 6  பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும்  இரட்டை தூக்கு தண்டனை வழங்கி நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டீபன் தன்ராஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதில் 11 வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி அலமேலு நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: