‘கம்யூனிஸ்ட்டுகள் தொழிலாளிவர்க்கத்தின் உடனடி நோக்கங்கள் நிறைவேறுவதற்காகவும் போராடுகிறார்கள். ஆனால், தற்காலத்திய செயல்பாட்டில் இந்த இயக்கத்தின் எதிர்காலத்தையும் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்து பேணிப் பாதுகாக்கின்றனர். பிரான்சில் கம்யூனிஸ்டுகள் பழமைவாத, தீவிரவாத, முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு எதிராக சமூக ஜனநாயகவாதிகளுடன் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள். ஆனால், மாபெரும் புரட்சியிடமிருந்து மரபு வழியில் வந்துள்ள தொடர்கள் குறித்தும் பிரமைகள் குறித்தும் விமர்சனப் பார்வை கொண்ட ஒரு நிலையை எடுப்பதற்கான உரிமையை விட்டுவிடாமல் தங்களது கையில் வைத்திருக்கிறார்கள்.,

மாமேதைகள் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் எழுதியுள்ள கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் கடைசிப் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை. கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை தொலைதூர இலக்கு, உடனடிக் கடமைகள் என இரண்டையும் நிறைவேற்ற வேண்டியவர்களாக உள்ளனர். தொலைதூர இலக்கு குறித்து கவனத்தில் கொள்ளாமல், உடனடிக் கடமைகளை மட்டுமே நிறைவேற்றுவது அது மட்டுமே போதுமானது என்று கருதுவது பிழையாக முடிந்துவிடும். அதே நேரத்தில் உடனடிக் கடமைகளை நிறைவேற்றும்போதுதான் தொலைதூர இலக்கை நோக்கிய பயணத்தை செம்மையாக நடத்த முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கம்யூனிஸ்ட்டுகளின் உடனடிக் கடமை என்ன என்பதை அந்தந்த நாடுகளின் சூழலுக்கு ஏற்ப காலமும், களமுமே தீர்மானிக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை மக்கள் ஜனநாயகம் மற்றும் சோசலிச சமூக மாற்றத்தை தனது இலக்காக கொண்டுள்ளது. இதற்காகவலிமையான வெகுஜன புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறுகிற போராட்டங்களை இணைக்க வேண்டும் என்றும் தெளிவாக வரையறுத்துள்ளது. (கட்சித்திட்டம் 7.18) மக்கள் ஜனநாயகப் புரட்சி எனும் கடமையை நிறைவேற்ற மக்கள் ஜனநாயக அணி அமைப்பது என்பது தொலைநோக்கு திட்டம். இடது ஜனநாயக அணி என்பது அதை அடைவதற்கான அரசியல் நடைமுறை உத்தி. இடது ஜனநாயக அணி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானம் இவ்வாறு கூறுகிறது.

“இடதுஜனநாயக அணிதான் பாஜக, காங்கிரஸ் மற்றும் இதர முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கான உண்மையான மாற்று சக்தியாகும். மக்கள் ஜனநாயக முன்னணிக்காக அணி திரட்டப்படவேண்டிய வர்க்கங்களை உள்ளடக்கியதாக இந்த அணி திகழ்கிறது. எனவே, தேர்தலை சந்திப்பதற்கோ அல்லது ஒரு அமை ச்சரவையை உருவாக்குவதற்கோ பயன்படும் தேர்தல் கால கூட்டணியாக மட்டும் இது இருக்க முடியாது”. இடது ஜனநாயக அணி என்பது தேர்தல் காலத்தில் உருவாக்கப்படுகிற கட்சிகளின் கூட்டணி அல்ல. மாறாக அது ஒரு வர்க்கக் கூட்டணி என்பது இதன் மூலம் தெளிவாகும். இடது ஜனநாயக அணியில் இடம்பெற வேண்டிய சக்திகள் எவை என கண்டறிவது? இடது ஜனநாயக அணிக்கான திட்டம், இடது ஜனநாயக அணியை கட்டுவதற்கான பிரச்சாரங்கள், இயக்கங்கள், போராட்டங்கள் ஆகிய கடமைகளை நிறைவேற்ற சுயேச்சையாக செயல்படக் கூடிய கட்சியை உருவாக்க வேண்டியது அவசியம் என்பதையும் 21 ஆவது அகில இந்திய மாநாடு அழுத்தமாக வலியுறுத்துகிறது.

அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் வலுவான கட்சியை கட்டுவதன் மூலமே இடது ஜனநாயக அணியை உருவாக்கிட முடியும். தேர்தல் காலங்களில் எழுகிற சூழலுக்கு ஏற்ப, பிரதான எதிரி யார் என்ற துல்லியமான, எதார்த்தமான மதிப்பீட்டின் அடிப்படையில் செய்து கொள்ளப்படுகிற தொகுதி உடன்பாடு என்பது வேறு, இடது ஜனநாயக அணியை கட்டுவது என்பது வேறு. ‘இடதுசாரி மற்றும் ஜனநாயக கட்சிகளின் பொது வான கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்களை ஈர்க்கும்போதுதான் செயல்படக்கூடிய இடது ஜனநாயக அணி என்பது சாத்தியமாகும்.’ (சிபிஐ(எம்) 21ஆவது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானம்) அவ்வப்போது, அரசியல் தேவையை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் அணியோடு, இடது ஜனநாயக அணியைப் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. கட்சியின் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத பகுதி இடது ஜனநாயக அணியை கட்டுவது என்பது. அதை ஒரு தொலைதூர இலக்கு என்றோ, பிரச்சார முழக்கம் என்றோ கருதி அந்தப் பணியை தள்ளி வைத்து விடக்கூடாது என்றே கட்சி ஆவணங்கள் அனைத்தும் வலியுறுத்துகின்றன.

வர்க்கச் சேர்மானத்தை வலுப்படுத்துவது, தொழி லாளர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் ஆகிய அனைத்துத் தரப்பு மக்களின் போராட்டங்களை வலுவாக முன்னெடுப்பது, அதன் மூலம் கிடைக்கும் செல்வாக்கை அரசியல் ஆக்குவது, போராட்டத்தால் ஈர்க்கப்படும் வெகு மக்களுக்கு வர்க்க உணர்வூட்டி, அமைப்பாக அணிதிரட்டுவது, கட்சிக்குள் கொண்டு வருவது, இடதுசாரி கருத்தியலை நிலை பெறச் செய்வதற்கான போராட்டத்தை தத்துவத் தளத்திலும் அயர்வின்றி நடத்துவது என பன்முகப்பட்ட பணி ஆகும் இடது ஜனநாயக அணியை உருவாக்கி வளர்ப்பது என்பது. இது ஒரே நாளில் முடிந்துவிடுவது அல்ல. அதே நேரத்தில், இப்போது செய்ய வேண்டிய பணி அல்ல என்று ஒதுக்கி வைக்கப்படுவது அல்ல. கட்சியின் அனைத்துப் பணிகளிலும், போராட்டங்களிலும், வெகுஜன இயக்கங்களிலும் அடிநாதமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

நாடாளுமன்ற அமைப்பில் பங்கேற்பதன் மூலம் மட்டுமே தொழிலாளர் வர்க்க கட்சியை திறம்பட நடத்த முடியாது. வர்க்க ரீதியான அணி திரட்டல் என்பது அவசியம். அதே நேரத்தில், நாடாளுமன்ற அமைப்புக் குள் பங்கேற்பதன் மூலம் தொழிலாளர் வர்க்க நலன் களுக்கான போராட்டத்தை நடத்த வேண்டியதன் தேவையையும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. இதுகுறித்து கட்சித்திட்டம் இவ்வாறு கூறுகிறது. ‘இந்தியாவில் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் வடிவமாக இருந்தாலும் மக்களின் முன்னேற்றத்திற்கான ஒரு அங்கமாக உள்ளது. மக்கள் தங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கும், அரசு விவகாரங்களில் ஓரளவு தலையிடுவ தற்கும் ஜனநாயகம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான போராட்டங்களை நடத்துவதற்கும் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை சில வாய்ப்புகளை வழங்குகிறது. (கட்சித்திட்டம் 5.22) தற்போது மத்திய ஆட்சியதிகாரத்தில் அமர்ந்துள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவான பாஜக. தற்போதைய நாடாளுமன்ற முறையை முற்றாகமாற்றியமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதமராக உள்ள மோடி நாடாளுமன்றத்திற்கு வருவதையும், விவாதங்களுக்கு பதிலளிப்பதையும் கவுரவக் குறைவாக கருதுகிறார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அரசியல் சாசனத்தை திருத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அரசியல் சாசனத்தின் அடிநாத மாக உள்ள மதச்சார்பின்மை, கூட்டாட்சி, ஜனநாயகம் போன்றவை ஆர்எஸ்எஸ் ஒளித்து வைத்திருக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு நேரெதிராக உள்ளன. மாநிலங்களின் அதிகாரங்கள் வெட்டிச்சுருக்கப்பட்டு அதிகாரங்கள் குவிக்கப்பட்ட மைய அரசு, பலவீனமான மாநில அரசுகள் என்பதே அவர்களது விருப்பம்; அதை கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. இது எதேச்சதிகார தன்மை கொண்டதாகும். இத்தகைய மிரட்டல்களை முறியடிக்க வேண்டியதும் அவசியமாகும். ‘சீர்குலைவுத் தன்மை கொண்ட இந்துத்துவா திட்டத்தை பல்வேறு தளங்களில் அமல்படுத்தி இந்திய குடியரசின் இறையாண்மையையும் ஜனநாயகத்தையும் கேள்விக்குறியாக மாற்றும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 ஆவது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானம் எச்சரிக்கிறது. இதை எதிர்கொள்ள மிகப்பரந்த அளவில் ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் அணிதிரட்டப்பட வேண்டுமென்றும் அரசியல் துறையில் மட்டுமல்லாது தத்துவார்த்த, சமூக, கலாச்சார, கல்வித்துறைகளிலும் ஆர்எஸ்எஸ் – பாஜக கூட்டணிக்கெதிரான போராட்ட உத்திகளுக்கு அழுத்தமான வடிவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த தீர்மானம் தெளிவாகக் கூறியுள்ளது.

மதவெறி சக்திகளுக்கெதிரான போராட்டம் நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளுக்கெதிரான போராட்டத்துடன் பொருத்தமான புள்ளியில் இணைக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் பல்வேறு ஆவணங்களில் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பு, நவீன தாராளமயமாக்கல் எதிர்ப்பு, மதவெறி எதிர்ப்பு என மும்முனைப் போராட்டங்களை ஒன்றிணைத்து நடத்துவது இன்றைய சூழலில் அவசியமாகும். இடதுஜனநாயக அணியில் இருக்க வேண்டிய வர்க்கங்களில் பெரும்பகுதியினர் தற்போது, முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகளின் பின்னால் உள்ளனர். இவர்களை வென்றெடுக்க வேண்டியது அவசியமாகும். இடது ஜனநாயக அணியை கட்டுவதற்கான போராட்டம்வர்க்கச் சமன்பாட்டில் ஒரு மாற்றத்தைகொண்டு வருவதற்கே ஆகும். மக்கள் இரண்டுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்தாகவேண்டும் என்ற இருப்பில் உள்ள அமைப்பின் வரையறைக்குள் சிறைப்பட்டிருக்கும் நிலையை மாற்றுவதற்கு நாம் எடுத்துவரும் கடும் முயற்சியும் ஒரு பகுதியாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10 ஆவது அகில இந்திய மாநாட்டு தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. தமிழகத்தில் பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளின் ஆதிக்கம் நிலவும் சூழலை கருத்தில் கொண்டுஅடிப்படை வர்க்கங்களை திரட்டும் முயற்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

தமிழகத்திலும் அதற்கான பொருத்தமான வியூகம் உருவாக்கப்பட வேண்டும். அது இடது ஜனநாயக திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். தேசிய, பிராந்திய, முதலாளித்துவக் கட்சிகள் கடைப்பிடிக்கும் கொள்கைகளுக்கு அடிப்படையிலேயே வேறுபட்ட இடதுமாற்று அடிப்படையானதாகும். இது தொலைதூர இலக்கு என்று கருதப்பட்டதால் போதிய அழுத்தம் தரப்படவில்லை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 ஆவது மாநில மாநாட்டு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அனைத்திற்கும் அடிப்படையாக விளங்குவது சுயேச்சையான, உயிர்த்துடிப்புள்ள மக்களுடன் நெருக்கமான பிணைப்பினை கொண்டுள்ள கட்சி ஸ்தாபனமாகும். ஒருவர்க்க கட்சி என்கிற முறையில் இடது ஜனநாயக மாற்றை முன்வைத்து பணியாற்றுவதும் முன்னேறுவதும் அவசியமாகிறது. இடது ஜனநாயக மாற்று என்பது தொலைதூர வெளிச்சமல்ல. நம் கையில் எப்போதும் இருக்க வேண்டிய விளக்கு.

Leave A Reply