ஒக்கி புயல் பாதிப்புகளுக்கான நிவாரணமாக கேரள அரசு ரூ.1843 கோடி மத்திய அரசிடம் கேட்டுள்ளது. புதுதில்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை சனியன்று சந்தித்தார். அப்போது இக்கோரிக்கையை அவர் வைத்துள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன் புயல் நிவாரணமாக ரூ.1843கோடி மத்திய அரசிடம் கேட்டிருப்பதாகவும், அதில் ரூ.300 கோடி உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட உடனடியாக உயர் அதிகாரிகளை அனுப்பி வைப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாகவும் முதல்வர் தெரிவித்தார்.புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை புனரமைக்க உலக வங்கி உதவி உட்பட தேவைகள் குறித்து உள்துறை அமைச்சர் சாதகமான வாக்குறுதி அளித்துள்ளார்.

கடலில் செல்லும் தொழிலாளர்களுக்கு ஆபத்துக்காலத்தில் தேவையான தகவல்களை அளிக்கவும், உதவவும் நிதி மற்றும் உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கேட்டுள்ளதாக தெரிவித்தார்.கேரளத்தில் வீடும் நிலமும் இழந்த நிலையில் 13 ஆயிரத்து 436 மீன் தொழிலாளர்கள் உள்ளனர். நிலம் உள்ள 4148 பேருக்கு வீடில்லை. இவர்களுக்கு வீடு கட்டித்தர பிரதமர் வீடு கட்டும் திட்டம் 2018-19இல் மத்திய அரசு உதவ வேண்டும். மத்திய அரசின் ஏஜென்சிகளும், மாநில அரசும் நடத்திய மீட்பு பணிகளுக்கான செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்றார்.

காணாமல் போனவர்களை தேடும் பணி மேலும் 10 நாட்களுக்கு தொடர வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் விடுத்த கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார். கடலின் உட்பகுதிகளில் மனித உடல்கள் மிதப்பதாக காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க அருகில் உள்ள நாடுகளின் உதவியும் நாடப்பட்டுள்ளது. 23 கப்பல் எட்டு ஹெலிகாப்டர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளன. தேடுதலில் மீன் தொழிலாளர்களையும் உடன் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆழ்கடலில் தேடும் பணியில் விமானங்களும் ஈடுபட உள்ளன. படைப்பிரிவினர் இதுவரை 3 ஆயிரத்து 800 மணி நேரம் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். வர்த்தக கப்பல்களும் இப்பணியில் ஈடுபடும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

Leave A Reply