ரஷ்யபுரட்சி உலக சரித்திரத்தின் ஓர் புதுமை; உலகில் இத்தகைய புரட்சி தோன்றியது இதுவே முதல்முறை. ருஷ்யபுரட்சி உலக நாடுகளுக்கு ஓர் அறைகூவல்; உலகில் உள்ள புரட்சியாளர்களுக்கு ஓர் உந்துசக்தி. ரஷ்ய புரட்சியைப் பற்றி ஜவஹர்லால் நேரு கூறுகிறார்: “ரஷ்யாவின் பொருளியல், சரித்திர நிலைமைகள் என்னும் மரத்திலே, புரட்சியானது பூத்துக்காய்த்தது; மகாயுத்தத்தினால் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட மகத்தான கஷ்ட நஷ்டங்கள், அக்காயை கனிவித்தன; பேரறிஞரும், புரட்சி மேதையுமாகிய லெனின் என்னும் தோட்டக்காரர், அக்கனியை பக்குவமறிந்து பறித்து ரஷ்யர் கையில் கொடுத்தார்.

1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் உண்மையிலேயே இரண்டு புரட்சிகள் நடந்தன. ஒன்று மார்ச் புரட்சி; இன்னொன்று நவம்பர் புரட்சி. இவைகளை இருவேறு புரட்சிகளாக கொள்ளக்கூடாது. மார்ச் தொடங்கி நவம்பர் வரையில், தொடர்ச்சியாக நடைபெற்ற புரட்சியாக கொள்ள வேண்டும். 1905 ஆம் ஆண்டு புரட்சியை ஜார் அரசு அடக்கிய பின், மார்க்சியவாதிகளும், போல்ஷ்விக் கட்சியினரும் தண்டனை பெற்று சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். ஆனால், இவர்கள் சும்மா இருந்துவிடவில்லை. லெனின் தலைமையில் புரட்சிப் பிரச்சாரத்தை விடாமல் நடத்தினர். இவர்கள் அனைவரும் மார்க்சியத்தில் உறுதிமிக்க நம்பிக்கை கொண்டனர். ரஷ்யாவின் அப்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப மார்க்சியத்தின் அடிப்படை தத்துவங்களை, பொறுத்தும் வேலையில் லெனின் முனைந்தார்; நிறைய எழுதினார். இது ரஷ்ய மக்கள் மத்தியில் வாதப் பிரதிவாதங்களை எழுப்பியது. இந்த வாதப் பிரதிவாதங்கள் ரஷ்ய மக்களை புரட்சிக்கு தயார்படுத்தும் சிந்தனைக் களத்தை உருவாக்கியது.

“ஒரு காரியத்தை திருத்தமாகச் செய்து முடிப்பதற்கு வெறும் உற்சாகம் மட்டும் போதாது; அதில் தேர்ந்த நிபுணத்துவம் வேண்டும்” என்பார் லெனின். மேலும், “ஒரு புரட்சியை நடத்த முற்படுவோர், அதற்குரிய முழு பயிற்சியையும் பெற்றவர்களாக இருக்க வேண்டும்; செயலுக்குரிய காலம் வரும்போது, அவர்களுக்கு தாங்கள் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி, எந்தவிதமான சந்தேகமோ, மயக்கமோ இருக்கக்கூடாது; இன்ன சமயத்தில், இன்னதுசெய்ய வேண்டும் என்பதை இவர்கள் தெளிவாக உணர்ந்திருக்க வேண்டும்” என்கிறார் லெனின். 1905 ஆம் வருடத்தில் புரட்சி தோற்றுப் போனதால், லெனினும், போல்ஷ்விக் கட்சியும் சோர்ந்து போகவில்லை; அவர்கள் அக்காலங்களை நன்கு பயன்படுத்திக் கொண்டு, வரப்போகிற 1917 ஆம் ஆண்டு புரட்சிக்கு தங்களை மிகவும் சரியாக நிலைநிலைநிறுத்திக் கொண்டார்கள்.

1917 நவம்பர் 7, புரட்சிக்கு முன், மார்ச் மாதம் ஏற்பட்ட புரட்சி, சற்றும் எதிர்பாராதவிதத்தில், எவருடைய சரியான தூண்டுதலும் இன்றி, தானாகவே தோன்றியது. ரஷ்ய தொழிலாளி வர்க்கத்தின் நீண்டநாள் வேதனையின் வெளிப்பாடாக இப்புரட்சி நடந்தது. தலைவர்கள் திட்டமிட்டு நடத்திய புரட்சியல்ல இது. யாதொரு திட்டமோ, யாதொரு தலைமையோ இல்லாமல், துன்புறுத்தப்பட்ட தொழிலாளி வர்க்கம் கிளர்ந்தெழுந்து நடத்திய புரட்சி இது. யாரும் சற்றும் எதிர்பாராமல் நடந்த இப்புரட்சியைக் கண்டு போல்ஷ்விக் கட்சியே திகைத்து நின்றது. அவர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை; தோன்றிய புரட்சியை நிறுத்தவோ, எவ்வகை திசை வழியில் புரட்சியை கொண்டு செல்வதென்றோ புரியவில்லை. புரட்சியை மக்கள் தாங்களாகவே நடத்துகிறார்கள். அப்போது லெனினும், பிற போல்ஷ்விக் தலைவர்களும் சிறைச்சாலைகளிலும், வெளிநாடுகளிலும் இருந்தனர். இருப்பினும், லெனினிடம் பயிற்சிபெற்ற பல தொண்டர்கள் அப்புரட்சிக்களத்தில் இருந்தனர். பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றிய, ஊர் பெயர் தெரியாத பல தொண்டர்கள் அப்புரட்சியை வழிநடத்தினர்.

பஞ்சாலைகளில் வேலை செய்த பெண்கள், வேலையை நிறுத்திவிட்டு, வீதிக்கு வந்து போராடினார்கள். இதையறிந்த ஆண் தொழிலாளர்களும் சாரை சாரையாக வீதிக்கு வந்தனர். “ஜார் மன்னனின் யதேச்சதிகாரம் ஒழிக! சோறு வேண்டும்!” என்கிற மக்களின் கோஷம் வீதியெங்கும் எதிரொலித்தது. ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளர்களை அடக்க ஜார் ஆட்சி படைகளை ஏவிவிட்டது. ஜார் ஆட்சியின் அடக்குமுறை கருவியாக இதுகாறும் இருந்த படைகள், தற்போது, போராடிய தொழிலாளர்கள் மீது நேசமாக நடந்து கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களை பிடித்து தள்ளினார்களேயொழிய, சுடவோ அல்லது கடுமையாக நடந்து கொள்ளவோ இல்லை. ஜாரின் படைகளுக்கும், போராடிய தொழிலாளர்களுக்கும் நேச உறவு இருப்பினும், ஜாரின் போலீஸ்காரர்கள் போராடிய தொழிலாளர்களை சுட ஆரம்பித்தனர். ஜாரின் படைகள் என்ன செய்தது தெரியுமா? தொழிலாளர்களை சுட்ட போலீஸ்காரர்களை ஜாரின் படைகள் சுட்டுத்தள்ளினர். இது போராடிய தொழிலாளர்களுக்கு இன்னும் ஊக்கத்தைத் தந்தது.

தொழிலாளர்கள் வீதிக்கு வந்து போராடினாலும், கிராமப்புற விவசாயிகள் பார்வையாளர்களாகவே இருந்தார்கள். அவர்கள் புரட்சியை விரும்பவில்லை. அவர்கள் விரும்பியதெல்லாம், ஒன்று நிலம் அவர்களுக்கு சொந்தமாக்கப்பட வேண்டும்; போராட்டம் கூடாது; இரண்டு சமாதானம் வேண்டும் என்பதே. இந்நிலையில், ஜார் மன்னனின் நிலை என்னவாக இருந்தது. ஜார் முக்கிய நகரமான பெட்ரோகிரேடில் இல்லை. வேறு ஒரு சிறு நகரில் இருந்தான். அதுமட்டுமல்ல, ஜார் மன்னன் ரஷ்ய அரங்கிலிருந்து பின்னர், மறைந்தும் போனான். இப்பேர்ப்பட்ட ஜாரின் மறைவு குறித்து, மக்கள் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. இந்நிலையில், ஜார் மீண்டும் பெட்ரோகிரேட் நகருக்கு திரும்பிவர முயன்றான். ஆனால், அவன் சென்ற ரயிலை ரயில்வே தொழிலாளர்கள் பாதியில் நிறுத்திவிட்டனர். அப்போது ஜாரின் மனைவி பெட்ரோகிரேட் நகரில் இருந்தாள். அங்கிருந்து ஜாருக்கு ஒரு தந்தி அனுப்பினாள். அந்த தந்தி, தந்தி ஆபீசியிலிருந்து அவளுக்கே திரும்பிவந்துவிட்டது. அந்த தந்தியில் பென்சிலால் எழுதப்பட்ட ஒரு குறிப்பு இருந்தது. அந்த குறிப்பில், “விலாசதார் இருப்பிடம் தெரியவில்லை” என்று எழுதியிருந்தது. இப்படி நிகழுமென்று சர்வ வல்லமை படைத்த ஜார் மன்னன் நினைத்திருக்கவேமாட்டான்.

பிரபுக்களும், பெரிய நிலச்சுவான்தார்களும், மேல் மத்திய வகுப்பாரும் தொழிலாளர்களின் புரட்சியைக் கண்டு நடுங்கினர். இவர்களுக்கு, தொழிலாளர்களிடத்திலும் பயம்; அதே நேரத்தில், ஜார் மன்னனிடமும் பயம் என, இருதலைக் கொள்ளியாய் தவித்தனர். எப்படியாவது இவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும் என எண்ணினர். இந்த சூழலில், ‘சோவியத்’ உருவாக்கப்பட்டது. அதில் தொழிலாளர் பிரதிநிதிகளும், ராணுவ பிரதிநிதிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். தொழிலாளர்களும், ராணுவ வீரர்களும் வெற்றிபெற்றனர். இவர்களுக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. இவர்களுக்கு அரசாங்க அதிகாரம் கிடைத்துவிட்டது. இதைக்கொண்டு என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்துநின்றனர். ‘யார் அதிகாரம் செலுத்துவது?’ என்ற கேள்விக்கு இவர்களிடம் விடைகள் இல்லை. நீண்ட இழுபறிக்குப் பின், ‘டூமா’ என்ற பூர்ஷ்வா அமைப்பு அதிகாரத்தை ஏற்று நடத்தியது. அதிகாரத்தை ஏற்றுக் கொண்ட ‘டூமா’ அரசு, மக்கள் எதிர்பார்த்தபடி இல்லை. ஒரு உதவாக்கரை அரசாக இது இருந்தது. இவ்வரசு மூலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கொண்டிருந்த மக்கள் ஏமாந்துபோனார்கள். மக்களின் பஞ்சமும், பசியும் தொடர்ந்தது. இதற்குத் தானா ஜார் அரசை விரட்டினோம்? என மக்கள் விரக்தியில் ஆழ்ந்தனர்.

இந்த சூழலில் தான், சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த லெனின், ரஷ்யாவிற்கு விரைந்து செல்ல ஆவலுடன் புறப்பட்டார். எப்படி வருவதென்று தெரியவில்லை. ஒரு ரயில் வண்டியின் மூலமாக, ஜெர்மனி நாட்டின் ஆதரவுடன் ரஷ்யா வந்து சேருகிறார் லெனின். ரஷ்ய நாட்டின் எதிரிநாடான ஜெர்மனி, ஏதோ ஒரு சுயநலத்தைக் கருத்தில் கொண்டு, லெனினை தனது நாட்டின் வழியாக செல்ல சம்மதித்தது. இந்த மகாபுரட்சிக்காரர் லெனின், எதிர்காலத்தில் ஐரோப்பாவையும், இந்த உலகையும் ஆட்டி வைக்கப்போகிறார் என்பதை, ஜெர்மனி அந்த நேரத்தில் உணர்ந்து கொள்ளவில்லை தானே! லெனின் மிகவும் தெளிவுபெற்ற அறிவுக்கு சொந்தக்காரர். அய்யம், மயக்கம், திரிபு எதுவுமின்றி சிந்திப்பார். லெனின் கண்களின் கூரிய பார்வை, ஜனங்களின் மனோ நிலையை படம்பிடித்துக் காட்டவல்லது. அவரின் சிந்தித்து தெளிந்த தத்துவ அறிவோ, மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பொருத்தக்கூடிய வல்லமை பெற்றது. ரஷ்ய வந்தடைந்த லெனின் உடனடியாக போல்ஷ்விக் கட்சியை உலுக்கிவிட்டார். போல்ஷ்விக் கட்சியின் கடமை என்னவென்பதை எடுத்துரைத்தார்.

லெனின் பேச்சு, போல்ஷ்விக் கட்சியினரின் மனதில் மின்சாரம் பாய்வது போல் பாய்ந்தன. அவர்களுக்கு புத்துயிரையும், புத்துணர்ச்சியையும் அளித்தது. இதுவரை வழிகாட்டுவதற்கு நல்ல தலைவர் இன்றி தடுமாறிய ரஷ்ய புரட்சிக்கு, தலைவர் கிடைத்துவிட்டார். ஒரு தெளிவற்ற வெற்றிக்காக இதுவரை போராடிய ரஷ்ய மக்கள், லெனின் தலைமைக்குப்பின், ஒரு மகத்தான லட்சியம் பொருந்திய, எதிர்கால வாழ்க்கைக்கு போராட அணிவகுத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.