திண்டுக்கல்.டிச.10-
தனியார் பள்ளிகளில் சிறந்த கல்வி கற்பிக்கிறார்கள் என்பது மாயை என்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ச.மோசஸ் கூறினார். திண்டுக்கல்லில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது:-குழந்தைகளை நான்கு சுவர்களுக்கு அப்பால் அழைத்துச் சென்று பயிற்றுவிக்க வேண்டும். வகுப்பறையில் அடைத்து வைக்கக் கூடாது. இந்தச்சமூகத்தின் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் கல்வி வகுப்பறைக்கு வெளியே தான் உள்ளது. உடல் அளவிலும், மனதளவிலும் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. அத்தகைய கல்வி வேண்டும். தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறைவாக இருப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளது. அதற்கு அரசு தான் காரணம். திண்டுக்கல் எஸ்.எம்.பி. பள்ளி போன்ற தனியார் பள்ளிகளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அது ஆறுதலாக உள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மிகப்பெரிய சவால்களை எதிர்நோக்கி உள்ளனர். தன் பிள்ளை சூ போட்டு மஞ்சள் பஸ்சில் ஏறிச்சென்று ஆங்கில வழிக்கல்வியில் பயின்றால் அறிவாளியாகிவிடுவான் என்று பெற்றோர்கள் நம்புகிறார்கள். அது ஒரு மாயை என்று தான் சொல்வேன். தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வியை தருவதற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து முயன்று வருகிறார்கள். அந்தச் சவாலில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வெற்றி பெறுவார்கள்.

ஜான் பிரிட்டோ:
மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜான் பிரிட்டோ பேசும்போது,நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் நாட்டு நலப் பணி திட்டத்தில் சேர்ந்து சேவையாற்றினேன். அப்போது பேராசிரியர் ஆர்.மனோகரன் எங்களை நத்தம் தாலுகாவில் உள்ள மேல இலந்தைகுளத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது அந்தக் கிராமத்தில் வாழ்ந்த பெண்கள் மேலாடை இல்லாமல் இருந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இந்திய நாடுசுதந்திரம் அடைந்துவிட்டது என்றார்கள். ஆனால் இன்னும் இந்தக் கிராமத்தில் பெண்கள் ஆடை அணியக்கூட முடியாத அவலநிலையில் உள்ளதை எண்ணிப்பார்த்து வேதனைப்பட்டேன். பிறகு நான் சமூக மாற்றத்திற்கான பிரச்சாரங்களில் ஈடுபடத் தொடங்கினேன். இதே போல் திருச்சி அருகேயுள்ள இனாம் குளத்தூர் என்ற ஊருக்குச் சென்றோம். அங்கு ஒரு பெரியவர் வீட்டில் தங்கினோம். அப்போது அந்தப் பெரியவர் சொன்னார். எக்காரணம் கொண்டும் பக்கத்தில் வசிக்கும் மக்கள் பக்கம் போய்விடாதீர்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த உறவும் இல்லை என்று கூறினார். திருச்சி மாநகராட்சிக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் இத்தகைய தீண்டாமை போக்கை அப்போது தான் கேள்விப்பட்டேன் வேதனையடைந்தேன்.

மேலும் பள்ளிகளில் மாணவர்கள் பலவிதமான சிந்தனைகளுடன் வருகிறார்கள். அந்தக் குழந்தைகளின் மனதில் ஆயிரம் கேள்விகள் உள்ளன. ஆசிரியர் என்பவர் குழந்தைகளின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய வேண்டும். குடும்பச் சூழல் சரியில்லாத நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வகுப்பறைகளில் வந்து அமர்ந்திருப்பார்கள். ஆசிரியர்கள் அந்தக் குழந்தைகளை கவனமாக அணுகி பயிற்றுவித்தால் அந்தக் குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். இவ்வாறு த.ஜான்பிரிட்டோ பேசினார்.

கல்வியாளர் எஸ்.பி.டி.கனகசபை:
ஒவ்வொரு புத்தகமும் உங்கள் வாழ்க்கையை மாற்றி விடும். சத்திய சோதனை படித்த பிறகு என் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. இன்றைய மாணவர்களின் கல்வி தாகத்தைத் தீர்க்க நாம் புதிய புதிய பாடத்திட்டங்களை கொண்டுவர வேண்டும். குழந்தைகளின் தேடலுக்கு நாம் வாய்ப்பு தர வேண்டும். அறிவை வளர்க்கப் பல காரணிகள் இருக்கலாம். அதில் முதல் காரணியாக புத்தகம் தான் உள்ளது.

முனைவர் சரவணன் :
ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது என்று விவேகானந்தர் சொன்னார். நூல்கள் படிப்பதனால் அப்படி சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறதா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. குற்றங்கள் நாட்டில் பெருகிக்கொண்டே போகின்றன. அதனைப் பார்க்கும் போது இன்னும் வாசிப்பு இயக்கத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. மதிப்பெண் கல்வி பெற்றவர்கள் சாதித்தவர்களா? மதிப்புமிக்க கல்வியை பெற்றவர்கள் சாதித்தவர்களா? என்று கேட்டால் மதிப்புமிக்க கல்வியை கற்றவர்களே சாதனையாளர்களாக விளங்குகிறார்கள்.

நூல் வெளியீடு;
கருத்தரங்கில் எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் பள்ளி தாளாளர் எஸ்.பி.டி.கனகசபை எழுதிய ‘மாணவர்களை உருவாக்குதல்- கல்வி’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. மாவட்ட உதவிதிட்ட அலுவலர் த.ஜான்பிரிட்டோ வெளியிட இலக்கிய களத்தின் தலைவர் முனைவர் குருவம்மாள் பெற்றுக்கொண்டார். இந்தக் கருத்தரங்கிற்கு இலக்கிய களத்தின் இணைச் செயலாளர் முனைவர் மு.சரவணன் தலைமை வகித்தார். கோ. குமரவேல் வரவேற்றார். பழனி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மு.பழனிச்சாமி.முன்னிலை வகித்தார். இலக்கிய களத்தின் தலைவர் முனைவர் மு.குருவம்மாள். வித்யாபார்த்தி மேல்நிலைப்பள்ளி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: