திருப்பூர், டிச. 11 –
திருப்பூரில் பிரபல தனியார் பின்னலாடை நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்காததைக் கண்டித்தும், உடனடியாக நியாயமான கூலி உயர்வு வழங்கக் கோரியும் தொழிலாளர்கள் சிஐடியு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் பிச்சம்பாளையத்தில் விக்னேஸ்வரா டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் பிரபல தனியார் பின்னலாடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர். இதில் தையல் உள்ளிட்ட பிரிவுகளில் வேலை செய்யும் பெண்கள் உள்பட 450 தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டு காலமாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில் நிறுவனத்தை மூடப் போவதாகவும், தொழிலாளர்கள் கணக்கு முடித்துச் செல்லும்படியும் நிர்பந்தம் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் கூலி உயர்வு வழங்கக்கோரி கடந்த புதன்கிழமை முதல் ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக சிஐடியு சங்கத்தைத் தொடர்பு கொண்ட தொழிலாளர்கள் சங்கத்தின் மூலம் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வு பெற முயற்சித்தனர். எனினும் இதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதையடுத்து கடந்த சனியன்று தொழிலாளர் துறை அலுவலரிடம் இப்பிரச்சினையில் தலையிட்டு கூலி உயர்வு பெற்றுத்தரும்படி சிஐடியு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன்படி திங்களன்று இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் தொழிலாளர் துறை அலுவலர் இரு தரப்பினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தீர்வு காணப்படவில்லை. மீண்டும் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் விக்னேஸ்வரா பின்னலாடை நிர்வாகம் தொழிலாளர்களை வஞ்சிக்காமல் உடனடியாக கூலி உயர்வை வழங்க வலியுறுத்தி திங்களன்று மாலை புது பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கச் செயலாளர் எம்.என்.நடராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினார். இதில் தொழிலாளர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், விக்னேஸ்வரா நிர்வாகம் சுமூகமான தீர்வு காணமுன்வராவிட்டால் தொழிலாளர்களை அணிதிரட்டி வலுமிக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.