நாமக்கல், டிச.11-
ராசிபுரம் டிஎஸ்பி ஈஸ்வரமூர்த்தி, இவரது மனைவி சுமதி, மகன் ரஞ்சித் ஆகியோர் ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவரை கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடி கந்துவட்டி கேட்டு மிரட்டிய ராசிபுரம் டிஎஸ்பி மீதான புகாரை விசாரிக்க தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் அடுத்த ஆர்.புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். சோலார் பேனல் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தனது தொழில் தேவைக்காக தற்போது நாமக்கல் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராகவும், முன்பு ராசிபுரம் காவல் ஆய்வாளராகவும் பணியாற்றி வந்த ஈஸ்வரமூர்த்தி குடும்பத்தினரிடம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 13 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்காக வட்டியுடன் சேர்த்து ரூ.84 லட்சம் வரை பாஸ்கரன் திருப்பி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இதன்பின்னரும் ஈஸ்வரமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1 கோடி வரை வட்டி தொகை கேட்டு கொலைமிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட பாஸ்கரன் சமீபத்தில் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து டிஎஸ்பி ஈஸ்வரமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்புகார் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக மாவட்ட துணை காவல்கண்காணிப்பாளர் மணிமாறனை, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு நியமித்துள்ளார். இதையடுத்து, துணை காவல் கண்காணிப்பாளராக தற்போது ஈஸ்வரமூர்த்தி பணியில் இருப்பதால் அவருக்கு முறைப்படி சம்மன் அனுப்பி விசாரிக்க காவல்துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் இந்த வழக்கில் தங்களை காவல்துறையினர் கைதுசெய்யாமல் இருக்க ஈஸ்வரமூர்த்தி மற்றும் அவரது மனைவிசுமதி, மகன் ரஞ்சித் உள்ளிட்டோர் முன்ஜாமீன் பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இச்சூழலில் துணை காவல்கண்காணிப்பாளர் ஈஸ்வரமூர்த்தி மீது வழக்குப்பதிவு செயப்பட்டுள்ளது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு சென்னையிலுள்ள டிஜிபி அலுவலகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். இதில் வழக்கின் தன்மை குறித்தும், நடந்து வரும் விசாரணை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: