===ஏ.கே.பத்மநாபன்===                                                                                                  பிஎப் மற்றும் இஎஸ்ஐ என்பது சமூகப் பாதுகாப்பு திட்டங்களாகும். அகில இந்திய தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு மூன்றாவது சலுகையாக ஓய்வூதியம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன. ஆனால் அன்றைக்கு இருந்த மத்திய அரசு இந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது. தொடர்ந்து, தொழிலாளர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் ஓய்வூதியம் என்பது மிகவும் அவசியமானது; அதற்கு ஈடான திட்டம் ஏதும் இல்லை என தொழிற்சங்கங்கள் வாதாடின. பல கட்ட போராட்டத்திற்கு பிறகு அரசு தன்னிச்சையாக 1971ல் குடும்ப ஓய்வூதிய திட்டத்தை (Family Pension Fund) அறிவித்தது .

இந்த திட்டம் பிஎப் நிதியை உள்ளடக்கியதாகும். தொழிலாளர்களின் சேமிப்பிலிருந்து ஓய்வூதியத்திற்கு பிடித்தம் செய்வது சுரண்டலுக்குச் சமம் என இந்த திட்டத்தை சிஐடியு அகில இந்திய தலைவர்களில் ஒருவரான டாக்டர் எம்.கே.பாந்தே கடுமையாக எதிர்த்தார். இது மிகப்பெரிய மோசடி என்று நிரூபித்தார்.

சிஐடியு தொழிற்சங்கம் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் தீங்குகளை விளக்கி புத்தகமாக வெளியிட்டது. இன்றைக்கு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அன்றே சிஐடியு எடுத்துரைத்தது. ஆனால் தொழிலாளர்களுக்கு ஏதாவது கிடைக்கட்டும் என்ற கருத்துடன், மற்ற மத்திய தொழிற்சங்கங்கள் இந்த திட்டத்திற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை பின்னர் 1995-ல் தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் என்று மாற்றப்பட்டு அதில் சில ஷரத்துகளை அரசு கொண்டு வந்தது.. ஒரு தொழிலாளி எவ்வளவு ஊதியம் பெற்றாலும் ரூ.5000க்கான பிஎப் பிடித்தம் போதும் என பிஎப் பிடித்தத்திற்கான உச்சவரம்பு இருந்தது. இது படிப்படியாக ரூ.6500/-, ரூ.10000/- தற்போது ரூ.15000/- ஆக உயர்ந்துள்ளது. தொழிலாளி பெறும் ஊதியத்தில் உச்சவரம்பிற்கு உட்பட்ட தொகைக்கு ஊதியத்தில் பிஎப் பிடித்தம் என்றும் இதற்கு இணையான தொகையை நிர்வாகம் செலுத்தியும் வந்தது. இப்படி நிர்வாகம் செலுத்தி வந்த தொகையில் 8.33% அரசு அறிவித்த ஓய்வூதியத்திற்கு செலுத்துவது என அறிவித்தது. இந்த திட்டத்தையும் சிஐடியு கடுமையாக எதிர்த்தது. இந்த புதிய திட்டத்தை தொழிலாளர்களின் விருப்பின் அடிப்படையிலேயே அமல்படுத்த வேண்டும் என்று கோரியது.அகில இந்திய உருக்கு சம்மேளனம் (சிஐடியு) பிலிப்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த ஓய்வூதியத்திட்டம் நிலைக்கக்கூடியதல்ல, தொழிலாளர்களுக்கு உகந்ததல்ல என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. அரசு மற்றும் பிஎப் நிர்வாக தரப்பில் மூலதனம் திரும்பக் கிடைப்பது உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் என்றும் தொழிலாளியின் விருப்பத்தைக் கோரமுடியாது என்றும் வாதம் உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் அளிக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 1996ல் சிஐடியு மட்டும் இந்த திட்டத்தின் தீங்குகளை விளக்கியும் ,எதிர்த்தும் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது.

பின்னர் அனைத்து நிறுவனங்கள் பிஎப் உச்சவரம்பிற்கு உட்பட்ட தொகைக்கு 12% பிடித்தம் செய்து அதில் 8.33% ஓய்வூதிய கணக்கில் செலுத்தின. மீதமுள்ள 3.67% தொகையை தொழிலாளியின் பிஎப் கணக்கில் செலுத்தியது. இருப்பினும் சில நிறுவனங்கள் 1991 முதல் 2014 வரை பிஎப் உச்சவரம்பினை கணக்கில் கொள்ளாமல் மொத்த ஊதியத்திற்கும் பிஎப் பிடித்தம் செய்தனர். நிர்வாகமும் இதற்கு இணையான தொகையை செலுத்தியது.

கேரள மாநில பொதுத்துறை நிறுவனமான மில்மா நிர்வாகமும் மொத்த ஊதியத்தில் பிஎப் பிடித்தம் செய்தது. எனவே முழு பென்சன் அதாவது பெறும் ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடுத்தது. 30.08.2014க்கு பின் ஓய்வு பெற்ற இத் தொழிலாளர்களுக்கு புதிய, உயர்த்திய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தது. ஆனால் இதே போன்று பல மாநிலங்களில், பல நிறுவனங்கள் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கில் பிஎப் நிர்வாகம், நிறுவனங்கள் முழுமையான ஊதியத்திற்கு பிடித்தம் செய்த தொகையினை பிஎப் ஓய்வூதிய கணக்கில் செலுத்தவில்லை என்றும், அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது; விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கண்டிப்பாக வழங்க முடியாது; இது போன்று ஓய்வூதியம் வழங்கப்பட்டால் பிஎப் திவாலாகி விடும், பிஎப் நிலைக்காது என்று வாதிட்டது. இதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை; மாறாக, பிஎப் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி இதை கேட்டுப் பெற்று இருக்க வேண்டும் என்று கூறியது.

