திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் கிறிஸ்துவ வழிபாட்டுத்தளங்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது வழக்கு போடச் சொன்ன சிபிஎம் தலைவர்கள் மீது வழக்கு போட காவல்த்துறை அதிகாரிகள் முயற்சிப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது தொடர்பாக கட்சியின் மாவட்டக்குழு செயலாளர் என்.பாண்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியம் தேவதாகுடிவலசு. இந்த ஊரில் கடந்த 3ம் தேதி இந்தியன் பெந்தகொஸ்தே சபையின் போதகர் சாலமன்ராஜா என்பவர் இங்குள்ள வழிபாட்டு தளத்தில் ஜெபம் செய்து கொண்டிருந்தார். அப்போது பாஜகவின் ஒன்றியச் செயலாளர் பூலாம்பட்டி கருப்புசாமி தலைமையில் 20 பேர் கொண்ட காவிக்கும்பல் போதகர்;சாலமன் ராஜாவை தாக்கி காயப்படுத்தினர். மேலும் கழுத்தில் மாலையை போட்டு நெற்றியில் பொட்டு வைத்து நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர்.

இதே போல் தொப்பம்பட்டி மெயின்ரோட்டில் உள்ள சின்னப்பன் வீட்டில் ஜெபம் செய்து கொண்டிருந்த சேத் என்ற போதகரையும் காயப்படுத்தி உள்ளனர். அங்குள்ள இமானுவேல் ஜெபவீட்டைச் சேர்ந்த போதகர் பாரதி ஜெபம் செய்து கொண்டிருந்த போது அவரையும் தாக்கியதோடு ஜெபவீட்டு தட்டியையும் உடைத்து அங்குள்ள கிறிஸ்துவ குடும்ப பெண்களையும் மிரட்டியுள்ளனர். இதில் காயமடைந்த சாலமன்ராஜா,சேத், ஆகியோர் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போதகர் பாரதி கீரனூர் காவல்நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட கீரனூர் காவல் ஆய்வாளர் பரமசிவம், மனு ரசீதாக பதிந்து கொடுத்துவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதகர்களிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொண்டார்.

ஆனால் கொடுக்கப்பட்ட புகாரின் மீதும், பெற்ற வாக்குமூலத்தின் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மறுநாள் 4.12.2017 அன்று பாதிக்கப்பட்ட புகார்தாரர்கள் பாரதி மற்றும் குடும்பத்தினரை சிபிஎம் தலைவர்கள் அருள்செல்வன், ராமசாமி, கமலக்கண்ணன், ஆகியோர் உடன்சென்று பழனி காவல் துணைக் கண்காணிப்பாளரைச் சந்தித்து வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன் பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மக்கள் ஒற்றுமை மத ஒற்றுமையை வலியுறுத்தியும் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அனைத்து கட்சிகள் சார்பாக 7.12.2017 அன்று தொப்பம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்நின்று நடத்திய சிபிஎம் தலைவர்கள் அருள்செல்வன், ராமசாமி, கமலக்கண்ணன். அங்கமுத்து, ஆகியோர்கள் மீது கீரனூர் காவல்நிலையத்தில் குற்ற எண்.288-2017 பிரிவு 107 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பழனி சார் ஆட்சியர் முன்பு ஆஜராகி ஒரு லட்சம் பிணை முறிவு பத்திரம் இயற்ற வேண்டும் என நிபந்தனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சொந்த வீடுகளில் அமைதியான முறையில் வழிபாடு செய்த போதகர்கள் மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்தியதோடு நீ இந்துவாக மட்டுமே இருக்க வேண்டும் என மிரட்டி அவர்களது குடும்பத்தினரை மிரட்டி அச்சுறுத்திய பாஜக தொப்பம்பட்டி ஒன்றியச் செயலாளர் கருப்புசாமி மற்றும் 20 பேர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்த்துறை மதஒற்றுமையை வலியுறுத்தி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைதியான முறையில் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மீது வழக்குபதிவு செய்த காவல் துறையின் நடவடிக்கை கண்டனத்துக்கு உரியது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசையும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தையும் கடசியின் மாவட்டக்குழு கேட்டுக்கொள்கிறது.

Leave A Reply

%d bloggers like this: