திருவில்லிபுத்தூர், டிச.10-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் 22ஆவது மாவட்ட மாநாடு திருவில்லிபுத்தூரில் டிச.,9-11 வரை நடைபெறுகிறது. இந்நிலையில் ஞாயிறன்று காலை 2 ஆம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. குழு விவாதம் மற்றும் பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது. வரவு-செலவு தகவல் அறிக்கையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன் சமர்ப்பித்தார்.

மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், ஒரு சவாலான காலகட்டத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம். மதவெறி சக்திகளை எதிர்க்க, தத்துவார்த்த, பண்பாட்டு, பொருளாதார தளத்தில் எதிர்கொள்ள பிற அமைப்புகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பிஜேபி இக்காலத்தில் சாதிய அமைப்புகளை திரட்டி பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. நாம், முற்போக்கு எண்ணம் கொண்டவர்களையும், உழைக்கும் மக்களையும் ஒருங்கிணைத்து போராடினால் அவர்களை பின்னுக்கு தள்ள முடியும் என்றார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது தொடக்கவுரையில் கூறுகையில்: பிஜேபி ஆட்சி மக்கள்விரோத ஆட்சியாகும். எனவே, பசு பாதுகாப்பு, மாட்டுக்கறி உண்ணத் தடை எனக் கூறுகின்றனர். உண்மையில் பசுமேல் பக்தி கிடையாது. கேரள மக்கள் அந்த உணவை விரும்பி உண்ணுவார்கள். பீப் ரெடி என கடைகளில் பலகையில் எழுதப்பட்டிருக்கும்.

2004இல் சுனாமி ஆழிப்பேரலையால் ஆயிரக் கணக்கான மீனவ மக்கள் மாண்டு போனார்கள். தற்போது ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் மீண்டும் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை. தற்போது வரை 75 கிராமங்களில் மின்சாரம் இல்லை. எனவே, அங்குள்ள மக்கள், எங்களை கேரளாவிற்கே அனுப்பி விடுங்கள் என போராடுகின்றனர். தமிழகத்தில் பிஜேபியின் பினாமி ஆட்சி நடைபெறுகிறது. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்கியுள்ளது. தமிழக அரசுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. ஊழலின் உச்சகட்டமாக தமிழகம் மாறியுள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.