பிஎப் நிறுவனத்திடம் விலக்கு பெற்ற டிரஸ்ட் (Exempted Trusts) நிறுவனங்கள் உச்சவரம்பின்றி தொழிலாளர்களின் முழு ஊதியத்திற்கும் பிடித்தம் செய்துள்ளனர். பிஎப்க்கான பிடித்தம் செய்யப்பட்ட தொகை டிரஸ்ட் கணக்கில் உள்ளதே தவிர பிஎப் நிறுவனத்தில் செலுத்தப்படவில்லை. எனவே பிஎப் நிதியில் விலக்குஅளிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. விலக்கப்பட்ட டிரஸ்ட்கள் மூலமாக நடத்தும் பிஎப் கணக்கும் நிர்வாகத்தின் ஒரு அங்கம் என்பதை மறைக்கிறது அரசு. இது குறித்து பிஎப் அறங்காவலர்கள் குழுவில் விவாதிக்கப்பட்டு கேள்வி எழுப்பினால் நிர்வாகம் இந்த பிரச்சனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று கூறுகிறது.ஹரியானா சுற்றுலாத் துறை பொது மேலாளர் பிரவீன் கோலி அவர்கள் தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் முழுமையான ஊதியத்திற்கு 8.33% பிடித்தம் செய்யபட்டிருந்தால் தற்போது அறிவித்துள்ள 50% ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேலும் முழுமையான ஊதியத்திற்கு 8.33% பிடித்தம் செய்யவில்லை என்றாலும் தற்போது அதனை வட்டியுடன் திருப்பி செலுத்தினால் அதற்கான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த தீர்ப்பை பயன்படுத்தி பிரவீன் கோலியும் நிலுவைத் தொகையை வட்டியுடன் செலுத்தி முழு ஓய்வூதியம் அதாவது கடைசியாக பெற்ற ஊதியத்திலிருந்து 50% தொகையினை ஓய்வூதியமாக பெற்று வருகிறார் என்று நாளேடுகள் தெரிவிக்கின்றன. 

அது மட்டுமல்ல, 1995 முதல் 2014 ஆகஸ்டு வரை முழுமையான ஊதியத்திற்கு 8.33% பிடித்தம் செய்திருந்தால் அவர் 30 ஆகஸ்டு 2014க்குள் ஓய்வு பெற்றால் அவருக்கு 50% ஓய்வூதியம் கிடைக்கும். அதே ஒருவர் 1.09.2014 க்கு பிறகு ஓய்வு பெற்றால் அவருக்கு இது பொருந்தாது என்று பிஎப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ‘கம்யூடேஷன்’ செய்த சந்தாதாரர்களுக்கு கம்யூடேஷன் செய்த தொகையை 100 மாதத்திற்கு மட்டும் பிடித்தம் செய்ய வேண்டும். ஆனால் பிஎப் நிர்வாகம் 140 மாதங்களாக பிடித்தம் செய்து வருகிறது அதை நிறுத்துவதும் அதிகமாக பிடித்தம் செய்த தொகையை உரிய பென்சன்தாரர்களுக்கு திருப்பி செலுத்த மறுக்கிறது. இதைப் பற்றி மத்திய டிரஸ்டிகள் வாரியக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினால் அரசிடம் பேசி வருகிறோம் என்று கூறப்படுகிறது.
அது மட்டுமல்ல, பிஎப் நிதியிலிருக்கும் தொகையின் ஒரு பங்கினை பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகிறது. இதை பிஎம்எஸ் தவிர சிஐடியு மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

மத்திய அரசு பிஎப் மற்றும் இஎஸ்ஐ போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களை கைவிட முயற்சித்து வருகிறது. இஎஸ்ஐ திட்டத்திற்கு பதிலாக மருத்துவக்காப்பீடு திட்டத்திற்கு மாறுங்கள் என்று வழி காட்டுகிறது. ஒரு நல்ல அம்சம் என்னவெனில், தொழிலாளி சேமிப்பு காப்பீட்டு திட்டம் (Employees Deposit Linked Insurance) தொழிலாளி இறந்து போனால் அவர் சேமித்து வைத்துள்ள பிஎப் பணத்துடன் அவரது குடும்பத்திற்கு குறைந்தபட்ச நிதியாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும் அதிகபட்சமாக 6.02 லட்சமும் வழங்கிட மத்திய தொழிற்சங்கங்கள் போராடிப் பெற்றுள்ளன.

சிஐடியு கோரிக்கைகள்
1.1995-2014 வரை தொழிலாளியின் முழுமையான ஊதியத்திலிருந்து 8.33% பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி 50% ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.
டிரஸ்ட் மூலம் நடத்தப்படும் வருங்கால வைப்புநிதி சந்தாதார ர்களுக்கும் உயர்த்தியுள்ள ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். 2.1.09.2014 க்கு பிறகு ஓய்வு பெற்ற தொழிலாளிக்கும் முழுமையான ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

பல மாநிலங்களில் இருக்கும் இதே தன்மையுள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி விசாரணையைத் துவக்க வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: